”போராட்டம் நடத்துறவனெல்லாம் ரவுடியா?” –  ரவுடி பட்டியல் சர்ச்சையும் போலீசு விளக்கமும் !

0

”போராட்டம் நடத்துறவனெல்லாம் ரவுடியா?” –  ரவுடி பட்டியல் சர்ச்சையும் போலீசு விளக்கமும் !

”சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராகவும், கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் ரவுடி பட்டியலில் சேர்த்து குற்றப்பதிவேடு உருவாக்கியிருப்பதோடு, சட்டப்படிப்பை முடித்தும் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாதபடிக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார்கள்…” என கரூர் போலீசார் மீது குற்றஞ்சாட்டுகிறார்,

https://businesstrichy.com/the-royal-mahal/

சண்முகம் - சமூக ஆர்வலர்
சண்முகம் – சமூக ஆர்வலர்

கரூரைச் சேர்ந்த ந.சண்முகம் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், கந்துவட்டிக்கு எதிரான கூட்டமைப்பின் பொறுப்பாளருமாக இருந்து வருகிறார். இவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், இரா.சா.முகிலன் போன்றோருடன் இணைந்து கரூர் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும் சட்டவிரோத கனிமக்கொள்ளை சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருபவர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கரூர் ந.சண்முகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களின் தொடர்ச்சியான புகார்கள், நீதிமன்ற வழக்கு, போராட்டங்களைத் தொடர்ந்துதான், கரூரில் இயங்கும் கல்குவாரிகளில் டிஜிட்டல் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது, என்பதும்; திருச்சி திருவரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியின் கல்குவாரிகளுக்கு 42 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியிலிருந்தே, ந.சண்முகம் மீதான போலீசு நடவடிக்கைகளும், போலீசார் மீது சண்முகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. போலீசாரின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எப்படி கூறுகிறீர்கள்?” என்ற கேள்வியை, கரூர் ந.சண்முகத்திடம் முன் வைத்தோம்.

போக்கிரி பட்டியல் தயார் செய்ய கடிதம்
போக்கிரி பட்டியல் தயார் செய்ய கடிதம்

”கனிமவளக்கொள்ளை, கந்துவட்டி பிரச்சினைனு இல்லை, என் கவனத்திற்கு வரும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை விடாப்பிடியாக நிற்பேன். எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்கலையா? இன்ஸ்பெக்டர் கிட்ட முறையிடுவேன். அவரும் சரியில்லையா? அடுத்து டி.எஸ்.பி., எஸ்.பி., சரக டி.ஐ.ஜி., தமிழக டி.ஐ.ஜி. வரைக்கும் கவனத்துக்கு கொண்டு போயிடுவேன். ஒரு சாதாரண குடிமகனாக இருந்துகொண்டே, இவ்வளவு குடைச்சல் கொடுக்கிறானே, இவன் பி.எல். முடிச்சு வக்கீல்னு பதிவு பன்னிட்டா இன்னும் எவ்வளவு பன்னுவான்? என்கிற ஆத்திரத்திலிருந்து தான் இவ்வாறு செய்கிறார்கள்.” என்கிறார் தடாலடியாக.

உங்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் இருப்பதால்தான், குற்றப்பதிவேடு பராமரிக்கப்படுவதாக போலீசார் கூறுகிறார்களே?

என்மீது வழக்குகள் இருந்தது உண்மை. முதல் விசயம் அவை எல்லாமே, அரசியல் வழக்குகள். அதுவும், தற்போது அந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்தவை. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஜோதிமணி மீதும் கூடத்தான் பல்வேறு அரசியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக, அவர்களுக்கும் ரவுடி குற்றப்பதிவேடு பராமரிக்கிறார்களா? நீதிமன்ற விசாரணையில் இந்த வாதத்தை நானே முன் வைத்திருக்கிறேன்.

அடுத்து, எனக்கு எதிரான 9 வழக்குகள் கொரோனா காலத்தில் எபிடமிக் ஆக்டில் போடப்பட்டவை. முதல்வர் ஸ்டாலின் உத்தரவையடுத்து அவை ரத்து செய்யப்பட்டு விட்டது. எஞ்சிய 3 வழக்குகள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக போடப்பட்ட வழக்குகள். அவையும் வழக்கு நடத்தி முடிவுக்கு வந்தவை.

என்மீது வழக்கே இல்லாத நிலையில், 2022 இல் என் மீது போடப்பட்ட 367/2022 வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அப்படி ஒரு வழக்கு இருக்கிறது என்பது அப்போதுதான் எனக்கே தெரியும். எனக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்துக்குமே போலீசு சொன்ன பிறகுதான் தெரியும். ”எப்.ஐ.ஆர். போட்டு நீங்களே வச்சிப்பீங்களா? உங்களுக்கெல்லாம் காக்கிச்சட்டை சீருடையை யார் கொடுத்தார்கள்?” என்று நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார்.

Karur Police
Karur Police

அடுத்து, கந்துவட்டி கொடுமையால் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை கடந்த 10.08.2021-இல் கரூர் ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை மஹாலில் நடத்தினார்கள். அப்போது எஸ்.பி.யாக இருந்த சுந்தரவடிவேலு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நானும் ஒரு பங்கேற்பாளராக அழைக்கப்பட்டேன். அவர்களது துண்டறிக்கையில் எனது பெயரையும் போட்டிருந்தார்கள்.

அந்தக்கூட்டத்தின் முடிவில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மனுவைக்கூட போலீசார் வாங்க மறுத்தார்கள். அதற்காக, வந்திருந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு நான்தான் காரணம் என்று என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், இந்த சம்பவத்தையடுத்து தான், என்மீது ரவுடி குற்றப்பதிவேட்டையே உருவாக்கியிருக்கிறார்கள். மேற்கண்ட நிகழ்வில் நான் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும், தொடர்ந்து நான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியூட்டி வருவதாகவும், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், சமூக விரோதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆகவே, ”எதிரியின் மீது போக்கிரி சரித்திர ஏடு” தொடங்க அனுமதிக்கும்படியும் வேண்டி, அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி, எஸ்.பி. சுந்தரவடிவேலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதனடிப்படையில்தான், எனக்கு எதிரான குற்றப்பதிவேடு (H.S. 3/2021) தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதில் காமெடி என்னவென்றால், காலையில் நான் சமூக ஆர்வலர். போலீசின் சிறப்பு அழைப்பாளர். அதே நாள் பிற்பகலுக்குப் பிறகு போக்கிரியாக மாறிவிடுகிறேன். சமூக விரோதிகளுடன் தொடர்புடைய தொடர்ந்து கண்காணிக்கபட வேண்டிய போக்கிரியாக மாறிவிடுகிறேன்

வழக்கு எண் 367/2022 எதற்காக போடப்பட்டது?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2022-இல், சட்டவிரோத கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்துபோனார். போலீசார் விபத்து என வழக்கை முடிக்க  நினைத்தார்கள். கல்குவாரி அதிபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் காயங்களோடு மர்மமான முறையில் இறந்துள்ளார். அதுகுறித்து, முறையான விசாரணை நடத்த வேண்டும். மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென்று அப்போது போராடினோம். விபத்து என்றுதான் வழக்குப்போடுவோம் என பரமத்தி போலீசார் பிடிவாதம் பிடித்த நிலையில், திருச்சி மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் கவனத்திற்கு கொண்டுசென்ற பிறகே, மர்ம மரணம் என்று எஃப்.ஐ.ஆர். போட்டார்கள். அதற்காக, கரூர் அரசு மருத்துவமனையில் ஜெகநாதனின் உடலை வாங்க மறுத்து நான்கு நாட்களாக போராடினோம்.

அப்பொழுதுதான், தான்தோன்றிமலை அருகே, ஏதோ தீவிரவாதியை சுற்றி வளைப்பது போல பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அரவக்குறிச்சி டி.எஸ்.பி. முத்தமிழ்ச்செல்வன்  உள்ளிட்ட போலீசார் வெள்ளை வேனில் வைத்து என்னை கடத்தி சென்றனர். வீட்டிற்கும் தகவல் சொல்ல மறுத்துவிட்டனர். காலை 6 மணிவாக்கில், பிடித்து சென்ற என்னை இரவு 8 மணிக்கு மேல்தான் விடுவித்தனர்.

என்னை போலீசு சிறையில் வைத்துவிட்டு, ஜெகநாதனின் சடலத்தை அவரது உறவினர்களை மிரட்டி வாங்க வைத்து, மயானத்தில் எரியூட்டிவிட்டு அவரது சாம்பலை ஆற்றில் கரைத்துவிட்டனர். அந்த சம்பவத்திற்காகத்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறோம் என்று இப்போது வழக்கு எண் 367/2022 ஐ காட்டுகிறார்கள்.

அமைப்பை வைத்துக்கொண்டு, கல்குவாரி அதிபர்களை மிரட்டி பணம் வசூலித்தீர்கள் என்கிறார்களே?

அப்படி யாரோ புகார் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், யார் கொடுத்தது? எப்போது கொடுத்தார்கள்? எந்த விவரத்தையும் என்னிடமோ, நீதிமன்றத்திலோ இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. ”அந்தப் புகார் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறோம். வங்கி கணக்கை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அதற்குத்தான் நீதிபதி கேட்டார். “புகாரை வைத்துக்கொண்டு எத்தனை மாதம் விசாரிப்பீர்கள்?” என்று. மேலும், “ஒரு புகார் மீது எஃப்.ஐ.ஆர். கூட போடாமல், எப்படி தொடர்ந்து விசாரிப்பீர்கள்? வங்கிக் கணக்கை ஆய்வு செய்வீர்கள்? உங்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்ற வழக்கு என்ன நிலையில் இருக்கிறது?

எடுத்த உடனேயே, நீதிமன்றத்துக்கு எல்லாம் நான் போகலை. பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற போது தான், இந்த விவரமே எனக்கு தெரிய வந்தது. அதன்பிறகு, என் மீதான குற்றப்பதிவேட்டை ரத்து செய்யக்கோரி, எஸ்.பி.சுந்தரவதனம், கரூர் சரக குற்றப்பிரிவு டி.எஸ்.பி.தேவராஜன் ஆகியோரிடம் முறையிட்டேன். அவர் மாறுதலில் சென்றுவிட்டார். எனது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.

முதலில் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன்தான் போட்டேன். எஸ்.பி. சுந்தரவதனம் ஆஜராகி, ஆறுமாதத்திற்கு ஒரு முறை ரிவ்யூ மீட்டிங் நடைபெறும். அடுத்து ஜனவரி – 2023 இல் நடைபெறும்  ரிவ்யூ மீட்டிங்கில் இவரது குற்றப்பதிவேட்டை ரத்து செய்துவிடுகிறோம் என்றார்கள். அதனடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் சொன்னபடி செய்யவில்லை. மீண்டும் நினைவூட்டினேன். முறையான பதிலில்லை. காத்திருப்பதில் பலனில்லை என்றுதான், மார்ச் மாதத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டியதாயிற்று.

முதன் முதலாக, ஏப்-28 இல் வழக்கு வந்தபோது எஸ்.பி. ஆஜராகவில்லை. இன்ஸ்பெக்டர் விதுன்குமார்தான் ஆஜராகி, ஜூன்-06-க்கு வாய்தா வாங்கினார்கள். அடுத்தடுத்து, ஜூன்-12, ஜூன்-22, என தொடர்ந்து எஸ்.பி. ஆஜராகாமல் இன்ஸ்பெக்டரையும் டி.எஸ்.பி. சுகுமாரையும் மட்டும் அனுப்பிவைத்தார். இதில்தான் கடுப்பான நீதிபதி ஜூலை-5 அன்று எஸ்.பி. கட்டாயம் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, எஸ்.பி. ஆஜர் ஆனார். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து, வழக்கை ஜூலை-17-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்.” என்கிறார், ந.சண்முகம்.

போலீசு தரப்பில், இன்ஸ்பெக்டர் விதுன்குமாரிடம் பேசினோம். “அவர் மேல நிறைய வழக்குகள் இருக்கிறது. வழக்கின் தன்மையிலிருந்துதான் அவர்மீது குற்றப்பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அவர் சொல்ற மாதிரி, அரசியல் வழக்குகளுக்காக எல்லாம் போடல. இன்னும் சொல்லப்போனால், அந்த வழக்குகளையெல்லாம் ஜி.ஓ.வ பேஸ் பன்னி, நாங்களே ஆக்சன் டிராப் பன்னிட்டோம். இது இல்லாம, அமைப்பை வச்சிகிட்டு மிரட்டுறாருனு அவருக்கு எதிரா நிறைய பெட்டிசன் வந்திருக்கு. அந்த புகார விசாரிச்சிட்டு இருக்கோம். செக்சன் மேட்அவுட் ஆச்சுனா, அத பேஸ் பன்னி எஃப்.ஐ.ஆர். போடுவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கு…” என்கிறார்.

சுந்தரவதனம் IPS
சுந்தரவதனம் IPS

நிறைவாக, மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் ஐ.பி.எஸ். அவர்களிடம் பேசினோம். நாம் முன்வைத்த கேள்விகளை நிதானமாக கேட்டுக்கொண்ட அவர், அதற்கு பொறுப்பாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார்.

”அவர் மேல 26 வழக்குகள் இருக்கிறது. 5 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது; அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்டு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கு எண் 367/2022 பொருத்த வரையில், அன்றைக்கு அசாதாரணமான சூழல் நிலவியது. பாடியை வாங்க மறுத்து நான்கு நாட்களாக பிரச்சினை செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாதிரி கரூரிலும் சம்பவம் நடக்கனுமா?னு கலெக்டருக்கே மிரட்டல் எஸ்.எம்.எஸ். போயிருக்கிறது. கலெக்டர் கூப்பிட்டு எங்களுக்கு தகவல் சொன்ன பிறகுதான், அவரை முன்னெச்சரிக்கை கைது செய்து, வழக்கும் பதிவு செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்திருக்கிறோம்.

குவாரி அதிபர்களை மிரட்டி பணம் கேட்டார்னு சீரியஸான புகார் ஒன்னு வந்திருக்கு. இந்த மாதிரி புகார் யாரும் யார் மேல வேண்டுமானாலும் கொடுக்கலாம். புகார் கொடுத்த உடனேயே எஃப்.ஐ.ஆர். போட்டுவிட முடியாது. அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்துதான் வழக்கு போட முடியும். அதனடிப்படையில்தான், டீட்டெய்லா விசாரிச்சிட்டிருக்கோம்.” என்றார்.

”நான் போட்ட ரிட் பெட்டிசனுக்கு பதில் சொல்லும்போது, அடுத்த ரிவ்யூ மீட்டிங்கில் இவரது ஹெ.எஸ்.ஐ குளோஸ் பன்னிடறோம்னு நீதிமன்றத்துல ரிட்டனா கொடுத்ததும் இதே எஸ்.பி. சுந்தரவதனம்தான். இப்போ, என் மேல ஏகப்பட்ட வழக்கு இருக்குனு ஹெ.எஸ்.ஐ குளோஸ் பன்ன முடியாதுனு பேசுறதும் இதே எஸ்.பி. சுந்தரவதனம்தான். வடிவேல் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. வேடிக்கையாக இருக்கிறது.” என்கிறார், கரூர் ந.சண்முகம்.

– ஆதிரன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.