ஆங்கிலமும் நாப்பழக்கம் – ஆங்கிலமும் கற்க உதவும் படிப்பு ! ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்- 4
இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும், வேலைவாய்ப்பு இருந்தபோதிலும், சரியான படிப்பையும், சரியான வேலையையும், தேர்ந்தெடுப்பதும், சரியான நபரை வேலைக்கு தேர்ந்தெடுப்பதும் சவாலாக இருக்கிறது. 90-கள் காலகட்டங்களில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகவும் குதிரை கொம்பாகவும் இருந்தது.
1996-ல் நான்பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தேன். இதற்கு பிறகு என்ன படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? என்ற சிந்தனை மேலோங்கியிருந்தது. மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்து பகுதிநேர வேலையில் சேரலாம் என யோசித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு ஒரு தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி முதல்வர் வந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு பற்றி விளக்கினார். படித்தவுடன் வேலை கிடைக்கும் என்று அவர் சொன்ன அந்த முக்கிய செய்தி என் மனதில் பதிந்துவிட்டது.
அதை நான் உள்வாங்கிக்கொண்டு என் வீட்டில் வந்து என் பெற்றோரிடம் சொன்னேன். அதற்குப் பிறகு அதனை மறந்து விட்டேன். ஆனால், எனக்கு பிடித்த படிப்பாக இருக்கும் நான் விரும்புகிறேன் என்று தெரிந்து கொண்டு, என் அப்பா என் மாமாவிடம் சென்று இந்த படிப்பைப் பற்றி மேலும் விவாதித்துள்ளார். பிறகு, இந்த படிப்பிற்கு சிறந்த கல்லூரிகள் எங்கிருக்கின்றன? என்று விசாரித்து,தொழிநுட்ப கல்லுரிகள்அரசாங்கம் நடத்துபவை சிறப்பாக இருக்கும் என்பதால், என்னை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான திருச்சி துவாக்குடி அரசுக் கல்லூரியில் விண்ணப்பிக்க செய்தார்கள்.
அங்கு 3 ஆண்டு படிப்பை படிக்க துவங்கினேன். நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், என்னிடம் கேட்டகேள்வி இந்த படிப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? என்பதாகும். நான் சொன்ன பதில், விரைவில் ஆசிரியர் பணியில் சேர இந்தப் படிப்பு உதவும் என்று. ஆனால், படித்து முடித்து ஓராண்டிலேயே ஆசிரியராக சேருவேன் என்று அப்போதும் எனக்கே தெரியாதுதான்.
படிப்பின் முதல் நாள் ஒவ்வொரு ஆசிரியரிடமும் நாங்கள் எங்களை பற்றிய சுய விபரத்தை (Self Introduction) ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்ற நான் முதலில் இங்கிலிஷ் பேச தயங்கி, மனப்பாடம் செய்து சொன்ன இரண்டேவரிகள் My Name is Kapilan, I am coming from Srirangam அவ்வளவே.
ஆனால். என் வீடு திருவானைக்கோவிலில் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த சக நண்பர்கள் மாணவர்கள் மேலும் தமிழ் அறியாத சில ஆசிரியர்கள் இவர்களில் யாராவது Where is திருவானைக்கோவில் என்று கேட்டுவிட்டால் எனக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல தெரியாது என்பதால், அனைவருக்கும் தெரிந்த ஸ்ரீரங்கத்தை என் வசிப்பிடமாக மாற்றிக் கொண்டேன்.
இப்படி இங்கிலிஷ் மிரட்சியில் தொடங்கிய படிப்பு, போகப் போக, பேசிப்பேசி, இங்கிலிஷ் எளிமையாக வர மிகவும் உறுதுணையாக இருந்தது. ஆம். ஆங்கிலமும் நாப்பழக்கம்தான்.
இந்தியாவிலேயே கேட்டரிங் படிப்புக்கு என தனியாக இருக்கும் பல கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் 26 ஏக்கர் இட வசதியைக் கொண்டுள்ள இந்த மாநில உணவக மேலாண்மை கல்லூரி தமிழ்நாடு அரசின் ஒரே ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி ஆகும். திருச்சியில் இருக்கிறது. மத்திய அரசின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி சென்னையில் இருக்கிறது.
1981-ல் துவங்கிய திருச்சி அரசு ஹோட்டல் மெனேஜ்மெண்ட் கல்லூரி உலகெங்கும், பல ஹோட்டல் முதலாளிகளையும், மிகப்பெரிய சாதனையாளர்களையும், உருவாக்கியுள்ளது. மேலும், உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிக்கும் எங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்த எங்களது ஆசிரியர்களுக்கும் இங்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பன்னாட்டு பயணிகளுக்கு விருந்தோம்பல் செய்ய அவசியமான ஆங்கிலத்தை இப்படிப்புதான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. ஆங்கிலம் நமக்கு கடினமல்ல. ஆனால், வெளிநாட்டவரிடம் வியாபரம் செய்யவும் அவருக்கு விருந்தோம்பல் செய்யவும் ஆங்கிலம் உறுதுணையாக இருக்கும் என்பதால், ஆங்கிலம் அவசியமாகிறது. இதை எளிமையாக இந்த கல்லூரியில் எங்களுக்கு கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கை பாடம் பலவற்றை கற்றுத் தந்தது இந்த கல்லூரி படிப்பு.
நாம் அனைவரும் பொதுவாக கேட்டரிங் என்றே இந்த படிப்பை சொல்கிறோம். கேட்டரிங் என்றால், உணவைப் பற்றி மட்டும் படிப்பதாகும். அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை பற்றி தெரிந்து கொள்வதாகும். ஆனால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒரு ஹோட்டல் அதாவது விடுதி பற்றிய முழு நிர்வாகம் தெரிந்து கொள்வதும் அதற்கு தேவையான துணைப்பாடங்களை சேர்த்து படிப்பதும் ஆகும். நட்சத்திர விடுதிகளில் (ஸ்டார்ஹோட்டலில்) பணிபுரிய இந்தப் படிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் முக்கியமாக நான்கு பாடங்கள் கருதப்படுகின்றன.
Food Production எனப்படும் உணவு சமையல் தயாரிப்பு துறை; F&B Service எனப்படும் உணவு பரிமாறும் துறை; Front Office எனப்படும் வரவேற்பு துறை; மற்றும் Housekeeping எனப்படும் பராமரிப்புத்துறை. ஆகிய, இந்த நான்கு துறைகளும் வேலைவாய்ப்புக்கு முக்கியமான துறையாகவும் உணவக மேலாண்மையில் முக்கிய பாடமாகவும் கருதப்படுகின்றன.
என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? இந்த பாடங்கள் மட்டுமல்லாமல் வேறு என்னென்ன பாடங்களும், வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதையும் அடுத்தடுத்த இதழ்களில் காண்போம்.
(தொடரும்)
— கபிலன்.
ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா் 3ஐ படிக்க
[…] ஆங்கிலமும் நாப்பழக்கம் – ஆங்கிலமும் … […]