“வைகைப் புயலுக்கு கொடுத்த 1 கோடி என்னாச்சு?”– நடிகர் ஆர்கேவின் ‘ஸ்வீட் ஷாக்’ பதில்!
‘எல்லாம் அவன் செயல்’ என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் நடிகர் ஆர்கே. நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகம் கொண்ட ஆர்.கே.வுக்கு சமீபத்தில் ‘டான் ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. இது குறித்தும் மற்ற பல சங்கதிகள் குறித்தும் மீடியாக்களிடம் ஆர்கே பேசியது…
“சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் என்கிற வகையில் 18 நாடுகள் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துள்ளன. ATJEH DARISSALUM நாட்டிலிருந்து தமிழனுக்கும் தமிழன் செய்த தொழிலுக்கும் வரவேற்பாக ‘டான் ஸ்ரீ’ பட்டம் கிடைத்துள்ளது.
என்னுடைய சமூக நலன் சார்ந்த சேவைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தான் இந்த டத்தோ ஸ்ரீ மற்றும் டான் ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
என்னுடைய தன்னம்பிக்கை பேச்சால் பல பேரை நான் பொருளாதார ரீதியாக உயரத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். அந்த வகையில் வெளிநாட்டில் ஒரு தமிழனுக்கு கிடைத்த அங்கீகாரமாகத் தான் இதை நான் பார்க்கிறேன்.
ஏவிஎம், விஜயா வாஹினி என இருந்த இரண்டு ஸ்டுடியோக்களுக்கு நடுவே சினிமாவுக்கு என் பங்களிப்பாக நான்கு ஏசி அரங்குகள் கொண்ட ஸ்டுடியோவை இப்போது திறந்துள்ளேன். சினிமாவில் சம்பாதித்து எத்தனையோ பேர் வெளியே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் வெளியே சம்பாதித்துவிட்டு சினிமாவில் முதலீடு செய்கிறேன். இன்று ஸ்டுடியோக்கள் எல்லாமே அப்பார்ட்மெண்டுகளானதால் படப்பிடிப்பிற்காக காஞ்சிபுரம் போக வேண்டி இருக்கிறது. ஆனால் எனது இந்த ஸ்டுடியோ மாநகரின் மையப்பகுதியில் இருக்கு.
நான் நடித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. காரணம் இந்த ஸ்டுடியோவில் முதலீடு செய்திருந்தேன். சினிமாவில் நாம் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகவே இந்த ஸ்டுடியோவை நான் பெருமையாக நினைக்கிறேன். தமிழ் சினிமா என்றாலே கோடம்பாக்கம் தான். காரைக்குடியில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சினிமா கனவுகளோடு வந்தவன் நான். இதோ இப்போது விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை..
பணக்கார வீட்டில் ஒரு நாய் இருந்தால் அந்த நாயின் ஆணவக் கொலை எப்படி இருக்கும்.. அதுதான் இந்தப் படத்தின் கதை.
யோகி பாபு, தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப் படத்தில் நடித்திருக்கின்றனர். ஆர். கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கிறது.
வடிவேலுவை என் படத்தில் நடிக்க வைப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் கதை சொன்னேன்.. ஆனால் அவர் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்கிற முடிவில் அப்போது இருந்தார். அவர் இறங்கி வந்தால் நிச்சயமாக இருவரும் இணைந்து நடிப்போம். அவரிடம் இந்தப்படத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய் இன்னும் அவரிடம் தான் இருக்கிறது..
இப்போது எடுக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா நடித்திருப்பது கூட வடிவேலுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான் ” என்கிறார் ஆர்கே.
— மதுரை மாறன்.