‘அகத்தியா’ கேம்! புரமோஷனில் புதுப்பாய்ச்சல்!
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரான அனீஷ் அர்ஜுன் தேவ் என்ன சொல்றாரு ன்னு பார்ப்போம்
“இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி வெகு எளிதாக இந்த விளையாட்டை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன், ஏஞ்சல்ஸ் போன்ற கதாபாத்திரங்கள், மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன், இந்த கேம் பார்வையாளர்களைக் கவரும் அதே நேரத்தில், திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் பற்றிய பார்வையையும் வழங்கும்” என்றார்.
படத்தின் நாயகன் ஜீவா இது குறித்து பேசும் போது.. “என்னை வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு? மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்”.
இந்த பிரமாண்டமான நிகழ்வினில் ஒரு பகுதியாகப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. மேஸ்ட்ரோ இளையராஜாவிடமிருந்து இந்த பாடல் உருவாகியுள்ளது. இளையராஜாவின் இசையில், காலத்தால் அழியாத கிளாசிக் பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலை, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா வெகு அழகாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.
இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியதாவது.. ,
“விண்டேஜ் பாணியில் ஒரு பாடலை உருவாக்குவது குறித்து, பா.விஜய் என்னை அணுகியபோது, அதைப் பற்றி யோசிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள், “என் இனிய பொன் நிலாவே” பாடலை மறு உருவாக்கம் செய்யலாம் என என் மனதிலிருந்த ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவரது முகத்தில் உடனடியாக பெரும் உற்சாகம் தெரிந்தது. இப்பாடலை முதலில் பாடியவர் கே.ஜே. யேசுதாஸ்.
இந்த புதிய பதிப்பை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜெர்சின் ஆகியோர் அழகாக உயிர்ப்பித்துள்ளனர். முதன் முதலாக இப்பாடலை உருவாக்கிய அதே இசைக்கலைஞர்களுடன் மீண்டும் இணைந்து, இப்பாடலை உருவாக்கினோம். காலத்தால் அழியாத இது வெறும் பாடல் அல்ல; இது காலத்தைக் கடந்து, தலைமுறைகளை இணைக்கும் இசையின் கொண்டாட்டம்.” இப்பாடலை மீண்டும் உருவாக்கியதைப் பெருமையாக உணர்கிறேன்” என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர் பா.விஜய்.., “இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இளையராஜா சாரின் மாஸ்டர் பீஸை, யுவனின் நவநாகரீக இசையுடன் கலப்பது, இந்த மெல்லிசை பாடலின் புத்திசாலித்தனத்தனமான கொண்டாட்டமாகும். இந்தப் பொங்கலில் ரசிகர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும்”.
இதுபற்றி வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியது… “அகத்தியா ஒரு பிரம்மாண்ட ஃபேண்டஸி முயற்சியாகும். இதன் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய தரத்துடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களை மேலும் மகிழ்விப்பதற்காக, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது, புதிய தலைமுறைக்காக மறுவடிவமைக்கப்பட்ட “என் இனிய பொன் நிலாவே” என்ற ஐகானிக் பாடலை வெளியிட முடிவு செய்தோம். அகத்தியாவின் மூலம் இந்த சிறப்பான இசைப் பயணத்தைச் சாத்தியமாக்கிய இசைஞானி இளையராஜா சார் மற்றும் திறமை மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார்.
அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக விஷுவல் விருந்தாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
— மதுரை மாறன்.