எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக ”பொங்கலோ பொங்கல்” திருநாள் கொண்டாட்டம்!
எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, மற்றும் தண்ணீர் அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து ஜனவரி 11, 2025 அன்று காலை 10:30 மணிக்கு “பொங்கலோ பொங்கல்-2025” கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.
எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி இயக்குனர் முனைவர். எம். ஹேமலதா விழாவைத் தொடங்கி வைத்து, இத்தமிழர் தைப்பொங்கல் திருநாள் உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது என்றார்.
இவ்விழாவிற்கு தண்ணீர் அமைப்பின் செயல் தலைவரும், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளருமான திரு.கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பின் செயலாளர், பேராசிரியர் கே.சதீஷ்குமார், மற்றும் தண்ணீர் அமைப்பின் இணை செயலாளர் திரு. ஆர்.கே.ராஜா, ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்கள்.
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர் என்று இந்த விழாவின் முக்கியத்துவத்தை திரு.கே.சி.நீலமேகம் வலியுறுத்தினார்.

பேராசிரியர் கே.சதீஷ்குமார், அவர்கள் பொங்கல் என்பது இயற்கை வளங்களின் சாரத்தையும், பருவத்தின் நல்ல அறுவடையையும் குறிக்கும் கொண்டாட்டமாகும். வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அறுவடை பருவத்தையும் தமிழ் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் உற்சாகமான பங்கேற்பை ஈர்த்தது என்றார். மேலும் இயற்கை, விவசாயம் மற்றும் சமூகத்துடனான அதன் ஆழமான தொடர்பில் பொங்கலின் முக்கியத்துவம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
மேலும் இது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்தும் இயற்கை கூறுகளான சூரியன், மழை மற்றும் மண் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு கொண்டாட்டமாகும் என்றார். நமது பாரம்பரியம், கலாச்சாரம் எப்படி இளைய தலைமுறையினரின் இதயங்களில் தழைத்தோங்குகிறது என்பதை இந்த விழா அழகாக நினைவுபடுத்துகிறது என்று திரு.ஆர்.கே.ராஜா கூறினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அலங்கரிக்கப்பட்ட இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் பாரம்பரிய வேட்டிகள் மற்றும் புடவைகளில் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வைக் கொண்டாடினர்.
பொங்கல் விழாவையொட்டி, மாணவ, மாணவியர்களை கவரும் வகையில் கயிறு இழுத்தல், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் உறியடி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இக்கல்லூரி மாணவ, மாணவியர்களால் உருவாக்கப்பட்ட வண்ணமயமான கோலங்களால் கல்லூரி வளாகம் அலங்கரிக்கப்பட்டது. பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் பாடல் மற்றும் நடன போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் பொங்கலின் கலாச்சாரத்தை எடுத்துரைத்தது மட்டுமின்றி, பங்கேற்பாளர்களிடையே சமூக உணர்வையும் ஒற்றுமையையும் வளர்த்தது. பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றவர்களின் அறிவிப்புடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான திருமதி.எம்.சூர்யா அவர்கள் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
— அங்குசம் செய்திகள்.