அதிசயிக்க வைக்கும் ‘அகத்தியா’
வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அகத்தியா’ . இதில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார்.
ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் & பிரஸ்மீட் சென்னையில் பிப்ரவரி 22-ஆம் தேதி மதியம் நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசியோர்…
ஹீரோயின் ராஷி கண்ணா,
”நான் ஏற்கனவே ‘அரண்மனை 3’ , ‘அரண்மனை 4’ போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி. அனைவருக்கும் பா விஜயை பாடலாசிரியராக தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமெண்ட் க்ளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தின் தரத்திற்காக தயாரிப்பாளர் கணேஷ் சார் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இப்படம் அவருக்கும் வெற்றி படமாக அமையும்.
இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும்”.
இயக்குநர் பா. விஜய்,
“இது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கொண்ட தருணம். இந்தப் படத்தின் கதை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து மிகப்பெரிய தேடல் இருந்தது. முதலில் இந்த கதையை எப்படி ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். அப்படி வெகுஜன ரசனையுடன் சொல்ல வேண்டும் என்றால் வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணி தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் கதை எழுத தொடங்கும் போது இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு ஹாரர் ஃபேண்டஸியாகவும் உருவாக்க வேண்டும் என எழுதத் தொடங்கினேன். ஏனெனில் நான் சொல்லவரும் கன்டென்ட் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதனால் கதையின் ஒரு மிகப்பெரிய பகுதியை பீரியட் ஃபிலிமாக காட்ட வேண்டிய சூழல் கதைக் களத்தில் ஏற்பட்டது.
திரைக்கதையை எழுதி முடித்த பிறகு இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான பொருட்செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் தேவை. பிஸினஸைப் பற்றி கவலைப்படாமல் சொல்லவரும் கன்டென்ட்டை புரிந்து கொண்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இதனை தயாரிக்க இயலும். அப்படி ஒரு தயாரிப்பாளரை நானும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் தேடிய
தருணத்தில் தான் நடிகர் ஜீவாவின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இந்தக் கதையை சொன்ன பிறகு அவரும் தயாரிப்பாளரை தேடுகிறேன் எனச் சொல்லி அழைத்துச் சென்ற இடம் தான் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவரை அவருடைய வீட்டில் சந்தித்தோம். கதையை முழுவதுமாக கேட்டதும் தயாரிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நாங்கள் கேட்டது, கேட்க நினைத்தது, கேட்கத் தயங்கியது, இதையெல்லாம் கேட்கலாமா என்று யோசித்தது என அனைத்தையும் அவராக முன்வந்து செய்து கொடுத்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு அவருக்கு வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் அளவில் நன்றியை சொன்னாலும் போதாது.
‘அகத்தியா’ இரண்டேகால் மணி நேரம் மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஜனரஞ்சகமான படம் என்பதுடன் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் தயாராகி இருக்கிறது. அழகான தமிழ் வசனங்கள்- இனிமையான பாடல்கள்- அனைத்து தரப்பினரும் தற்போது ரசிக்கும் ஹாரர் எலிமெண்ட்ஸ்கள்- இத்துடன் ஃபேண்டஸி என்ற புதிய எலிமெண்ட்டையும் இணைத்து உருவாகியிருக்கிறோம். அதனால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை.
நான் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, நடிகராகி, இயக்குநராகி, தயாரிப்பாளராகி என 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒன்றுதான். சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. கூட்டு முயற்சியில் தான் ஒரு கலைஞரின் வெற்றி அடங்கியிருக்கிறது “.
ஹீரோ ஜீவா
“பா. விஜய் ‘அகத்தியா’ படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு நல்லதொரு மெசேஜும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். அதற்காக ஹாரர் – த்ரில்லர் – காமெடி – ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- இவற்றின் கலவையாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாக தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
படத்தின் க்ளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக மனதார பாராட்டுகிறேன்.
இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களை தான் சந்திப்போம். அந்த வகையில் இந்த படத்தின் கதையை அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். கதையை முழுவதுமாக கேட்டு உடனே தயாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டார். அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்காக நாங்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அவருக்கு காண்பித்தோம்.
எங்களுடைய இந்த அணுகுமுறையும் அவருக்கு பிடித்திருந்தது. உண்மையிலேயே ஏராளமாக பொருட்செலவு செய்து தான் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இதற்காக அவருக்கு பெரும் நன்றி.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் விதை. படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாகி இருக்கிறது” .
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ், ”இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜீவா – இயக்குநர் பா. விஜய்யையும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரையும் அழைத்து எங்கள் வீட்டுக்கு வந்தார். படத்தின் கதையை சொன்னார்கள். எனக்கு பிடித்திருந்தது. அப்போது கதைக்கு டைட்டில் வைக்கவில்லை. படத்தில் ஹீரோவுக்கு அகத்தியன் என பெயர். அதனால் படத்திற்கு ‘அகத்தியா’ என பெயர் சூட்டினோம்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றார்கள். அதன் பிறகு இயக்குநரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். கிராபிக்ஸ் வேலைகள் முடிந்தவுடன் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தில் சிஜி மட்டுமே ஒன்றரை மணி நேரம். 14 தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டது படக்குழு. இரண்டு மாதத்திற்கு முன்புதான் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தது. அதன் பிறகு படத்தை பார்த்தோம். பார்த்தவுடன் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் நிறுவனம் இதுவரை 25 படங்களை தயாரித்திருக்கிறது. அதில் இந்தப் படம் தான் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதனால் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்பெஷலானது. படத்தை பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் பா. விஜய்யிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என வியப்படைவீர்கள். இதற்காக இயக்குநர் பா விஜய்க்கு நன்றி.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது ‘அகத்தியா’.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
என்னுடைய தயாரிப்பு அனுபவத்தில் இந்தப் படத்தின் இயக்குநரையும் , ஒளிப்பதிவாளரையும் தான் அதிக முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். இவர்கள் பட உருவாக்கத்தின் போது நடைபெறும் அனைத்து விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
படத்தில் கிட்டத்தட்ட 25 நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது.
என்னுடைய எல்லாப்படத்தின் இந்தி உரிமையை வேம் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், எனது இனிய நண்பருமான அனீஷ் அர்ஜுன் தேவ் தான் வாங்குவார். இந்தப்படம் இந்தியிலும் வெற்றி பெறும் என்பதால் அதன் இந்தி உரிமையை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் போது படத்தைப் பார்த்துவிட்டு, படத்திற்கு இணைத் தயாரிப்பாளராக வந்தார். அவர் இணைந்தவுடன் இந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமானதாக மாற்றம் பெற்றது. இந்த தருணத்தில் அவருக்கு எனது நன்றி”.
— மதுரை மாறன்.