புது டெல்லி, ஜந்தர் மந்தரில் அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் !
அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு (AIFUCTO) சார்பாக 19.11.2024 இன்று புது டெல்லி, ஜந்தர் மந்தரில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
1. புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.
2. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நாடு முழுவதும் அமல்படுத்தி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை ஒரே மாதிரியாக 65 என உறுதி செய்ய வேண்டும்.
3. NEET, CUET தேர்வுகள் மற்றும் இது போன்ற மையப்படுத்தப்பட்ட பிற தேர்வுகளை ஒழிக்க வேண்டும். அவை ஜனநாயகம் அற்ற முறையில் மாநிலங்களின் பங்கை குறைப்பதோடு அரசியல் அமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கின்றன. ஆகவே, இத்தேர்வுகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
4. ஏழாவது ஊதிய திருத்த பரிந்துரைகளை ஒட்டுமொத்தமாக அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
5. நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அனைத்து தகுதியான கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணி மேம்பாடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
6. உதவி பேராசிரியரிலிருந்து இணைபேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்.
7. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநில அரசுகளும் புத்தொளி மற்றும் புத்தாக்க பயிற்சிக்கான தேதி நீட்டிப்புக்கான வழிகாட்டுதலை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
8. எம்பில் மற்றும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
9. கல்லூரி பேராசிரியர்களின் பணி மேம்பாடு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
10. இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் பாடத் திட்டத்தை வடிவமைப்பதில் மாநில அரசுகள் தங்களது முழு கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.
11. இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் போன்று ஓய்வு பெறுவதற்கான சம வாய்ப்புகளை உடற்கல்வி இயக்குனருக்கும் வழங்க வேண்டும்.
12. எட்டாவது ஊதியக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 400 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
AIFUCTO தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, பொதுச்செயலாளர் அருண்குமார் ஒருங்கிணைத்தார்.
CPI கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா அவர்களும், CPM மத்தியக்குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் மற்றும் தோழமை சங்கங்களின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப்பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐபெக்ட்டோ துணைத் தலைவரும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான முனைவர். பி. டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் பொதுச் செயலாளர் முனைவர் சோ. சுரேஷ் மற்றும் ஐபெக்ட்டோ செயலாளர் ரவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டனர்.