அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு.ஆறுமுகத்தமிழன்- சிந்தனையின் தொடர்ச்சிதான் தமிழ் மரபு ! பாகம் -02
சென்னையில் முகப்பேரில் சந்தான கோபாலகிருஷ்ண கோயில் என்று ஒன்று உள்ளது. “இந்தக் கோயிலில் நீங்கள் வழிபாடுகள் செய்தால் உங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்பதாக இந்த கோவிலில் ஸ்தலபுராணம் என்ற ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.
தவழும் நிலையில் உள்ள கோபாலகிருஷ்ணன் பொம்மையை வைத்து பூசைகள் செய்து, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணிடம் கொடுப்பார்கள். அந்தப் பெண் அந்தப் பொம்மையை வாங்கி சற்றுநேரம் மடியில் வைத்திருந்து பின்னர், கொடுத்துவிட வேண்டும். இதனால், பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று இந்த கோயிலின் ஐதீகம் அதாவது நம்பிக்கை என்று எழுதி வைத்துள்ளார்கள். இதற்கு என்று சில நிபந்தனைகள் உள்ளன. இவைஇவைகளைச் செய்யவேண்டும். இவைஇவைகளைச் செய்யக்கூடாது என்று வழிமுறைகள் உள்ளன.
இப்போது நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், சந்தான கோபாலகிருஷ்ணனால் குழந்தை பிறக்கின்றதா? அல்லது மனமொத்த கணவன், மனைவியின் விடாமுயற்சியால் குழந்தை பிறக்கின்றதா? என்பதாகும்.
இந்தக் கேள்விகளை நம்மில் யாரும் கேட்பதில்லை. காசைக் கொடுத்துவிட்டு, தவழும் நிலையில் உள்ள அந்த பொம்மையை மடியில் வைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு அடுத்த வருடம் நமக்குப் பிள்ளை பிறக்காதா? என்று காத்திருக்கிறார்கள். இதுபோன்ற நம்பிக்கைகளை விதைப்பது என்பது மிகவும் கோளாறானவை.
மதம் என்பதுதான் சமயம். சமயம் என்பதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் சமைத்தல் என்பதுதான். சமைக்கும்போது நாம் என்ன செய்வோம். அரிசியைக் கழுவுவோம். அரிசியில் உள்ள கல்லை நீக்குவோம். பின்னர் உலையில் இட்டு, உண்ணும் நிலைக்கு வருமாறு அதைச் சமைத்தல் அல்லது பக்குவப்படுத்துதல் என்பதுதான் சமைத்தல் என்பதாகும்.
சமயங்களும் மனிதர்களைப் பக்குவப்படுத்தும். இப்போதுள்ள சமய மரபுகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகின்றனவா? இருக்கிறதா? என்றால் இல்லை. மனிதர்களைச் சிந்திக்கவிடாமல், வெறியூட்டுவதாக, மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதாக சமயங்களை ஆக்கிவிட்டார்கள். சமயம் என்பதற்கு ஆங்கிலத்தில் மறுபடி மறுபடி படி என்பதாகும். உனக்குக் கற்றுத்தரப்பட்ட சமயத்தை, தெய்வத்தை, நம்பிக்கையை, மரபைத் தொடர்ந்து படி. ஆராய்ந்து கொண்டிரு என்பதாகும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இல்லையென்றால் அசந்த நேரத்தில் வேறுஒன்றை நம் தலையில் சுமத்திவிடுவார்கள் என்பதால் தொடர்ந்து நமக்குக் கற்பிக்கப்பட்டவைகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். திருமந்திரத்தில் திருமூலர் சொல்கிறார். யாராவது ஒருவர் வந்து, நீங்கள் இப்படித்தான் வழிபாடுகள் செய்யவேண்டும் என்று சொன்னால் கேட்கக்கூடாது. எல்லாவற்றையும் விசாரித்து, உங்கள் அறிவுக்கு ஏற்றவகையில் வழிபாடுகளை அமைத்துக்கொள்ளுங்கள். மற்றவற்றைப் புறந்தள்ளுங்கள் என்று சொல்கிறார்.
நான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற சிவனை எல்லா வகையிலும் அறிந்தே நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். தேங்காயை வாங்கும்போது நன்றாகத் தட்டிப் பார்த்து வாங்கும் நீங்கள், சமய நம்பிக்கைகளை மட்டும் எதுவும் சொல்லாமல் ஏன் ஏற்றுக்கொள்ளுகிறீர்கள் என்று திருமூலர் கேட்கிறார்.
உங்களுக்குத் தட்டிப் பார்த்து வாங்கும் அளவிற்கு உங்களுக்கு அறிவு இருக்கிறதா? சமயம் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கிறதா? சாமியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நாங்கள் சொல்கிறோம். நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இது தமிழ் மரபு அல்ல.
எல்லாவற்றையும் விசாரிப்பதும், எல்லாவற்றையும் கேள்வி கேட்பதும்தான் தமிழ் மரபு. நீங்கள் எதையும் எங்களிடம் கேட்கக்கூடாது. காலம்காலமாக சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தமிழ் மரபுக்கு எதிரானது. தமிழ் மரபு என்பது சிந்தனையின்பாற்பட்டது. சிந்தனைக்கு அப்பாற்பட்டது அல்ல.
உரையாக்கம்: முனைவர் தி.நெடுஞ்செழியன்.
அர்த்தமுள்ள ஆன்மீகம் – பாகம் 01 படிக்க click this link
அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு.ஆறுமுகத்தமிழன் சிந்தனையின் தொடர்ச்சிதான் தமிழ் மரபு ! பாகம் -01