பிறப்பால் அனைவரும் ஒன்று – தமிழரின் நெறியை ஏற்று மாணவர்கள் சமத்துவத்தைப் போற்ற வேண்டும் – முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன்
பிறப்பால் அனைவரும் ஒன்று என்ற தமிழரின் நெறியை ஏற்று மாணவர்கள் சமத்துவத்தைப் போற்ற வேண்டும் – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அறக்கட்டளைச் சொற்பொழிவில் முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறையின் சார்பாக அருள்முனைவர் ஆ செபாஸ்டின் சே.ச., அருள் முனைவர் ச. இலாசர் சே.ச., முனைவர் ச.சாமிமுத்து, முனைவர் அந்தோனி குருசு, முனைவர் ஜோசப் கலியபெருமாள் ஆகியோரின் அறக்கட்டளைகள் சார்பாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழாய்வுத் துறைத் மூத்தப் போராசிரியர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் தலைமையேற்று சிறப்பு விருந்தினரை சிறப்பு செய்தார். தொடர்ந்து தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
“அறிவுடையார் நெஞ்சம்” என்ற பொருண்மையில் சென்னை மயிலாப்பூர் ராமகிருடிணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், மனிதப் பிறப்பில் அறிவின் தொடக்கம் தொடுதல் உணர்வே எனவும் அதனால் தொடுதல் எந்த வகையிலும் தீட்டாக அமையாது என்பதையும் வலியுறுத்திக் கூறினார். மேலும் தம் உரையில் காரல் மார்க்ஸ், ஹேகல் மற்றும் பல தத்துவவியலாளர்களை முன்னிறுத்தி அவர்களின் கருத்துக்களை மேற்கோளிட்டு பேசினார்.
இறைவனை வழிபட சாதி, மதம் போன்ற பிரிவுகள் இருப்பது தவறு என மிகவும் அழுத்தமாக எடுத்துக் கூறி மனித பிறப்பின் நோக்கத்தை மாணவர்களுக்கு தன் உரை மூலம் புரிய வைத்தார். பெண்ணின் பெருமையையும் ஆணும் பெண்ணும் சமம் என்ற சமத்துவக் கோட்பாட்டையும் தமிழர் மரபு, சித்தர்களின் சித்தாந்தம், புத்த வழி ஆகியவற்றோடு ஒன்றிணைத்து உரையை நிறைவு செய்தார். நிகழ்வின் தொடக்கத்தில் இளங்கலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
நிறைவில் இளங்கலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் ச ஆஷிக் டோனி நன்றியுரை ஆற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவர் ரெ.மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார், தமிழ் ஆர்வலர்கள், தமிழாய்வுத்துறை மேனாள் துறைத்தலைவர் அந்தோணி குரூசு, முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள் மற்றும் கணினி அறிவியல், தாவரவியல், கணிதவியல், வேதியியல் துறை மாணவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
_ மு.ஆயிஷா சித்திகா