சாதி குடோனில் கொல்லப்பட்ட சந்தியா ! சாதி சகதியில் நெளியும் புழுக்கள் போன்று………..

நீ பெரிய இவளா? என்னை காதலிக்க மாட்டியாடி? என்று கூறிக் கொண்டே கழுத்திலும் முதுகிலும்......

0

சாதி குடோனில் கொல்லப்பட்ட சந்தியா !

பொம்மைகள் வைக்கக்கூடிய குடோன் அது. பதினெட்டு வயது சந்தியா, கடையிலிருந்து பொம்மைகளை எடுத்துச் சென்று குடோனுக்குள் நுழைந்து அடிக்கி வைத்துக் கொண்டிருந்த போது அங்கு வாளோடு வந்த ராஜேஷ்கண்ணன் என்கிற 17 வயது இளைஞன், நீ பெரிய இவளா? என்னை காதலிக்க மாட்டியாடி? என்று கூறிக் கொண்டே கழுத்திலும் முதுகிலும் கையிலும் வெட்டுகிறான். அதே இடத்தில் இரத்தமும் சகதியுமாக இறந்து போகிறார் சந்தியா. இந்த கொடூர கொலை சந்தியாவின் அக்கா கோகிலாவின் கண் எதிரே நடந்திருக்கிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

சந்தியா - திருநெல்வேலி
சந்தியா – சந்தியா – திருநெல்வேலி

நெல்லைக்கு பெயர் போன இருட்டுக் கடை அல்வா கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கடையில் தான் இந்த கொடூரம் நடந்திருக்கிறது. பட்டப்பகலில் இந்த கொலையை செய்துவிட்டு நிதானமாக வெளியேறுகிறான் ராஜேஷ்கண்ணன்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்த படுபாதக செயலால் நெல்லை மட்டுமல்ல தமிழ்நாடே கொந்தளிக்கும் நீதிக்காக ஒன்றிணையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். எதுவும் இங்கு நடக்கவில்லை. ஒரு நாய் அடித்துக் கொல்லப்பட்டால் அடுத்த 5 நிமிடத்தில் எப்படி இயல்பு நிலையில் இருப்பார்களோ அதே போன்ற இயல்பு நிலை தான் நெல்லையில் நிலவியது என்பதை ஆழ்ந்த கவலையுடன் பதிவு செய்கிறேன்.

சந்தியா - சந்தியா - திருநெல்வேலி
சந்தியா – சந்தியா – திருநெல்வேலி

சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற பெண் கொல்லப்பட்ட போது தமிழ்நாடே கொந்தளித்தது. காவல்துறை தலைவர், தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர், மனித உரிமை ஆணையங்கள் என்று குரல்கள் பலமாக ஒலித்தன. இந்திய அளவில் அது விவாதமாக மாறியது. தினம்தோறும் தொலைக்காட்சியில் விவாதமும் நடத்தப்பட்டது. ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டன. ஆனால் அதே போன்று கொல்லப்பட்ட சந்தியாவின் சம்பவம் அந்த குடோனுக்குள்ளே முடங்கிப் போய் கிடக்கிறது.

ஏன் இந்த கள்ள மௌனம்? சுவாதியை கொன்றதாக கருதப்பட்ட ராம்குமார் சிறையில் கொல்லப்படுகிறார். அவ்வளவு பெரிய அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் சந்தியாவை கொலை செய்தவன் 17 வயது சிறுவன் என்பதால் இளம் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான். ஒரு பெட்டி கேஸ் குற்றம் சாட்டப்பட்டவர் போன்று அவன் நடத்தப்படுகிறான்.

சந்தியா - துக்க வீட்டில்
சந்தியா – துக்க வீட்டில்

சம்பந்தப்பட்ட பகுதிக்கு களஆய்வுக்காக சென்றிருந்தேன். திருநெல்வேலி அருகில் உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் – சுப்புலெட்சுமி தம்பதியருக்கு 3 மகள்கள். கடைசி மகள் சந்தியா 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். திருநெல்வேலி, கீழரத வீதியில் உள்ள ராஜம் பேன்சி கடையில் மாதம் ரூ.7000 சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கடைக்கு அருகாமையில் உள்ள சூர்யா கேஸ் என்கிற கடையில் இரண்டாவது அக்கா கோகிலா வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் மாத சம்பளம் ரூ.7000.

இவர்களது கடைகளுக்கு அருகாமையில் உள்ள மற்றொரு கடையில் மூலக்கரைப்பட்டி, தோப்பூரைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்கிற இளைஞனும் வேலை பார்த்து வந்துள்ளான். கடந்த 2 மாத காலமாக சந்தியாவை வழிமறித்த ராஜேஷ்கண்ணன், நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை காதலிக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறான். அதற்கு சந்தியா, நான் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவள், நீ நாடார் சமூகத்தை சேர்ந்தவன். இதெல்லாம் ஒத்து வராது என்று கூறியுள்ளார். ஆயினும் ராஜேஷ்கண்ணன் சந்தியாவிடம் மட்டுமல்ல அவரது சகோதரிகளான முத்துமாரியிடமும், கோகிலாவிடமும் உன் தங்கச்சி என்னை தான் காதலிக்க வேண்டும். அதற்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்று மிரட்டியும் வந்துள்ளான். அதற்கு சந்தியா உடன்படவில்லை.

எவிடன்ஸ் கதிர் கள ஆய்வு
எவிடன்ஸ் கதிர் கள ஆய்வு

இந்த நிலையில் கடந்த 02.10.2023 அன்று பிற்பகல் 12.45 மணியளவில் தான் வேலை பார்க்கும் கடைக்கு அருகாமையில் உள்ள குடோனுக்கு பொம்மைகளை எடுத்து சென்று வைப்பதற்காக சந்தியா சென்றுள்ளார். அங்கு வந்த ராஜேஷ்கண்ணன் வாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறான். இந்த படுகொலை சம்பவம் கோகிலா மற்றும் உடன் பணியாற்றக்கூடிய 3 பெண்களின் கண் எதிரே நடந்திருக்கிறது.

குற்றவாளியை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த சம்பவத்தை இரண்டு நிலைகளில் கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று இளம் சிறார் குற்றத்தில் ஈடுபடுத்தப்படுவது, இரண்டு காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கொலை செய்வது.

குற்றத்தில் ஈடுபட்ட ராஜேஷ்கண்ணனுக்கு 17 வயது என்பதால் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இளம் சிறார் என்பதனால் அவனுக்கு பெயில் எளிதாக கிடைக்கும், தண்டனையும் குறைவாக கிடைக்கும். இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களை குற்றவாளி என்று சொல்லக்கூடாது சட்டத்திற்கு முரணானவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று இளம்சிறார் நீதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

கைதான ராஜேஷ்கண்ணன்
கைதான ராஜேஷ்கண்ணன்

ஒரு மனித உரிமை ஆர்வலன் என்கிற முறையில் குழந்தை உரிமைகளின் மதிப்பீட்டை உணர்ந்து கொண்டாலும் சில விமர்சனங்களையும் முன் வைக்க விரும்புகிறேன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி கொலைகளில் அதிகமாக ஈடுபடுவது 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள். இவர்கள் தந்திரமாக இளம் சிறார் என்கிற அடையாளத்தை பயன்படுத்திக் கொண்டு மிக எளிதாக பிணையில் வெளியே வந்துவிடுகின்றனர். அவர்களது எதிர்காலம், நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு மிக எளிதாக தண்டணையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இதுபோன்ற கொலைகளில் திட்டமிட்டே சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வருகிறது. இவர்கள் எளிதாக தப்பிக்க இளம் சிறார் நீதி சட்டத்தில் உள்ள சாதகங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நீதிவேண்டி ... பேனர்... கொலையான மா.சந்தியா
நீதிவேண்டி … பேனர்… கொலையான மா.சந்தியா

கடந்த 09.08.2023 அன்று நாங்குநேரியில் சின்னத்துரை என்கிற தலித் சிறுவனை 3 ஆதிக்கசாதி இளம் சிறார்கள் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டினர். அதேபோன்று 17.08.2023 அன்று கழுகுமலையில் ஹரிபிரசாத் என்கிற தலித் சிறுவனை 5 பேர் கொண்ட இளம் சிறார்கள் கொடூரமான முறையில் கொடும் காயம் ஏற்படுகிற அளவிற்கு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கரூர், கொளக்காரன்பட்டி ஜீவா என்கிற தலித் சிறுவனை கடந்த 25.08.2023 அன்று 4 பேர் கொண்ட இளம் சிறார்கள் கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள ஓ.குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிசாந்த் என்கிற 17 வயது சிறுவனனை கடந்த 02.09.2023 அன்று சதிஷ் என்கிற இளம் சிறார் அரிவாளால் வெட்டியிருக்கிறார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் இளம் சிறார்கள் தலித் சிறுவர்கள் மீது கொடூரமான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை – கொலை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் சாதிய வன்கொடுமைகளை கொடூர குற்றங்களாக அரசு பார்ப்பதில்லை. இதனால் சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுகிற இளம் சிறார்கள் எளிதாக தப்பித்து வருகின்றனர். ஆகவே இளம் சிறார்கள் ஈடுபடுகிற சாதிய வன்கொடுமைகளை கொடூர குற்றங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்.

அடுத்ததாக காதலிக்க மறுத்ததற்காகவும் பாலியல் வன்கொடுமைக்காகவும் பல கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இந்தியாவிலும் நடந்திருக்கின்றன. ஆனால் பாதிக்கப்படுகிற பெண்கள் முற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தால், மருத்துவ கல்லூரி மாணவியாக இருந்தால், இன்போசிஸில் வேலை பார்த்தால், டெல்லி, சென்னை போன்ற இடங்களில் கொல்லப்பட்டால் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏழைகளாகவோ தலித்துகளாகவோ படிக்காதவர்களாகவோ இருந்தால் நீதிக்காக குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது. அதுவே கொல்லப்படுவது ஏழை எளிய பெண்களாக இருந்தால் கருப்பு தோல் உள்ள பெண்களாக இருந்தால், படிக்காத பெண்களாக இருந்தால், கூலி வேலைக்கு செல்கிற பெண்களாக இருந்தால், சேரியில் வாழ்கிற பெண்களாக இருந்தால் அந்த குரல்கள் இருக்கிற இடம் தெரியாமல் கள்ள மௌனம் காக்கிறது.

மா.சந்தியா இறுதி ஊர்வலம்
மா.சந்தியா இறுதி ஊர்வலம்

பட்டப்பகலில் ஒரு குடோனுக்குள் வைத்து கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துவிட்டு நிதானமாக ஒரு சாதி பொறுக்கி வெளியேறுகிறான். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், அதிகார அமைப்புகள், ஊடகங்கள் கள்ள மௌனத்தோடு இருப்பதை பார்த்தால் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

நான்கு காண்டாமிருகம் தோலினை அடுக்கி வைத்தது போன்று சொரணையற்ற சமூகமாக இருப்பதை சகித்து கொள்ள முடியவில்லை. குடோனுக்கும் நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்? கருப்புக்கும் வெள்ளைக்கும் இருக்கும் வித்தியாசம். சாதிக்கும் சாதி அற்றவனுக்கும் இருக்கும் வித்தியாசம்.

அன்பு சந்தியா சாதி பொறுக்கிகள் சூழ் உலகத்தில் இருப்பதை விட சாதியற்ற உலகம் படைக்க விரும்பிய ரோகித் வெமுலா, அனிதா, இளவரசன், கோகுல்ராஜ் விஷ்ணுபிரியா போன்ற அண்ணன்கள், அக்காக்கள் உலகத்தில் சென்றதற்காக சற்று ஆறுதல் அடைகிறேன்.

தமிழ் சமூகம் சாதி சகதியில் நெளியும் புழுக்கள் போன்று இருப்பது வெட்கக் கேடானது. சந்தியா வீடு வெறிச்சோடி கிடக்கிறது. தமிழ்நாடு போன்றே.

-எவிடன்ஸ் கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.