’அனந்தா’ – இதான்டா தமிழ்நாடு!
சத்ய சாய் அறக்கட்டளையின் தலைவரும் புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர சிஷ்யருமான கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி அர்ப்பணிப்புடன்[தயாரிப்பு] ஓடிடியில் ரிலீசாகியிருக்கும் இரண்டு மணி நேரப்படம் ‘அனந்தா’. கலைஞானி கமல்ஹாசனின் ‘சத்யா’, சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘வீரா’ , ‘பாபா’ படங்களை டைரக்ட் பண்ணிய சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்ணியுள்ளார். சென்னையின் பரதநாட்டியக் கலைஞர் மீனாட்சி [ அபிராமி வெங்கடாசலம்], காசியின் அன்னபூரணி[ சுஹாசினி], பாலக்காடு மகாதேவன் [ ஒய்.ஜி.மகேந்திரா], மும்பையின் வருண்ராவ்[ ஜெகபதி பாபு], அமெரிக்காவின் கலிபோர்னியா ஜான் ஆகிய ஐந்து பேர் புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமைகளையும் பாராக்கிரமங்களையும் அற்புதங்களையும் சொல்வது தான் இந்த ‘அனந்தா’.
கவிஞர் பா.விஜய் பாடல்கள்-வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: சஞ்சய், எடிட்டிங் : ஆர்.ரிச்சர்ட், பி.ஆர்.ஓ. ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் அஹமத்.
20—25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழின் பல்வேறு பத்திரிகைகளில் புட்டபர்த்தி சாய்பாவின் அற்புதங்களை ஏகப்பட்ட பணக்காரர்களும் தொழிலதிபர்களும் மெய் சிலிர்க்க பகிர்ந்திருந்தனர். அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஐந்து கேரக்டர்கள் மூலம் இந்த ‘அனந்தா’வில் பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. புட்டபர்த்தி சாய்பா ஆசிரமத்திலேயே முக்கால்வாசி படப்பிடிப்பு நடந்துள்ளது.
புட்டபர்த்தி சாய்பாவின் மகிமைகளும் அற்புதங்களும் எந்தளவுக்கு பரவியதோ.. அதே அளவுக்கு அவரைப் பற்றிய சர்ச்சைகளும் நெகட்டிவ் கருத்துகளும் அவர் உயிருடன் இருந்த போதே பரவியது என்பது தான் உண்மை.
இந்த ‘அனந்தா’வில் பேரதியசம் என்னன்னா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீயையையே அணைக்கும் சக்தி கொண்டவராக புட்டபர்த்தி சாய்பாபாவைக் காட்டி கலங்கடித்திருப்பது தான்.

இதைவிட பேரதிசயமும் பெருமைக்குரிய சங்கதியும் என்னன்னா… முழுக்க முழுக்க புட்டபர்த்தி சாய்பாபா புகழ் பரப்பும் இந்த ‘அனந்தா’வின் பி.ஆர்.ஓ.வாக ரியாஸ் அஹமதும் அவரது மகள் பாரஸ் ரியாஸும் பணியாற்றியது தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த போது, பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் நிகழ்ச்சி முடிந்து கிளம்பியது போது, “சுவாமி பிரசாதம் வாங்கிட்டுப் போங்க” என கனிவுடன் சொல்லி, குங்குமமும் புட்டபர்த்தி சாய்பாபாவின் சிறிய அளவு போட்டோவையும் கொடுத்து இன்முகத்துடன் வழியனுப்பினார்கள் ரியாஸும் அவரது மகளும்.
மூன்று நாட்களுக்கு முன்பு ‘அனந்தா’வின் பிரஸ் ஷோவிலும் அதே கனிவுடனும் இன்முகத்துடனும் வரவேற்றனர் ரியாஸும் பாரஸும். பத்திரிகையாளர்கள் முன்பு புட்டபர்த்தி சாய்பாபாவின் அற்புதங்களையும் இந்தப் படம் எடுத்த அனுபவங்களையும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா பேசினார்.
படத்தின் க்ளைமாக்ஸில் புட்டபர்த்தி சாய்பாபா இறந்த போது எடுத்த விஷுவல் புட்டேஜுகளைக் காட்டினார்கள். அதிலும் இஸ்லாம், கிறிஸ்தவ அடையாளங்கள் இருந்தன.
இதான்டா தமிழ்நாடு. தமிழ்நாட்ல தான்டா இப்படிக் காட்ட முடியும்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.