அங்குசம் பார்வையில் ‘அங்கீகாரம்’
தயாரிப்பு : ‘ஸ்வஸ்திக் விஷன்ஸ்’ பிரசாந்த், அருண்முருகன், அஜித் பாஸ்கர். இயக்கம் : தென்பாதியான், நடிகர்-நடிகைகள் : கே.ஜே.ஆர். [ கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் ], சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரமா, வசுந்தரா காஷ்யப், அஜித் கோஷி, ரங்கராஜ் பாண்டே, ஆண்டனி, மன்சூரலிகான், மோகன் ராம், ஜீவா ரவி. ஒளிப்பதிவு : ஏ.விஸ்வநாத், இசை : ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங் : தினேஷ்குமார், ஆர்ட் டைரக்டர் : ராமுதங்கராஜ், ஸ்டண்ட் : பீட்டர்ஹெய்ன், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
தூய்மைப் பணியாளர் பானுமதியின் [ரமா] மகன் தடகள வீரன் ஆதிரா பானுமதிக்கு [கே.ஜே.ஆர்.] காமென்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றே தீரவேண்டும் என்பது இலக்கு. இதற்காக உள்ளூர் ஓட்டப் பந்தயம், மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயங்களில் முதல் இடம் பிடிக்க்கிறார். இவருக்கும் இவரைப் போன்ற ஏழ்மைநிலையில் இருக்கும் வீரர்கள்-வீராங்கனைகளுக்கு இலவசமா பயிற்சி அளிக்கிறார் கோச் வசுந்தரா. இதில் சத்யா [ சிந்தூரி விஸ்வநாத்]வும் ஒருவர். ஆதிராவின் அத்தை மகளும் கூட.
ஆதிராவின் காமென்வெல்த் தங்கப்பதக்க கனவுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன், அவரை லிஸ்ட்டிலேயே சேர்க்காமல் துரத்தியடிக்கிறது அஜித் கோஷி தலைமையிலான தடகள் அசோசியேஸன். இதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போய் காமென்வெல்த் போட்டிக்கே ஸ்டே வாங்க களம் இறங்குகிறார் ஆதிரா. இதனால் ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் அதிர்ச்சியாகிறது. ஆதிராவுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? மனதை உலுக்கும் உண்மைகளை உரக்கப் பேசுகிறார் டைரக்டர் தென்பாதியான்.
தடகள விளையாட்டு, அதற்காக தன்னை உடல்ரீதியாக தயார்படுத்தும் வீரனாக கே.ஜே.ஆர். உண்மையிலேயே நம்மை பிரமிக்க வைக்கிறார், பல காட்சிகளில் கைவலிக்க கைதட்ட வைக்கிறார். ஒரு நிஜ ஓட்டப்பந்தய வீரனுக்குரிய ஜிம்னாஸ்டிக் உடல், மைதானத்தில் ஓடும் தொனி எல்லாமே கே.ஜே.ஆருக்கு இயற்கையாகவே கைகூடி வந்துள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் போட்டியில், மைதானத்தில் ஓடும் போது கால்கள் பலகீனமாகி ஓடமுடியாமல் விழுவதும், அதன்பின் ஓடவே முடியாது என டாக்டர்கள் சொன்னதும் கதறியழுவது, நீதிமன்றத்தில் தானே ஆஜராகி, அட்வகேட் ஜெனரலையும்[ விஜி வெங்கடேஷ்] விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சூரலிகானையும் அகாடாமி தலைவர் அஜித் கோஷியையும் அலறவிடும் காட்சிகளில் அசத்திவிட்டார் மனுஷன்.
இவரின் அத்தை மகளாக சிந்தூரி விஸ்வநாத்தும் பெர்ஃபாமென்ஸில் பின்னிவிட்டார். கோர்ட்டில் நீதிபதி மோகன்ராம் முன்பு, கமிட்டி சேர்மன் ஹரிபத்மநாபன்[ பெயரை நல்லா கவனிங்க] தன்னிடம் அத்துமீறியதை சொல்லி வெடிக்கும் சீனில் அப்ளாஷ் அள்ளுகிறார் சிந்தூரி விஸ்வநாத்.
நீதிபதிகளாக ரங்கராஜ் பாண்டே, மோகன்ராம் ஆகிய இருவரும் நடித்திருந்தாலும் ஆதிராவின் வழக்கை மோகன்ராம் விசாரிக்க ஆரம்பித்த பிறகு தான் படத்தில் வசனம் அனல் பறக்கிறது. கார்ப்பரேட் காவாலிகளின் விளையாட்டான கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வாரியம் என்பது அரசாங்க அமைப்பு அல்ல, அது தனியார் நிறுவனம் தான் என்பதையும் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கார் டைரக்டர் தென்பாதியான்.
“விளையாட்டுங்கிறது சாதாரணமல்ல, அது நமக்கான விடுதலை”, “இங்கே வாழ்றதுக்குத் தான் போராட்டம்னா, ஓடுறதுக்கும் போராட்டம் தான்”, நாங்க போட்டிக்குப் போனா ஜெயிச்சுருவோம், ஆனா போட்டிக்குப் போறதே போராட்டமா இருக்கு” இது போன்ற உயிருள்ள வசனங்களைக் கேட்டு ரொம்ப நாளாச்சு. சபாஷ்… சகோதரா தென்பாதியான்.
அட்வகேட் ஜெனரல் ஆண்டாளாக விஜி வெங்கடேஷின் அலட்சியம், திமிர் இந்த இரண்டும் கலந்த பார்வை, நீதிபதி மோகன்ராமின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பம்முவது என விஜி வெங்கடேஷ், வெல்டன் வெங்கடேஷ். “இந்த நாட்டையே காப்பாற்றும் கார்ப்பரேட் முதலாளிகள்” என அவர் பேசும் இந்த ஒத்த வசனத்தால் ஒன்றியத்தையே கிழித்துவிட்டார் தென்பாதியான். நீதிமன்ற நடைமுறைகளையும் அப்பட்டமாக்கிவிட்டார் டைரக்டர் தென்பாதியான்.
கேஜேஆரின் அம்மாவாக வரும் ரமா, தங்கையாக வரும் அந்த சிறுமி, கோச் வசுந்தரா என எல்லாகேரக்டர்களுமே அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள். கேஜேஆரின் குடிசை வீடு, நீதிமன்றம் இவற்றை நிஜம் என நம்புமளவுக்கு செட் போட்டு உழைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ராமுதங்கராஜ்.
ஏ.விஸ்வநாத்தின் கேமரா, ஓட்டப்பந்தய மைதானங்களிலும் சேரிப்பகுதிகளிலும் , சில இரவுக்காட்சிகளிலும் மிக நேர்த்தியாக படம் பிடித்துள்ளது. வைக்கம் விஜயலட்சுமி குரலில் “சட்டச் சட்ட சான்றோரே…மெத்தப் படித்த மேலோரே” பாடலிலும் பின்னணி இசையிலும் ஜிப்ரான் ஜொலிக்கிறார். குறிப்பாக இராஸ்தான் மைதானத்தில் கேஜேஆர் ஓடும் சீனில் ஜிப்ரானின் பின்னணி இசைசிலிர்க்க வைக்கிறது.
மேம்பட்டவர்களுக்கே அரசாங்கத்தின் விளையாட்டு மேம்பாடுத்துறை. திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அல்லாடும் ஏழ்மை வீரர்களின் வாழ்க்கையில் அது விளையாடும் துறை.
இந்த சினிமாவிற்கு கண்டிப்பாக மக்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.
அங்குசம் பார்வையில் ‘அங்கீகாரம்’ 68/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.