அங்குசம் பார்வையில் அஞ்சாமை !
அதிலும் ஒரு மாணவி, “எனக்கு பீரியட்னு தெரிஞ்சும் நாப்கினைக் கூட கழட்டச் சொன்னாங்க” எனக் கதறியழும் காட்சி நமக்குள் கொலை வெறியைத் தூண்டுகிறது.
அங்குசம் பார்வையில் ‘அஞ்சாமை’
தயாரிப்பு: ’திருச்சித்ரம்’ டாக்டர் எம்.திருநாவுக்கரசு எம்.டி. வெளியீடு : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு. டைரக்ஷன்: எஸ்.பி.சுப்புராமன். நடிகர்—நடிகைகள்: விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், விஜய் டி.வி.ராமர், தான்யா. தொழில்நுட்பக் கலைஞர்கள்– பாடல்கள் இசை: ராகவ் பிரசாத், பின்னணி இசை: கலா சரண், ஒளிப்பதிவு: கார்த்திக், எடிட்டிங்: ராம் சுதர்சன், காஸ்ட்யூம் டிசைனர்: சிவபாலன், மேக்-அப்: சந்துரு. பி.ஆர்.ஓ.ஜான்சன்.
திண்டுக்கல் காந்திகிராமத்தில் தெருக்கூத்துக் கலைஞன் சர்க்கார் [ விதார்த் ]. இவரது மனைவி சரசு [ வாணி போஜன் ]. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும். மகன் அருந்தவம் [ கிருத்திக் மோகன் ] அப்பாவைப் போலவே தெருக்கூத்துக் கலையில் ஆர்வமாக இருக்கிறான். ஆனால் சரசுவோ, கணவனிடம் கடுமைகாட்டி, சண்டை போட்டதால், அருந்தவத்தை அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கிறார் சர்க்கார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் வருகிறான் அருந்தவம். இதைத் தெரிந்து கொண்ட தனியார் பள்ளி முதாலாளி ஒருவன், அருந்தவத்தை தனது பள்ளியில் சேர்க்க வலைவிரிக்கிறான்.
ஆனால் சர்க்காரோ.. மகனை அரசுப்பள்ளியிலேயே படிப்பைத் தொடர வைக்கிறார். ப்ளஸ் டூ படிக்கும் போதே லட்சக்கணக்கில் கடன்பட்டு நீட் கோச்சிங் செண்டரில் அருந்தவத்தை சேர்க்கிறார் சர்க்கார். ப்ளஸ் டூவிலும் நல்ல மார்க் எடுக்கிறான் அருந்தவம். இவனுக்கு நீட் தேர்வு மையம் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கிடைக்கிறது. மகனின் டாக்டர் கனவை எப்படியாவது நனவாக்கிவிட வேண்டும் என்பதற்காக, மகனுடன் மதுரையிலிருந்து ஜெய்ப்பூர் கிளம்புகிறார் சர்க்கார். இடையில் திருச்சி ஜங்ஷனில் ஒரு தாயும் [ ரேகா நாயர் ] மகளும் அதே ஜெய்ப்பூர் நீட் எக்ஸாம் செண்டருக்குச் செல்ல ரயில் ஏறுகிறார்கள்.
எக்ஸாம் செண்டருக்குள் தனது மகனையும் அந்த திருச்சி மாணவியையும் அனுப்பிவிட்டு, வெளியில் காத்திருக்கிறார்கள் சர்க்காரும் அந்த திருச்சிப் பெண்ணான ரேகா நாயரும்.
பசியும் தாகமும் வாட்டி வதைத்ததால், உச்சி வெயில் மண்டையைப் பொளக்கும் நேரத்தில் உணவு வாங்க ஜெய்ப்பூர் நகருக்குள் வருகிறார் சர்க்கார். பசி மயக்கம், மன அழுத்தம் இரண்டும் சேர்ந்து நடுரோட்டில் சர்க்காரை சாய்க்கிறது. நீட் தேர்வு எழுதப் போன அருந்தவம், தந்தையின் உடலுடன் காந்திகிராமம் வருகிறான்.
தனது தந்தையின் சாவுக்குக் காரணமே இந்தக் கொடிய அரக்கன் நீட் தான், அதைக் கொண்டு வந்த அரசாங்கம் தான் என்பதை போலீசில் புகாராகக் கொடுத்து, அதை மதுரை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்று போராடுகிறான் அருந்தவம். அவனுக்கு நீதி கிடைத்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் துணிச்சலுடன் வந்திருக்கும் இந்த ‘அஞ்சாமை’.
சர்க்காராக விதார்த். இந்த மனுசனோட சினிமா வாழ்க்கையிலேயே இதான் உண்மைக்கு நெருக்கமான நல்ல சினிமா என நிச்சயமாகச் சொல்லலாம். மகனின் டாக்டர் படிப்புக்கு தோள் கொடுத்து நிற்கும் பாங்கு, பரிவு, மகனுக்காக தெருக்கூத்துக் கலையையை கைவிட்டுவிட்டு, பூந்தோட்டத்தில் விவசாயம் பார்ப்பது, ஜெய்ப்பூருக்கு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணிக்கும் போது, ஜெய்ப்பூர் ரோட்டில் மயங்கிச் சரியும் போது என மனுசன் சர்க்காராகவே வாழ்ந்து ஆப்கி மோடி சர்க்காருக்கு சகட்டுமேனிக்கு சவுக்கடி கொடுத்துவிட்டார் விதார்த். இதற்காகவே விதார்த்துக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களும் கோடானு கோடி நன்றிகளும்.
சர்க்காரின் மனைவி சரசுவாக வாணி போஜன். இவர் நடித்த படங்களில் இதுதான் படம். இதுபோன்ற படம் இனிமேல் இவருக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். கழுத்தில் வெறும் மஞ்சக் கயிறு மட்டும் கிடந்தாலும் பிள்ளைகளின் கல்விக்காக நடுத்தர வர்க்கத்தின் தாய் படும் கஷ்டங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து உருக வைப்பதிலும் கணவனின் உடல் ஊருக்குள் வந்து ஆம்புலன்சிலிருந்து இறக்கியதும் வெடித்து அழுவதிலும் அவனின் இறப்புக்குப் பின்னும் கணவனின் சாவுக்கும் மகனின் கல்விக்கும் நீதி கிடைக்க வைராக்கியத்துடன் கோர்ட்டில் நிற்கும் காட்சியிலும் நம்மை கலங்க வைத்துவிட்டார் வாணி போஜன்.
இதற்கடுத்த இரண்டு முக்கிய கேரக்டர்கள் என்றால், அருந்தவமாக வரும் கிருத்திக் மோகனும் இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீல் மாணிக்கமாக வரும் ரகுமானும் தான். நீட் கோச் கொள்ளையர்கள், அந்தக் கொள்ளையர்களுக்குத் துணை போகும் சட்டம், அந்த சட்டத்தை அமல்படுத்திய அரசாங்கம், கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரி என சகலரையும் மதுரை உயர்நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்றி கிடுகிடுக்க வைக்கிறார் ரகுமான். எளிய மனிதர்களின் வலியை ரகுமான் ஆவேசமாகப் பேசும் பொழுது, நமக்குள் உணர்ச்சி ஊற்று பெருக்கெடுத்து ஓடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உண்மை. ரகுமானின் டயலாக் மாடுலேஷன் தான் சில இடங்களில் அன்னியத்தனமாகத் தெரிகிறது.
ரகுமான் பேசும் கிடுக்ககிடுக்க வைக்கும் வசனங்களை எழுதி, சர்வாதிகாரக் கொள்ளைக் கூட்டத்தை நடுநடுங்க வைத்த டைரக்டர் சுப்புராமன் மிகவும் பாராட்டுக்குரியவர். நாடகத்தில் சர்க்கார் பாடும் “யார்டா நீங்க, எங்கிருந்துடா வர்றீக” என்ற அறிமுகப் பாடலிலேயே அதிர வைத்துவிட்டார் டைரக்டர். ”உங்களுக்குத் தெரிஞ்ச சீதா வேற. டாக்டராகணும்கிற லட்சியத்துடன் தான் ப்ளஸ்டூவிலேயே அதற்கான பாடத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு மாணவன் படிக்கிறான். அப்புறம் தனியா எதுக்குடா நீட் வைக்கிறீக? இந்த நீட் வந்த பிறகு தாண்டா, அரசாங்கப் பள்ளியில் படித்த மாணவர்கள் வெறும் ஏழு பேர் தாண்டா பாஸாகிருக்கான். சர்க்கார் மரணம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் [ இதற்காவே ஹீரோவின் கேரக்டருக்கு சர்க்கார்னு பேரு வச்சிருப்பார் போல]`
நீட் எக்ஸாம் செண்டருக்குள் நுழைவதற்கு முன்பு, மாணவ—மாணவிகளை கொடூரமாக செக் பண்ணும் காட்சியை நாம் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் நாம் பார்க்கும் போது நம்மை பதைபதைக்க வைக்கிறது. அதிலும் ஒரு மாணவி, “எனக்கு பீரியட்னு தெரிஞ்சும் நாப்கினைக் கூட கழட்டச் சொன்னாங்க” எனக் கதறியழும் காட்சி நமக்குள் கொலை வெறியைத் தூண்டுகிறது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கும் பாடல்களுக்கு இசையமைத்த ராகவ் பிரசாத்தும் பின்னணி இசையமைத்த கலாசரணும் இந்த அஞ்சாமைக்கு உயிர் கொடுத்தவர்கள் என்றால் அது மிகையில்லை.
மதுரையிலிருந்து ஜெய்ப்பூருக்குப் பயணிக்கும் ரயிலில் தேசியக் கொடி, எக்ஸாம் செண்டரில் ‘ஸ்வச் பாரத்’ குப்பைத் தொட்டி, இளைஞர்களை மிக்சர் கடை வைக்கச் சொல்வது என படம் முழுவதும் தனது அகக்குறியீடுகளை திரையில் காட்டி, இவர் நம்ம ஆளு என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார் டைரக்டர் சுப்புராமன். இவரின் அடுத்தடுத்த படங்களில் இதை மேலும் உறுதிப்படுத்தி நிரூபிப்பார் என்று நம்புவோம். தடம் மாறினால் வெளுத்துக்கட்டுவோம்.
எளிய மக்களுக்கான இந்த ‘அஞ்சாமை’யை துணிச்சலுடன் தயாரித்த டாக்டர் திருநாவுக்கரசு அவர்களுக்கும். நீட் எக்ஸாம் முடிந்து ரிசல்ட் வந்திருக்கும் இந்த நேரத்தில். இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்த எஸ்.ஆர்.பிரபுவுக்கும் நன்றி..நன்றி..நன்றி…
மதுரை மாறன்