குடியரசு தினத்தில் வெளியான அறிவிப்பு ! குஷியில் போலீசார் ! அசத்திய அருண் ஐ.பி.எஸ்.!
காவல்துறையில் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருக்கும் நிலையில், ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் உள்ள காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து காவலர் ஆளிநர்களையும் குஷிப்படுத்தும் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் ஐ.பி.எஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர காவல்துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய காவல் ஆளிநர்களின் வயது மூப்பையும், தங்ககளது நீண்ட பணிகாலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும் கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, வரும் காலங்களில் 59 வயதை எட்டும் காவல் ஆளிநர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஒரு வருட காலத்துக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வெறுமனே உத்தரவுகளையும், கட்டளைகளையும் மட்டுமே பிறப்பிக்காமல், காவலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் உணர்ந்து தமிழகத்தில் முன்மாதிரியாக அருண் ஐ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிவிப்பு, சென்னை மாநகரத்தில் பணியாற்றும் போலீசாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து காவலர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.