தேசிய நெடுஞ்சாலைகளில் அரளிச்செடி – ஆமணக்குச்செடியும், பனைமரமும்
தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைத் தடுப்பதைத் தவிர காற்று மாசு அளவைக் குறைப்பதில் எந்த வகையிலும் பயன்படுவதாகத் தெரியவில்லை. எதன் அடிப்படையில் அரளிச்செடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரைக்கிறது என்பதற்கு வலுவான ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. யாராவது ஒரு அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ ராசியான வண்ணமாக, பிடித்த செடியாக இருந்திருக்கக்கூடும் என்ற அளவில் அதை முடித்துக்கொள்வோம்.
காற்றில் கார்பன் மோனாக்சைடு, தூசிகளின் அளவு அதிகரிக்கும்போது முதலில் பாதிக்கப்படுவது இலைகளில் உள்ள பசுங்கனிகம் (குளோரோபிளாஸ்ட்). அதிலுள்ள பச்சையம் (குளோரோஃபில்) அளவு குறையும்போது ஒளிச்சேர்க்கை குறைவதால் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் வெளியிடும் திறன் குறைகிறது.
ஒப்பீட்டளவில் காகிதப்பூ செடி அரளியைவிட காற்று மாசு அளவு கூடும்போது நன்றாக தாக்குப்பிடிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். காகிதப்பூச்செடியை விடவும் காற்று மாசைத் தாங்கக்கூடிய செடிகள் சில உண்டு என்றாலும் அவை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல என்பதால் மேற்கொண்டு அலசத் தேவையில்லை.
அரளிச்செடியின் எந்த ஒரு பாகத்தையும் காய வைத்துக்கூட பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவே கூடாது. தொழில்முறை சித்த மருத்துவர்கள் விதிவிலக்கு. அரளிக் குச்சிகளை வைத்து அடுப்பு எரிக்கவோ, கறி வறுக்கும்போது கிளறவோ பயன்படுத்தக்கூடாது.
நல்லவேளையாக அரளிச்செடியில் (Nerium oleander) மதுரமும், மகரந்தமும் பெரிய அளவில் கிடையாது என்பதால் தேனீக்கள் சீண்டுவதில்லை. பல தேனீ பண்ணைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன. சிக்கிம், நாகாலாந்து மாநிலங்களின் அடையாள மலர் ரோடோடென்ரான் (Rhododendron). நேபாளத்தின் இமயமலை அடிவாரத்தில் பூக்கக்கூடிய அழகான மலர்கள் இவை. இந்த ரோடோடென்ரான் மலர்கள் பூத்துள்ள பகுதியில் மட்டும் தேனீ பெட்டிகளை வைத்து தேன் எடுக்கிறார்கள். இது உலக அளவில் விணீபீ பிஷீஸீமீஹ் என்ற பெயரில் பிரபலமானது. இதைக் குடித்தால் சில மணி நேரங்களுக்கு மனப்பிரள்வு (Hallucination – தமிழில் என்ன பொருள்?) ஏற்படுவதால் இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கையில் ஊற்றி நக்குகிறார்கள்.
Mad Honey அப்படியொன்றும் அற்புத மருந்தெல்லாம் அல்ல. அதைக் குடித்தால் ஆண்மை பெருகிறது என்ற நம்பிக்கை காரணமாக 40+ வயது ஆண்களே இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இது ஆன்ட்ரோமீடோடாக்சின் (Andromedotoxin) வகையில் வரும்.
Mad Honey மட்டுமல்லாது அமுக்கிராங்கிழங்கு உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள், புனுகுப்பூனை, மான்கொம்பு, புலியின் விதைப்பை என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் “ஆண்மையைப் பெருக்கும்” சந்தையில் உண்டு. சிலாஜித் எடுக்கிறோம் என்ற பெயரில் இமயமலையைச் சுரண்டி விற்கிறார்கள். ஆனால் சந்தையில் இருக்கும் முக்கால்வாசிசிலாஜித் போலியானவை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அண்மையில் சித்த மருத்துவர் என்ற பெயரில் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அரை டம்ளர் மோரில் இரண்டு சொட்டு ஊமத்தை இலைச்சாற்றை விட்டுக் குடித்தால் பேதி நிற்கும் என்று சொன்னதாகத் தெரியவந்தது. இந்த மாதிரியான ஆலோ சனைகளை உண்மையான மருத்துவர்கள் சமூக ஊடகங்களில் வழங்குவது சந்தேகமே.
ஆங்கிலேயர் இந்தியா வை ஆட்சி செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது வகை வகையான கொள்ளைக்கூட்டங்கள். அதில் ஊமத்தைக் கொள்ளையர்கள் என்று ஒரு வகை.
வெளியூர் சென்றுவரும் வியாபாரிகள், அரண்மனை ஊழியர்கள், கோவிலுக்கு புனித யாத்திரை செல்பவர்களிடம் சாதாரண வழிப்போக்கர்கள் போலப் பழகி தண்ணீர் அல்லது பாலில் ஊமத்தை (Datura) விதைப் பொடியை கலந்து கொடுத்துவிட்டு, அவர்கள் மயங்கியதும் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களைத் தேடித்தேடி பிடித்து தூக்கில் போட்டிருக்கின்றனர். Datura poisoning என்று கூகுலிட்டுப் பார்க்கலாம்.
ஊமத்தை இலை, விதைச் சாறு, பொடி போன்றவை மட்டுமல்ல, எருக்கு, அரளி என பலவகையான செடிகளும் மருந்துப் பொருட்கள் செய்ய உகந்தவை. ஆனால் அதற்குக் கடுமையான பயிற்சியும் அனுபவமும் தேவை. சும்மானாச்சிக்கி பேஸ்புக் பதிவில் ஊமத்தைச் சாறு குடியுங்கள், கள்ளிப்பாலை கண்ணில் இரண்டு சொட்டு விட்டால் சாலேஸ்திரம் குறையும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் போலி மருத்துவர்களே.
செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் அடையாள மலர். விடுதலைப் புலிகளின் அடையாள மலரும் இதேதான். கண்வலிக் கிழங்கு என்று சொல்வார்கள். அதன் விதை இன்று பல கோடிக்கு ஏற்றுமதியாகிறது. அதிலிருந்தும் மருந்துதான் எடுக்கிறார்கள். ஆனால் அந்த விதையை அரைத்துக் கொஞ்சம் குடித்தாலும் சாவுதான்.
இன்று எங்கு திரும்பினாலும் பாரம்பரிய அறிவு நிபுணர்கள். இவர்கள் சொல்வதெல்லாம் அதை அரைத்துக் குடி, இதை காயவைத்து சாப்பிடு, அதைப் பிழிந்து பூசு, இதை இடித்துக் கலக்கி விழுங்கு என்று ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார்கள். கொஞ்சம் எகிறி னாலும் கிட்னி போய்விடும், அப்புறம் ஒவ்வொரு உறுப்பாக ஒத்துழையாமை செய்யும் என்கிற எச்சரிக்கை வாசகம் கூட சொல்வதில்லை. செடி கொடிகளிலிருந்து வருவதை அப்படியே கொடுத்தால் பின்விளைவுகளே இருக்காது என்று அப்படியே நம்புகிறார்கள் நம் மக்கள்.
இந்தியாவிலிருந்து சில நூறு கோடிகளுக்கு ஏற்றுமதியாகும் பல்வேறு தாவரங்கள் மருந்துப் பொருட்களாகி சில ஆயிரம் கோடி மதிப்பில் திரும்ப வருகின்றன. இங்கே அவற்றை ஆராய்ச்சி செய்வதுகூட வேண்டாம். அப்படியே reverse engineering செய்து அதே மருந்துகளை சீனா போல அப்படியே உற்பத்தி செய்யக்கூட நாம் தயாரில்லை. Ayush என்கிற ஆமை டிபார்ட்மெண்ட்க்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தைத் பத்து கம்பெனிகளுக்கு மானியமாக வழங்கினாலே பெரிய புரட்சி ஏற்பட்டுவிடும்.
Coming back to the அரளிச்செடி. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை மறைக்க ஆமணக்குச் செடியும், ஐந்தடிக்கு ஒரு பனை மரமும் நட்டு வைத்தால் நாட்டில் விளக்கெண்ணைப் புரட்சியும், வாகனங்கள் center median-த் தாண்டி வந்து விபத்து ஏற்படுவதுமாவது தடுக்கப்படும். லாரி வைத்து அரளிச்செடிகளுக்கு ஊற்றப்படும் பல இலட்சம் லிட்டர் தண்ணீருக்கும் தேவையிருக்காது.
-ஆர்.எஸ்.பிரபு