நட்டத்தில் ஓடுதா போக்குவரத்து கழகங்கள்?
நட்டத்தில் ஓடுதா போக்குவரத்து கழகங்கள்?
போக்குவரத்து கழகங்களின் நிலை குறித்தும், வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை என்ன என்பது குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி…
நாட்டின் வளர்ச்சிக்கும். முன்னேற்றத்திற்கும் போக்குவரத்து வசதி அடிப் படை தேவையாகும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது. தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்து கழகங்கள் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றன.
போக்குவரத்து கழகங்கள் நஷ்டமா?
போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10.000-க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது.
தமிழ்நாட்டு மக்களின் பயண உரிமையைப் பறிக்கும் முயற்சி!
மக்களுக்கு சிறப்பாக சேவை செய்துவரும் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. 2017ம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப் படவில்லை.
சுமார் 20.000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறை யால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஒட்டு மொத்தமாக கடந்த 5 ஆண்டு களில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பயண உரிமை மறை முகமாக பறிக்கப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் அவலம்!
கழகங்கள் சீர்குலைக்கப் படுவதுடன், ஊழியர்களும் வஞ்சிக்கப் படுகின்றனர். ஊழியர்களின் எதிர்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை ரூ.13,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்த 90,000 ஓய்வூதியர்கள் வயதான காலத்தில் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
ஓய்வூதியம் இனாமா?
வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கையின் ஆதாரமே ஓய்வூதியம்தான். ‘இது சலுகை அல்ல, உரிமை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத்திட்டம் என்ற பெயரால் ஓய்வூதியத்தை ஒன்றிய அரசு பறித்தது.
எனவே. 2003-க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை. 01.04.2003-க்கு பின் பணியில் சேர்ந்து மரணமடைந்த. பணி ஓய்வுபெற்ற 4000 ஊழியர்களின் குடும்பங்கள் வீதியில் தூக்கி எறியப்பட்டுள்ளது ” என்பதாக, பொதுமக்களிடையே கோரிக்கையை முன்வைக்கிறது, அந்த துண்டறிக்கை.
– அங்குசம் செய்திப்பிரிவு