விருதுநகர் – கள்ள துப்பாக்கி விற்ற ஆயுதப்படை காவலர் கைது !
விருதுநகர் அருகே திருடிய நகையை வைத்து கள்ள துப்பாக்கி வாங்க முயற்சி ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், பட்டம்புத்தூர், தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆசிரியர் காலணியில் கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் நீண்ட நேரமாக மது போதையில் நின்று கொண்டு துப்பாக்கி விற்பனை மற்றும் திருடப்பட்ட நகை பிரிப்பது தொடர்பாக பேசி வந்துள்ளனர்.

இதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். போலீசார் வருவதை பார்த்து அந்த இரண்டு நபர்களும் இருசக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.

வெகு தூரம் துரத்தி சென்ற போலீசார் தப்பி செல்ல முயன்ற ஒருவரை மட்டும் பிடித்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் பெட்ரோல் டேங்க் கவரில் 40 பவுன் தங்க நகை ரூ.50 ஆயிரம் ரொக்கம் கள்ளத் துப்பாக்கி ஒன்று அதில் 6 தோட்டாக்கள் போட்டு பயன்படுத்தப்படும் அந்த துப்பாக்கியின் உள்ளே 5 தோட்டாக்கள் மட்டுமே இருந்துள்ளது.

பிடிபட்ட நபரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்ரீவில்லிபுத்தூர், கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி (33) என்பதும் இவர் விருதுநகர் ஆயுதப் படையில் (2013 ஆம் ஆண்டு முதல்) காவலராக பணியாற்றி வருவதாகவும், இவர் மேல் ஏற்கனவே மணல் திருட்டு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கிடையில் தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் கைது செய்து அவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் உள்ள வீடுகளில் நகை திருட்டில் ஈடுபட்டு அங்கிருந்து தப்புவதற்காக இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து திருடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொள்ளையடித்த நகைகளை வைத்து கள்ளத் துப்பாக்கி வாங்குவதற்காக திட்டம் திட்டி உள்ளார்.
இதற்காக ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்து நகைகளை கொடுத்து கள்ளத் துப்பாக்கியை வாங்க திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளத் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது இந்த குற்ற செயலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை விருதுநகர் டி.எஸ்.பி யோகேஷ் குமார், தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.