தமிழ்நாடு அரசு – சிங்காரவேலர் விருது பெற்ற தேனி மு.சுப்பிரமணிக்குப் பாராட்டு விழா !
“பதினாறு அடி பாய்ந்த சுப்பிரமணி” பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் வாழ்த்துரை
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது (2010), தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது (2022) ஆகிய விருதுகளைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்றிருக்கும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குப் பாராட்டு விழா, தேனி, பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஓட்டல் இன்டர்நேசனல் கூட்ட அரங்கத்தில் 08.02.2025ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இப்பாராட்டு விழாவிற்குத் தேனித் தமிழ்ச்சங்கத் தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தனர். இவ்விழாவில் தேனி மு.சுப்பிரமணி அவர்களின் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பின் நெறியாளர், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் மேனாள் தமிழ் இணைப்பேராசிரியர் விருது பெற்ற சுப்பிரமணி அவர்களை வாழ்த்தி பேசினார்.
“தமிழ்நாடு அரசின் விருது பெற்றுள்ள என் வழிகாட்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் அஞ்சல் வழி விண்ணப்பம் அனுப்பி எம்.பில்.பட்டத்திற்குப் பதிவு செய்து கொண்டவர். ஆய்வை முடிக்கும் வரை நெறியாளர் பொறுப்பில் இருந்த நானும், ஆய்வு மாணவர் பொறுப்பிலிருந்த சுப்பிரமணியும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டது கிடையாது.
கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவா் பார்த்துக்கொள்ளாமல் அன்பு கொண்டதைப்போல நானும் அவரும் பார்த்துக்கொள்ளாமலே ஆய்வை மின்னஞ்சல் வழி அனுப்பி வைப்பார். அதை நான் திருத்தம் செய்து அனுப்பி வைப்பேன். மிகச்சரியாக திட்டமிட்டபடி ஒருவருடத்தில் ஆய்வை நிறைவு செய்தார்.
எங்களின் நண்பராக இருந்த பேராசிரியர் மணிகண்டன் அவர்கள் திருமணத்திற்குத் திருச்சிக்கு வந்தபோது நாங்கள் முதன்முறையாக சந்தித்து கொண்டோம். நிறைவு செய்யப்பட்ட ஆய்வேட்டிற்குக் கையொப்பமிட்டுக் கொடுத்தேன். ஆய்வு இப்படித்தான் செய்ய வேண்டும். இதை நீக்க வேண்டும். இதைச் சேர்க்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினால், அதை ஏற்றுக்கொண்டு ஆய்வை செய்வார். அத்தகைய உயரியப் பண்பு கொண்டவர்.
இன்றுகூட(08.02.2025) இந்தப் பாராட்டு விழா முகநூல் அழைப்பில் பிற்பகல் 5 மணி என்று நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த நான், பிற்பகல் என்பதை மாலை என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும், மாற்றலாமே என்று பதிவுக்குப் பதில் எழுதியிருந்தேன். சில நிமிடங்களில் பிற்பகல், மாலை என்று மாற்றம் செய்யப்பட்டு, உடனே வெளியிடப்பட்டது. உடன் உங்கள் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குப் பதில் அளித்திருந்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு மாணவராக சுப்பிரமணி இருந்தார் என்றால் இன்றும் அவர் எனக்கு மாணவராக இருக்கிறார். அதுதான் ஆசிரியராக இருந்த எனக்குப் பெருமை. ஆசிரியரும் மாணவருமாக இணைந்து கோவிட் என்னும் பெருந்தொற்று காலத்தில் இணையம் வழி இலக்கியக்கூட்டங்களைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் நடத்தினோம். மாணவர் என்று சுப்பிரமணியை நான் கட்டுப்படுத்த மாட்டேன். மாணவர் பொறுப்பில் சுப்பிரமணி செய்வது எல்லாம் சரியாகவே இருக்கும் என்பதால் நான் மாற்றுக் கருத்து சொல்லமாட்டேன்.
இப்படி ஆசிரியரும் மாணவரும் நல்ல நட்பு கொண்டிருந்தோம். என் அன்பு மாணவர் சிறந்த நூலாராசிரியர் விருது, பிறகு தூயத்தமிழ்ப் பற்றாளர் விருது, தற்போது சிங்கராவேலர் விருது ரூ.2 இலட்சம் பொற்கிழியுடன் பெற்று இருக்கிறார். தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த என் மாணவர் சுப்பிரமணியைத் தேனி மாவட்டமே பாராட்டுகின்றது என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது.
தமிழ்நாடு அரசு – சிங்காரவேலர் விருது பெற்ற
தேனி மு.சுப்பிரமணி
பெருமைமிகு விழாவில் சுப்பிரமணியைப் பாராட்டி பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். நான் கடந்த செப்டம்பர் 17ஆம் நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் விருதுடன் ரூ.50ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது. இந்தச் செய்தியை முகநூலில் செய்தியாக சுப்பிரமணி வெளியிட்டார். அப்போதுதான் எல்லாருக்கும் தெரிந்தது, முத்துக்கமலம் பன்னாட்டு இணைய இதழின் ஆசிரியர் சுப்பிரமணிக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு அறிந்துகொண்டது.
தற்போது சுப்பிரமணி அறிவியல் நூல்களை எழுதியமைக்காக தமிழ்நாடு அரசின் சிங்கராவேலர் விருதைப் பெற்றிருக்கிறார். 2 இலட்சம் பொற்கிழியும் பெற்றிருக்கிறார். இதை நான் எப்படி உணர்கிறேன் என்றால், தாய் எட்டடி பாய்ந்து பல்கலைக்கழகத்தில் பெரியார் விருதும் பொற்கிழி 50ஆயிரம் பெற்றது என்றால், குட்டி என்னும் சுப்பிரமணி தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதும் ரூ.2 இலட்சம் பொற்கிழியும் பெற்று 16 அடி பாய்ந்துள்ளது என்றே உணர்கிறேன்.
அதனால்தான் திருச்சியிலிருந்து வந்து தேனியில் வாழ்த்துகிறேன். எழுத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்வது என்பது இயலாத செயல். நல்ல நிதிநிலையோடு சுப்பிரமணி வாழ்கிறார் என்பதைவிட அவர் எழுதிக் கொண்டு மனநிறைவோடு வாழ்கிறார். தன் மகளை கணிதவியல் துறையில் முனைவர் பட்டம் பெறுகிற அளவிற்கு உயர்த்திருக்கிறார். பல நூல்களை எழுதுகிறார். நாளிதழ், வார இதழ்களில் எழுதுகிறார், மலையாள மனோரமா ஆண்டு புத்தகத்தில் எழுதுகிறார். கல்கி இணையத்தில் எழுதுகிறார். இப்படி எழுதிக் கொண்டிருக்கும் சுப்பிரமணி விருதுகளை எதிர்நோக்கி எழுதவில்லை. தன் எழுத்துகளை வணிகமயமாக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விருதுகளைத் தேடி சுப்பிரமணி எழுதவில்லை. விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. அதுதான் சுப்பிரமணிக்குப் பெருமை. வாழ்த்தும் நமக்கும் பெருமை. தேனி சுப்பிரமணி தொடர்ந்து எழுதவேண்டும். விருதுகளுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்று உங்களோடு இணைந்து நானும் நெஞ்சார, மனதார வாழ்த்துகிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.
பாராட்டு விழாக் கூட்டத்தினைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர், தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், காய்கனிச் சிற்பக் கலைஞருமான கலை வளர் மணி மு. இளஞ்செழியன். பாராட்டு விழாவில் இணைப்பு உரை வழங்கி சிறப்பித்தவர் காரைக்குடி சிவச்சாரியார் பழ.பாஸ்கரன்.
— ஆதவன்.