சட்ட விரோதமாக யானை தந்தத்திலான பொருளை விற்ற புகாரில் திருச்சி ஆயுதப்படை போலீசு எஸ்.ஐ. அதிரடி கைது !
யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பணை செய்ததாக எழுந்த புகாரில் திருச்சி மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யானை தந்தத்தாலான பொருட்களை சட்டவிரோதமாக விற்பணை செய்பவர்களின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், மேற்படி சட்டவிரோத விற்பணையில் ஈடுபட்ட சில நபர்களை விழுப்புரம் வன சரக அதிகாரிகள் கடந்த நவம்பர்14 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலிருந்து, திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதையறிந்து, அவரை அவ்வழக்கில் 13-ஆவது குற்றவாளியாக சேர்த்தனர்.
குற்றவழக்கில் எதிரியாக அவரது பெயர் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதலாக, உதவி ஆய்வாளர் மணிவண்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி, விழுப்புரம் வன சரக போலீசார் விசாரணைக்கு ஆஜராக கோரி, உதவி ஆய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இதன்படி, டிசம்பர்-16 ஆம் தேதி அவர் ஆஜராகியிருந்த நிலையில், விழுப்புரம் வன சரக அலுவலகத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மேற்படி குற்ற சம்பவத்தில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதும், அவர்தான் அவரது உறவினரிடமிருந்து மேற்படி யானை தந்தங்களை பெற்று விற்பணைக்கு அனுப்பி வைத்திருப்பதும் உறுதியானது. குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவரை உடனடியாக கைது செய்த விழுப்புரம் வன சரக அதிகாரிகள் மணிவண்ணனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், போலீசாக பணியில் சேர்ந்த நாள் முதலாகவே ஆயுதப்படையில்தான் பணியாற்றி வந்ததாக போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். பணி மூப்பின் அடிப்படையில் உதவி ஆய்வாளராக தற்போது பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்ற புகாரில் போலீசார் ஒருவர் கைதான சம்பவம் சக போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில், இலஞ்சம் வாங்கியது உள்ளிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போலீசார்கள் மீதும் தயவுதாட்சயண்யமின்றி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் எஸ்.பி.வருண்குமாரின் அதிரடி நடவடிக்கைகளால் ஏற்கெனவே பீதியில் இருக்கும் போலீசார் மத்தியில், இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
– ஆதிரன்.