“அன்பில் அவன்“ பட விழாவில் அசோக் செல்வனின் உருக்கமிகு பேச்சு!
ஐங்கரன் கருணாமூர்த்தி, அபிநயா செல்வம், அசோக்செல்வன் ஆகியோரின் தயாரிப்பில் கார்த்திகேயன் டைரக்ஷனில் உருவாகி, வரும் 25-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘அன்பில் அவன்’. இதில் அசோக்செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : கெளதம் ராஜேந்திரன், இசை : கோவிந்த் வசந்தா, எடிட்டிங் : ஆர்.கே.செல்வா, ஸ்டண்ட்: பீட்டர்ஹெய்ன், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
25-ஆம் தேதி ‘அன்பில் அவன்’ ரிலீசாவதையொட்டி, படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று[செப்.21] இரவு நடந்தது. இதில் அசோக் செல்வனின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் கெளதம் ராம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண், டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அசோக் செல்வனின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்பதால், நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாகத் தான் இருந்தது.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்குப் பின் பேசிய தயாரிப்பாளர்கள் அபிநயா செல்வம், காவ்யா பாண்டியன்[ ஐங்கரன்] ஆகிய இருவரும், “எல்லோரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்தப் படத்தில் இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கைக்கு மீடியாக்களின் சப்போர்ட் ரொம்பவும் அவசியம்” என்றனர்.
கதை எழுதிய ‘போர்த் தொழில்’ விக்னேஷ் ராஜா, கேமராமேன் கெளதம் ராஜேந்திரன், எடிட்டர் செல்வா, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் படத்தின் சிறப்பு, கதையின் விறுவிறுப்பு குறித்துப் பேசினார்கள்.
இதையடுத்து, ஐங்கரன் இண்டர்நேஷனலின் சினிமாப் பயணம், படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக 200 அடி உயரத்தில் இருந்து 70 அடி ஆழமுள்ள பெரிய நீர்ப்பரப்பில் ரொம்பவே ரிஸ்க் எடுத்து அசோக் செல்வன் குதிப்பதற்கு எடுத்த பயிற்சிகளின் த்ரில்லிங் விஷுவல், மியூசிக் டைரக்டர் கோவிந்த் வசந்தாவின் இசைப்பயணம், ஹீரோ ப்ரீத்தி முகுந்தனின் கிராஃப், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் ஆக்ஷன் சீக்வென்ஸ் குறித்து சில நிமிடங்கள் ஓடும் விஷுவல் காண்பிக்கப்பட்டது. படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களை பின்னணிப் பாடகியுடன் இணைந்து லைவ்வாக பாடிஅசத்தினார் கோவிந்த் வசந்தா.

“நான் ரொம்ப டென்ஷனா இருந்தா மச்சான் அசோக்செல்வனைப் போய்ப் பார்ப்பேன். நானும் அவனும் பேசிய சில நிமிடங்களிலேயே எல்லா டென்ஷனும் பறந்து போயிரும். இந்தப் படத்தில் மச்சானின் உழைப்பு பிரமிக்க வைக்குது” என்றார் கெளதம் ராம் கார்த்திக்.
“இந்தப் பட ரிலீசுக்குப் பிறகு பான் இந்தியா ஹீரோவாக அசோக்செல்வன் மாறணும், மாறிருவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. நல்ல கதைகளை செலக்ட் பண்றதுக்காக இரண்டு வருட கேப் விட்டிருந்ர்தான். இனிமே தொடர்ச்சியா அவனின் படங்கள் வருவதைப் பார்க்க ஆவலா இருக்கேன்” என்றார் ஹரிஷ் கல்யாண்.
“என்னுடைய முதல் ஹீரோ அசோக் செல்வன் சார், இன்னும் இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டும்” என்றார் டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து.

”ஹீரோ அசோக் செல்வனும் டைரக்டர் கார்த்திகேயனும் இந்தப் படத்தில் எனக்கு நல்ல ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார்கள்” என்றார் ப்ரீத்தி முகுந்தன்.
“இது வரை படம் பார்த்தவர்கள் எல்லோருமே படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அபிநயா, ஹீரோ அசோக் செல்வனின் நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும்” என்றார் டைரக்டர் கார்த்திகேயன்.
“எனது படம் ரிலீசாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் வருகிறது. வெறுமனே திரையில் வந்து போகாமல், ஒரு படத்தின் போஸ்டரில் எனது பெயர் பெரிதாக வருவதற்கு 100% உழைப்பைக் கொடுக்க வேண்டும் என நினைப்பவன். நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்து ஆதரவாக இருந்தவர் எனது அக்கா அபிநயா செல்வம் தான். “பார்த்துக்கலாம்டா..தைரியமா இருடா…” என நம்பிக்கை வார்த்தைகளை எனக்குள் ஊட்டி வளர்த்த இன்னொரு தாய் தான் அக்கா அபிநயா.

அக்காவின் ஆறுதல்கள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் எனது அம்மாவும் அப்பாவும் தான். இந்தப் படத்தின் பட்ஜெட், கொஞ்சம் அதிகமானதை நினைத்து நான் கலங்கி நின்ற போது வீட்டை அடமானம் வைத்து பெரும் தொகை கொடுத்தவர்கள் எனது அம்மாவும் அப்பாவும் தான். அவர்களின் அன்பில் நான் இருப்பது எனது வாழ்நாள் பெருமையும் கவுரமும்” எனப் பேசிக் கொண்டே வந்த அசோக்செல்வன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி, வார்த்தைகள் வராமல் சில நிமிடம் அமைதியாக நின்றார்.
இதைப் பார்த்த அபிநயாவும் அவரது பெற்றோர்களும் கண் கலங்கினார்கள்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.