வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு புகார்! கோவில் மணியக்காரர் சஸ்பெண்ட் !
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் முதன்மை கோயிலாக உள்ள திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியக்காரராக பழனிவேல் என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணி செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சமயபுரம் கோவிலில் எலக்ட்ரீசியன் பணி செய்வதற்காக முதலில் வந்து பின்னர் கோவிலிலேயே தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால் மணியக்காரராக கோவில் நிர்வாகம் இவரை நியமித்தது.
இந்நிலையில் கடந்த மூன்று வருட காலமாக இவரது வங்கிக் கணக்கில் அளவுக்கு அதிகமான பண பரிவர்த்தனையும், இவரது மனைவி மற்றும் மகனுடைய வங்கிக் கணக்கிலும் அதிகமான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக ஊழல் தடுப்பு பிரிவிற்கு சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேருடைய வங்கிக் கணக்கினை ஆய்வு செய்ததில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு மணியக்காரர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மணியக்காரர் பழனிவேல் மாதம் ஒரு முறை திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை எடுத்ததாகவும் கூறப்படும் நிலையில் ஊழல் தடுப்பு பிரிவினர் நகைக்கடையில் ஆய்வு செய்தபோது உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து மணியக்காரர் பழனிவேல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்த தகவல் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து மணியக்காரர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் கோவில் மணியக்காரர் பழனிவேல் மீதான குற்றச்சாட்டு குறித்த தகவல் கடந்த சில நாட்களாகவே கோவில் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காதுக்கு இந்த செய்தி சென்றதின் அடிப்படையில் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.