ஆம்ஸ்ட்ராங் கொலையின் அடிநாதம் புளியந்தோப்பா ?
ஆம்ஸ்ட்ராங் கொலையின் அடிநாதம் புளியந்தோப்பா ? – பத்து வருசம் முன்ன ஒரு புளியந்தோப்பு DC கிட்ட பேசுறப்ப, அவர் சொன்னது… சென்னைல எல்லா ஏரியாவுலயும் ரவுடின்னு ஒருத்தன் இருப்பான். ஆனா இந்த புளியந்தோப்புல அப்படி யாரும் இல்ல, அதே நேரம் இங்க வீட்டுக்கு வீடு ஒரு ரவுடி இருக்கான் னு சொன்னாரு.
பின் அவர் AIG rank வரை போய் ரிடையர் ஆயிட்டாரு. இப்ப வழக்கறிஞரா இருக்காரு. அவர் சொன்ன அந்த வசனம் மிக முக்கியமானது. அதுதான் உண்மை.
ஆனா அதே நேரத்துல நாங்க சின்ன வயசா இருக்குறப்ப, எங்களுக்கெல்லாம் god fatherஆ ஒருத்தர் இருந்தாரு. நாயுடு எனும் சின்ன கேசவலு எனும் சின்னா… என் ஏழு வயசுல முதல் முதல்ல பாத்தப்ப சபாரி போட்டிருந்தாரு. பாபுஜி ஹரிஜன் சேவ சங்கம்னு இருக்கும். வெறும் காலி இடம்தான்.
அங்கதான் கோலி ஆடுறது, கேரம், கிரிக்கெட் எல்லாம் ஆடுறது. அங்க ஒருநாள் இரவுல கூட்டம் போட்டிருந்தாரு.
அதுக்கு முன்ன ஏதாவது நடந்ததா என நினைவில்ல. அந்த கூட்டம் ஏன்னும் தெரியல. ஆனா தைரியமா இருங்க. கையில கத்தி வெச்சிக்கோங்க. யாரா இருந்தாலும் அடிங்க. பயப்படாதிங்க. நான் இருக்கேன்.
இந்த வார்த்தைகள் மட்டும் நியாபகம் இருக்கு. எல்லாரும் தரைல உக்காந்திருக்க, அவர் நின்னுட்டு பேசிட்டிருந்தாரு. நான் துருதுருன்னு சின்ன வயசு விஜயகாந்த் மாதிரி இருந்ததால, என் கைய பிடிச்சிட்டு பேசிட்டிருந்தாரு.
நான் கேள்விப்பட்ட முதல் ரவுடி சின்னாதான். ராஜாதோட்டம், சுந்தரபுரம், சிவராஜபுரம், ஆசிர்வாதபுரம், குருசாமிநகர், kp park, pk காலனி எல்லாம் புளியந்தோப்பு ஹைரோடுக்கு இந்தப்பக்கம்.
காந்திநகர், கன்னிகாபுரம், ஆட்டுத்தொட்டி, நரசிம்ம நகர் எல்லாம் ரோடுக்கு அந்தப்பக்கம். இன்னைக்கு kp park ஆனந்த், அன்னைக்கு pk காலனி ஆனந்த் என ரவுடிகள் இருந்தாலும், புளியந்தோப்பு ரவுடின்னா சின்னா தான் முதல்ல வர்ற பேரு.
வீடியோ லிங்
வட சென்னைன்னா கேரம், ஃபுட்பால் தான். நான் கேரம் பைத்தியம். நான் கடைசியா கேரம் ஆடினது 2007. ஆனா இந்த 17 வருசத்துல நான் கேரம் aiming பண்ணாத நாளே கிடையாது. (அதாவது கேரம் ஆடுவதுபோல் விரல்களை வைப்பது)
lockdownல கேரம் ஆடலாம்னு carrom board room இருக்கான்னு தேடினா, ஒன்னே ஒன்னுதான் கண்ணுல பட்டுது. அதுலயும் ஆட்களே இல்லை. ஆனா நான் சின்ன வயசுல கேரம் ஆடும்போது குறைந்தது 50 கேரம் போர்டு ரூம் இருந்தது.
அதுல எல்லாத்திலுமே நான் ஆடியிருக்கேன். பெரும்பாலும் எல்லாரும் ஆடுவாங்க. காலைல எட்டு மணிக்கு போய் நைட்டு 12 மணிவரை சோறு தண்ணி இல்லாம பல பல நாட்கள் ஆடியிருக்கேன். பலரும் அப்படித்தான்.
அப்படி கேரம் ஆடுறப்ப ரெண்டு பேரு அடிக்கடி அடிபடும். ஒன்னு சின்னா, இன்னொன்னு மரிய இருதயம். வடசென்னைல பிறந்த மரிய இருதயம் தான் உலகத்தோட அன்னைக்கு சிறந்த கேரம் பிளேயர்.
ஏதோவது ஒரு கேம் சிறப்பா ஆடுனா, ஹே சின்ன மரியா டா, ஜூனியர் மரியா டா ன்னு பாராட்டுவாங்க. கிரிக்கெட் ஆடுறவனுக்கு சச்சின், தோணி எப்படியோ அப்படி கேரம் ஆடுற எங்களுக்கு மரியா எனும் மரிய இருதயம்.
கிரிக்கெட் ஆடுறவன் சச்சின், தோணிய பாக்கவோ, பேசவோ முடியாது. ஆனா நாங்க ஆடின அதே போர்டுல மரியா ஆடி இருக்காரு. அவரை பாக்கலாம். தொடலாம்.
இதுல சோகம் என்னன்னா நான் மரியாவ பாத்ததே இல்ல. ஹே நேத்து ஏன்டா வரல மரியா வந்தாருன்னு சொல்வாங்க. மரியா அந்த டோர்னமெண்டுக்கு போன வாரம் வந்தாருடான்னு சொல்வாங்க.
சார்லி படத்துல துல்கரை தவற விடும் பார்வதி போல, பல வருசம் அப்படியே போச்சு. கடைசியா முதன்முறை நான் மரிய இருதயத்தை பார்த்தது, வடசென்னை படம் பிறகு யூடியூப்லதான். அவர் தான் தனுசுக்கு டிரைனர்.
இன்னைக்கும் யூடியுப் ல கேரம் பாக்குற பழக்கம் உண்டு. சோகம் என்னன்னா சென்னையை சேர்ந்த யாருமே நேஷனல் லெவல்ல இல்ல. பாரதி, சின்ன ராதா, பெரிய ராதா ன்னு இருந்தாலும், பிரசாந்த் மூரே தான் இந்திய கேரமின் இனறைய அடையாளம். டாப் 5 முழுக்க வடநாட்டான் தான்.
வடக்கன் பிரசாந்த் மூரே, சிங்களன் நிஷாந்தா ஃபெர்னான்டோ தான் world top players. ஆனா அவங்களுக்கு இணையான பிளேயர்களை நான் எங்க ஏரியால பாத்திருக்கேன். ரூபன், KD பாபு ன்னு… அதுல ஒருத்தர் பிச்சை எடுத்துட்டு இருக்காரு. (இந்த கதை சம்மந்தமில்லாதது தான். சும்ம சொல்லத்தோணுச்சு)
இது இல்லாம புளியந்தோப்புக்கு இன்னொரு சிறப்பு உண்டு. வீட்டுக்கு வீடு ரவுடி இருக்கானோ, இல்லையோ, தெருவுக்கு தெரு கானா பாடகன் இருப்பான். சென்னை கானாவின் வளர்ப்பிடமே புளியந்தோப்புதான்.
நம்ம கதைக்கு வந்தா சின்னா வசிக்கிற அதே நரசிம்ம நகர்ல வசிக்கிறவன்தான் சுரேஷ் எனும் ஆற்காடு சுரேஷ்.
ஆரம்பத்துல ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தாங்க. சின்னா அப்பவே பெரிய ரவுடி, ஆற்காடு சுரேஷ் அதன் பின் ரவுடி ஆனவன். இருவரும், காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்புவின் சிஷ்யர்கள்.
சென்னை பெண் ரவுடின்னா புளியந்தோப்பு அஞ்சலைதான். கஞ்சா அஞ்சலைன்னு சொல்வாங்க. சொர்ணாக்காவோட inspiration… அந்த அஞ்சலைக்கும் நம்ம சின்னாவுக்கும் ஒரு உறவு. பின் அந்த அஞ்சலையை சுரேஷ் கல்யாணம் பண்ணிட்டான்.
சுரேஷ் உடனான திருமணம் பிறகு அஞ்சலை சின்னா கிட்ட இருந்து விலகிட்டாங்க. ஆனாலும் சின்னா விடல. இதனால சின்னாவுக்கும், ஆற்காடு சுரேசுக்கும் பகை உருவாகுது.
அதில்லாம மற்ற பஞ்சாயத்துக்களிலும் முட்டிக்குது… யார் யாரை தூக்குறது எனும் போட்டியில் சின்னாவை நீதிமன்ற வளாகத்துல வெச்சி ஆற்காடு சுரேஷ் கொலை செய்றாரு. (மெட்ராஸ் படத்துல வர்ற அதே காட்சி) இதே பகுதியை சேர்ந்தவர்கள் தான் தென்னரசு மற்றும் அவர் சகோதரர் பாம் சரவணன்.
தென்னரசு BSPயில் மாவட்ட தலைவராக இருந்தவர். தென்னரசுவிரற்கும், ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வெள்ளை உமாவிற்கும் தகராறு வர, வெள்ளை உமா வை தென்னரசு கொல்கிறார். பின் தென்னரசு ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கி வாழ… அவரை குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொடூரமாக கொல்கிறது ஆற்காடு சுரேஷ் கூட்டம்.
பின் சின்னாவின் வலது கையான, ராதாவை சாய்த்தான், ஆற்காடு சுரேஷ். கடந்த ஆண்டு மெரினாவில் பட்டப்பகலில் கொல்லப்பட்டான் ஆற்காடு சுரேஷ்… கொன்றது தென்னரசுவின் தம்பி பாம் சரவணன்.
இந்த பாம் சரவணனுக்கு ஆம்ஸ்ட்ராங் அடைக்கலம் தருவதாக ஒரு கருத்து உலவுகிறது. ஒரு வழக்கறிஞராக மற்றும் தன்னிடம் அடைக்கலம் தேடி வருபவருக்கு அதை செய்ய வேண்டியது அவர் பொறுப்புதான்.
இந்த காரணத்திற்காக ஆற்காடு சுரேஷ் டீமால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என தகவல்.
தோழர் ஜேகே
வீடியோ லிங்