பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஓட ஓட வெட்டிக் கொலை!
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதன்படி, பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள அவரது வீடு அருகே வைத்து இன்று இரவு 7.30 மணி அளவில் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பியுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் இருந்த இரண்டு பேருக்கும் வெட்டு விழுந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் வடக்கு இணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல வந்து கொலையை அரங்கேற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படுகொலை செய்த மர்ம கும்பலைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பா.ரஞ்சித் அவரது மரண செய்தியை கேட்டு கதறி அழுதார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ்வாதி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் ஆம்ஸ்ட்ராங் மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ”ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார்.
கொலையாளிகளை பிடிக்க போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.