விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை குஷ்பு ? அதியன் பதில்கள் !
நடிகை குஷ்பூ உடல்நலம் சரியில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒதுங்கிக் கொண்டதை நம்ப முடிகிறதா? தற்கால அரசியல் சூழ்நிலையில் ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை’ என்பது யாருக்கு சரியாக பொருந்தும்? கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் மோடி நடத்திய ‘ரோட் ஷோ’ பிசுபிசுத்து விட்டதாமே. இது சொல்லும் செய்தி என்ன?
(2024 ஏப்ரல் 16 – 30 அங்குசம் இதழில் இடம்பெற்ற அதியன் கேள்வி – பதில்
- நெல்லை பாஜக வேட்பாளருக்குக் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி சென்னையில் பிடிபட்டுள்ளதே? பாஜகவும் அப்படித்தானா?
பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் எல்லா தொகுதிகளுக்கும் கட்சி தலைமை தேவையான ’சுவீட் பாக்ஸ்’களை ஏற்கனவே அனுப்பி விட்டது. மாட்டிக் கொண்டது நெல்லை வேட்பாளர் மட்டும்தான். காட்டிக் கொடுத்தது தலைமைதானாம். ED என்னும் அமலாக்கத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.
- வாக்கு சேகரிக்க பலரும் பல வழிமுறைகளைக் கையாள்வது வேடிக்கையாக இல்லையா?
வருத்தமாக உள்ளது. டீ கடையில் டீ ஆற்றுவது, புரோட்டா கடையில் புரோட்டா போடுவது, வடை சுடுவது, துணிகளை அயன் செய்வது என்று பல வழிகளில் வேட்பாளர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தால்தான் இவர்களை நம்பலாம்.
- கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் மோடி நடத்திய ‘ரோட் ஷோ’ பிசுபிசுத்து விட்டதாமே. இது சொல்லும் செய்தி என்ன?
ரோட் ஷோ என்பது பண்ணையார் அரசியல். வாகனத்தில் ஏறிக் கொண்டு 3 கி.மீ. மோடி கையசைத்துக் கொண்டே செல்வராம். மக்கள் வாக்களித்துவிடுவார்களாம். இது வட நாட்டில் எடுபடும். தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் வீடுவீடாக சென்று கைகூப்பி வாக்கு கேட்கவேண்டும் என்ற பண்ணையார் அரசியலை ஒழித்து, மக்கள் அரசியலை முன்னிலைப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்பதை பாஜக மறந்து செயல்படுவதான் பிசுபிசுப்புக்குக் காரணம்.
- தென்சென்னையில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசையின் பிரச்சாரம் எப்படி உள்ளது?
தமிழிசையின் பிரச்சாரம் சூப்பராக உள்ளது. “டீசல் விலை உயர்வு தித்திக்க வைக்கிறது. மண்ணெண்யை விலை உயர்வு மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு பெருமிதம் கொள்ளவைக்கிறது” என்று ரம்மிங்காக பிரச்சாரம் செய்கிறார்.
- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் போட்டியிடுவதன் இரகசியம்தான் என்ன? அதியன் விளக்குவாரா?
ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றால்(?) மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் (?) அவர் மத்திய அமைச்சர் ஆவார் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் எடப்பாடி பக்கமுள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்களை பன்னீர்செல்வம் ஈர்த்து எடப்பாடியின் அரசியல் வாழ்வை முடிப்பது என்பதுதான் பாஜகவின் இராஜதந்திரம் என்கிறார்கள்.
- தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் முந்திக் கொண்ட காங்கிரஸ், பாஜக பின்தங்குவது ஏன்?
பாஜக பின் தங்கவில்லை. ஏப்.16ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. காங்கிரஸ் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளுக்குப் பதில் வாக்குறுதி வழங்கவே பாஜக நேரம் எடுத்துக் கொள்கிறது.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஏழைப் பெண்கள் வாழ்வு உயர ஆண்டுக்கு ஒரு இலட்சம் வழங்கப்படும் என்பது சாத்தியமா?
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் தொகைத் திட்டம் சிறப்பாக செயல்படும்போது ஆண்டுக்கு ஒரு இலட்சம் திட்டமும் சிறப்பாக செயல்படும் என்று நம்புவோம்.
- நடிகை குஷ்பூ உடல்நலம் சரியில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒதுங்கிக் கொண்டதை நம்ப முடிகிறதா?
நம்பமுடியவில்லை. குஷ்பூ சென்னையில் போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். கொடுக்கப்படவில்லை. நேற்று வந்த ராதிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது நான் மட்டும் என்ன “தக்காளி தொக்கா” என்று உடல் நலத்தைக் காரணம் காட்டி பிரச்சாரத்திலிருந்து விலகியுள்ளார் என்றும், அவர் விரைவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்ற செய்திகளும் அடிபடுகின்றன.
- தற்கால அரசியல் சூழ்நிலையில் ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை’ என்பது யாருக்கு சரியாக பொருந்தும்?
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணிக்கே பொருந்தும். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வாய்ப்பு உறுதி என்ற பின்னரே பாஜகவில் இணைந்தார். வாய்ப்பு வழங்கப்படவில்லை. தலைமை முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் சமாளித்து வருகிறார் பாவம்.
- தேனி நாடாளுமன்றத் தேர்தல் குரு டிடிவி தினகரனை எதிர்த்து, சிஷ்யன் தங்கத்தமிழ்ச் செல்வன் போட்டியிடுகின்றரே… யார் வெற்றி பெறுவார்?
குருவை மிஞ்சியே சிஷ்யன் இருப்பான் என்பது முதுமொழி. அப்படி பார்த்தால் சிஷ்யன் தங்கத்தமிழ்ச் செல்வன்தான் வெல்லவேண்டும். முதுமொழி உண்மையாகுமா? என்பதை ஜூன் 4ஆம் தேதி சொல்லும்.
- தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் எப்படி உள்ளது?
திமுக – பாஜக அதிமுகவை எதிர்த்துப் பிரச்சாரம்
அதிமுக – திமுகவை மட்டும் எதிர்த்துப் பிரச்சாரம்
பாஜக – திமுக+காங்கிரஸ் கட்சிகளை மட்டும் எதிர்த்து பிரச்சாரம்
நாம் தமிழர் – திமுகவை மட்டும் எதிர்த்துப் பிரச்சாரம்
- திமுக ஆட்சியின் நலத் திட்டங்களான உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், மாணவ, மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், 100 நாள் வேலைத் திட்டம் போன்றவற்றை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்துவருகின்றதே? சரியா?
நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் மத்தியில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளையும், மாநிலத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து களமாடி வருகின்றது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் திமுகவை மட்டுமே எதிர்த்து நாம் தமிழர் களமாடி வருகின்றது. திமுக சார்பில் நாம் தமிழர் கட்சிக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை என்பதிலிருந்து நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க :