பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது!
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்று, ஊர் ஊராக அறை எடுத்து தங்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், கடந்த வாரம் பள்ளி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. பள்ளி மற்றும் நண்பர்கள் வீடுகளில் பெற்றோர் தேடிப்பார்த்தும் மாணவிகள் இருவரும் கிடைக்கவில்லை. இதனால் பயந்துபோன பெற்றோர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார், காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மாணவிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
பள்ளியைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, மாயமான மாணவிகள் இருவரும் ஆட்டோ ஒன்றில் செல்லும் சி.சி.டி.வி காட்சியை போலீசார் கைப்பற்றினர். ஆட்டோ ஓட்டுநர் குறித்து, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் சென்னை காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கனகராஜ் என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து அவரது மொபைல் எண்ணை வைத்து, தேடியபோது திருப்பூரில் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து கனகராஜ், அவருடன் இருந்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமாரை பிடித்த போலீசார், அவர்களுடன் இருந்த மாணவிகள் இருவரையும் மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவிகள் இருவரையும் காதல் வலையில் வீழ்த்திய கனகராஜ் மற்றும் விஜயகுமார், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். 3 நாட்களாக கும்பகோணம், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு மாணவிகளை அழைத்துச் சென்று, விடுதிகளில் அறை எடுத்து தங்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதை அடுத்து மீட்கப்பட்ட மாணவிகள் இருவரையும் பெற்றோரிடம் ஒப்படைத்த கண்ணகி நகர் போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் மற்றும் விஜயகுமார் மீது போக்சோ சட்த்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.