அங்குசம் பிளாஸ்ட் 15.10.2026 – 21.10.2026

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அமைச்சரின் பெயரில் பெரும் வேட்டை !

அதிரடிக்கு பெயர் போன, ஜெயில் துறையின் விரைப்பான உயர் அதிகாரி தனது பதவி காலத்தில், பணியிட மாற்றம் என்ற பெயரில் சிறைக்காவலர்களை பந்தாடிய விவகாரம் சர்ச்சையானது. பிள்ளைகளை அக்கம் பக்கமாக உள்ள பள்ளிகளில் பணம் கட்டி சேர்த்துவிட்ட பிறகு வந்து சேர்ந்த பணி மாறுதல் உத்தரவால் கதிகலங்கி போனார்கள். பெண்டாட்டி பிள்ளைகள் ஒரு பக்கம், இவர் ஒரு பக்கம். போன இடத்திலும் தங்க வசதியில்லாமல் சிறை கைதிகளோடு கைதிகளாக படுத்து தூங்கிய அவலத்தையும் எதிர்கொண்டார்கள். இந்நிலையில், ஆட்சி மாற்றத்தையடுத்து பழைய இடம் இல்லாட்டியும் கொஞ்சம் பக்கமா பார்த்து போடுங்கள் என்று கோரிக்கையோடு துறை அமைச்சரை பார்க்க சென்றவர்களிடம், தலைக்கு 3 முதல் 5 எல் வரை பெரும் வசூல் வேட்டையே நடத்தியிருக்கிறதாம் ஒரு குரூப்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கூட்டணி அமைச்சரை குளிர்வித்த எம்.எல்.ஏ. !

முக்கியமான முஸ்லீம் கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளவரும், ஆளும் கட்சியின் கூட்டணி அமைச்சருமான தாஜ்மகாலை கட்டியவரின் பெயரை கொண்டவரை, பாசத்தோடு வாரி அணைத்திருக்கிறாராம் தூங்கா நகரின் தெற்கு எம்.எல்.ஏ. தன் சமூகத்து ஆட்களை அணிதிரட்டிக் கொண்டு சென்று சால்வை அணிவித்ததோடு, மாசடைந்த ஏரிகள் குறித்தும், கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை எழுதிக் கொண்டு போய் கொடுத்திருக்கிறாராம். சொந்த கட்சி அமைச்சர் போலவே நடத்திய அந்த எம்.எல்.ஏ.வின் செயலை கண்டு மனம் குளிர்ந்த அந்த அமைச்சர், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்னு உறுதியளித்தாராம்.

வேலியே பயிரை மேய்ந்தால் !

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டருக்கு அடுத்து மிகவும் கவனத்தை பெற்ற முக்கியமான மாவட்ட பதவி அது. மிகவும் சென்சிட்டிவான, கடும் தலைவலி பிடித்த விவகாரங்களை அன்றாடம் எதிர்கொள்ளும் பதவி அது. பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் நேரத்தில், வலிகளோடும் வேதனைகளோடும் துயரங்களை சுமந்துவரும் அந்த பிஞ்சுகளை பெண் பிள்ளைகளை தந்தையாக முன்நின்று அரவணைத்து ஆறுதல் வழங்க வேண்டிய பொறுப்பான பதவி. அப்படி ஒரு பதவியில் வலம் வந்த, இளமையான அதிகாரி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கூண்டோடு கைலாசம் !

தேசியக்கட்சியும் தெய்வீகக் கட்சியுமான ஆளும்கட்சியின் இணை அமைச்சரான அந்த கடவுள் பெயரை கொண்ட வெள்ளைச் சட்டை – வெள்ளை வேட்டிக்காரர் தனது பதவியை தூக்கியெறிந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஒரு காலத்தில் தேசியக் கட்சியின் விசுவாசத்துக்கு பெயர் போனவராக இருந்தவர். வக்கீலுக்கு படித்தவர். ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். விவரமானவர் என்பதாலேயே, மாநிலத்திலும் மத்தியிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாம்.

ஆனால், தனக்கு பக்கத்துணையாக, தனது நிழலாக வலம் வந்த கவியானவரால்தான் அவருக்கு சிக்கல் என்கிறார்கள். அவருக்கு எதிராக கோட்டை கொத்தளத்தில் பலதரப்பிலிருந்தும் அடுத்தடுத்து புகாருக்கு மேல் புகார் வந்து குவிந்ததாம். செங்கோட்டை வட்டாரத்திலிருந்து பார்த்து சூதானமாக இருக்க சொல்லுங்கள்னு முதலில் வார்னிங் கொடுக்கப்பட்டதாம். அதையும் மீறி புகார்கள் வரவே, அவரை விலக்கி வையுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டதாம்.

அலுவல் ரீதியாக அவரை விலக்கி வைத்துவிட்டதாக கடுதாசி அனுப்பிவிட்டாலும், அமைச்சரை நிழலாகவே தொடர்ந்திருக்கிறார் கவியானவர். இதற்கு மத்தியில் தனது துறை சார்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவர் வெள்ளை சட்டைக்காரருக்கு எதிராகவே புகார் வாசிக்க கடுப்பான செங்கோட்டை வட்டாரம், மீண்டும் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்ததாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சொந்த மண்ணுக்கு வந்திருந்த நாட்டின் அரசனை சந்திக்க கூடாதென்றும்; சால்வை போடக்கூடாதென்றும் கண்டிப்பாக சொல்லிவிட்டதாம். ஆனால், அதையும் மீறி கட்சியின் காரியதரிசி என்ற பெயரில் அந்த சர்ச்சையான கவியானவரை அரசனை சந்திக்க வைத்ததுதான் தாமதம். நாங்களாக பறிப்பதற்கு முன்னால், எழுதி கொடுத்துவிட்டு கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டதாம். வேறு வழியின்றி, எல்லாத்தையும் எழுதி கொடுத்துவிட்டு வெறும் ஆளாக திரும்பியிருக்கிறாராம் அந்த கடவுள் பெயரை கொண்ட வெள்ளைச்சட்டைக்காரர்.

அமைச்சர் கனவில் மூன்று தலைகள் !

நாட்டின் தேசிய மலரை கட்சியின் அடையாளமாக கொண்ட தேசியக்கட்சியின் இணையான அமைச்சர் ஒருவரின் அதிரடி ராஜினாவை தொடர்ந்து, காலியாக கிடக்கும் திண்ணைக்கு இப்போதே கடும் போட்டி நிலவுகிறதாம். மாநிலத்தின் கணக்கில்தான் சேரும் என்பதால், எப்படியும் வளைத்துப் போட்டுவிட வேண்டுமென்று மூன்று பேர் முன்னணியில் இருக்கிறார்களாம். மாநிலத்துக்கு பொறுப்பான தலைவருமானவரும்; செய்தியாளர் சந்திப்புக்கு பெயர்போன கொங்கு மண்டலத்தின் பெண் ஆளுமையானவரும்; முன்னாள் ஆளுநருமான பெண் ஆளுமையும் அந்த பதவிக்கு குறிவைக்கிறார்களாம். மூவரில் ஒருவருக்கு ஓ.கே. ஆகலாம் என்கிறார்கள்.

முன்ஜாமீன் போடுங்களேன் …

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பள்ளிக்கூட அமைச்சர், தனக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய சொல்லி நீதி தேவதையிடம் முறையிட்டிருக்கிறாராம். நீதித்தேவதையும் வேண்டுமானால், முன்ஜாமீன் வாங்கிக் கொள்ளுங்களேன் என்றதாம். இரண்டுமுறை அழுத்தி சொல்லியும் அன்பானவர் அந்த இடத்துக்கே போகலையாம். இந்த விவகாரத்தில் ஏ1 ஆன அந்த அரசனானவர் மேல குண்டாஸ் போட்டு அது ரத்தாகியிருக்காம். ஏ2வும் பள்ளித் தோழனுமான முத்தானவர் இன்னும் போலீசின் கையில் சிக்கலையாம். அவருக்கு ஒத்தாசையா இருந்தவரை போலீசு தூக்கியதோடு, அவரிடமிருந்து சில வார்த்தைகளை கக்க வைத்துவிட்டதாம். இந்த நேரத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு போட்டு, அது தள்ளுபடியானால் கம்பியை எண்ண வேண்டிய நிலை வந்தாலும் வரலாம் என்பதாலேயேதான் மொத்த வழக்கையே ரத்து செய்ய வேண்டுமென்று விடாப்பிடியாக நிற்கிறதாம் அன்பான தரப்பு.

தங்கமாக கைமாறிய இலஞ்சம் !

நாட்டையே குலுக்கிய பலான விவகாரத்தில் தொழிலதிபர் சிக்கிய கதையில் மிகப்பெரிய டிவிஸ்ட். பக்காவா பிளான் போட்டு அதிகாரிகளை டீல் செய்திருக்கிறது, பெரிசு தரப்பு. தனக்கு சொந்தமான 79 கோடி மதிப்பிலான இடத்தை முதலில் விற்றிருக்கிறது. அடுத்து அந்த காசை வைத்து ஒரு குறிப்பிட்ட ஜூவல்லரியில் 20 கிலோ தங்கத்தை வாங்கியிருக்கிறது. ரயிலோடு சம்பந்தபட்ட பிரகாசமானவரை முன்வைத்துதான் இந்த விவகாரங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கிலோ கணக்கில் தங்கமாகவே கைமாறியிருக்கிறது. இங்கேதான் டிவிஸ்ட், அதிகாரிகளுக்கு கைமாறிய தங்கத்தை திரும்பப் பெற்று கணக்கு காட்டி, இலஞ்ச புகாரை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்துகிட்டிருக்காம். ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

காக்கிகளுக்கு கசிந்த சிக்னல் !

பலான விவகாரத்தில் தொழிலதிபர் சிக்கிய வழக்கில் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகள் பீதியில் உறைந்திருக்கிறார்களாம். யார், யார் கையில் சிக்குவார்கள்? சிக்கியவர்கள் என்ன விசயத்தை கக்குவார்கள்? மறுக்க முடியாத ஆவணங்களாக எதெல்லாம் கோர்ட்டாரின் கவனத்துக்கு போகும்? என்பதையெல்லாம் யாராலும் யூகிக்க முடியாத நிலையில், ஒருவேளை கைது நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை வந்தால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம். போகிற போக்கை கணித்த சக காக்கிகள், எதுக்கும் முன்ஜாமின் போட்டு வச்சிக்கோங்க. இப்போதைக்கு அதை மட்டும்தான் சொல்ல முடியும்னு சிக்னல் கொடுத்திருக்காங்களாம். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பயணிக்கிறதாம் இந்த வழக்கு.

கவுன்சிலர் கனவு கழக உ.பி.க்களுக்கு டார்கெட்!

மருத்துவத்துக்கு பெயர் போனவரும் மணலுக்கு பெயர் போனவரும் ஒரே பெயரை கொண்டவர்களுமான அந்த ”விஜய”மானவர்களின், வருகைக்குப் பிறகு, ஸ்பெஷல் டாஸ்க் ஒன்றை வழங்கியிருக்கிறதாம் புதிய கட்சித்தலைமை. இருவருமே, முந்தைய கட்சியில் களத்தில் செயல்வீரர்கள் என்ற அடையாளத்தை தக்க வைத்தவர்கள். தங்களைப்போலவே, களத்தில் செயல்வீரர்களாக உள்ள உ.பி மற்றும் ர.ர. கரை வேட்டிக் காரர்களை வளைத்துப் பிடிப்பது என்பதுதான் அந்த டார்கெட்டாம். பத்து ரூபாய்க்கு பெயர் போன அந்த முன்னாள் அமைச்சரின் மாவட்டத்தில்,  அதிலும் கழக உ.பி.-க்களுக்குத்தான் கூடுதல் கவனமாம். கரண்சியோடு, கவுன்சிலர் கனவும் காட்டப்படுகிறதாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.