“பாசம் உணர்ந்த பவித்ரா” – சிறார் சிறுகதை இருமொழி நூல் வெளியீட்டு விழா!
“பாசம் உணர்ந்த பவித்ரா” – சிறார் சிறுகதை இருமொழி நூல் வெளியீட்டில் கலைமகள் ஆசிரியர் பெருமிதம் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை வேளச்சேரி முழுநேர நூலக வளாகத்தில் கடந்த ஞாயிறு அன்று முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்களின் பாசம் உணர்ந்த பவித்ரா என்கிற சிறார் இருமொழி நூல் வெளியிடப்பட்டது. திருமதி பார்கவி சுரேஷ் அவர்களின் இறைவணக்கம் , எழுத்தாளர் விஜி ஆர் கிருஷ்ணன் அவர்களின் சிறப்பான வரவேற்புரையுடன் விழா தொடங்கியது.
பாசம் உணர்ந்த பவித்ரா சிறார் நூலினை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் வெளியிட திரு.நாகமணி மற்றும் ஆங்கில ஆசிரியர் அகிலா ஜ்வாலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூலினை வெளியிட்டு கலைமகள் ஆசிரியர் பேசுகையில் சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம் அதன் தற்கால பயணிப்பு குறித்து விரிவாகப் பேசினார். பாசம் உணர்ந்த பவித்ரா சிறார் நூலினை பதிப்பித்து வெளியிட்டு வரும் நூலேணி பதிப்பக கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களைப் பாராட்டிப் பேசினார்.
இன்றைய சிறார் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் அன்றைய நாளில் கலைமகள் வெளியிட்ட கண்ணன் என்கிற சிறார் இதழ் 1949 முதல் தொடர்ந்து 21 ஆண்டுகள் எழுத்தாளர் ஆர்வி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டு ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டு பேசினார்.
கி.வா.ஜ ,தி.ஜ.ரங்கநாதன்,கொத்தமங்கலம் சுப்பு போன்றோர்களும் சிறுவர்களுக்காக இந்த இதழில் எழுதியுள்ளார்கள் எனவும் நினைவு கூர்ந்தார். மேலும் கவிதை இலக்கியம் புதிய வளர்ச்சியின் பாதையில் செல்கிறது என்றும் கவிஞர்கள் தன்முனைக் கவிதைகளை பெருமளவில் எழுதி முனைப்போடு சமூகக் கருத்துகளை உள்ளடக்கி எழுதி வருவது சிறப்பு எனவும் கூறி தன்முனைக் கவிதைகளின் தந்தை கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களையும் பாராட்டினார்.
விழாவில் நூல் மதிப்புரை வழங்கிய நாவலாசிரியரும் தொலைகாட்சி தொடர்களின் எழுத்தாளர் தேவி பாலா அவர்கள் நூலாசிரியர் சிவகாமசுந்தரி அவர்களைப் பாராட்டி நூலில் உள்ள அனைத்து சிறுகதைகளும் சிறப்பானவை மேலும் அவற்றை ஆங்கிலமொழியில் நூலாசிரியர் மொழிபெயர்த்து இணைத்து வெளியிட்டது கூடுதல் சிறப்பு எனவும் , இந்த நூல் சிறுவர் இலக்கியத்தில் பாராட்டுக்குரிய நூல் எனவும் போற்றிப் பேசினார்.
விழாவில் சிறுகதை எழுத்தாளர் லதா சரவணன் நூலின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். வாழ்த்துரை வழங்கிய தன்முனைக் கவிதைகளின் தந்தை கா.ந.கல்யாணசுந்தரம் பேசுகையில் சிறுகதைகள் எப்படி தற்கால சிறார் இலக்கியத்தில் முத்திரைப் பதிக்கின்றனவோ அப்படித்தான் கவிதை உலகில் ஹைக்கூ மற்றும் தன்முனைக் கவிதைகளும் முன்னணியில் இருக்கின்றன எனக்கூறி நூலாசிரியரின் பன்முகத் திறனை எடுத்துக் கூறினார்.
எழுத்தாளர் ஆனந்த் ரவி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் நூலகர் திருமதி.மாரியம்மாள் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கினார். எஸ்.எஸ்.எம் பள்ளியின் கல்வி ஆலோசகர் திரு எஸ்.சந்தானம் அவர்களும் நூலாசிரியருக்கு வாழ்த்துரை வழங்கினார். நூலினை பதிப்பித்த லாலிபாப் சிறார் இலக்கிய பதிப்பாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் பாராட்டி வாழ்த்து கூறினார். நூலாசிரியர் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்களின் ஏற்புரைக்குப் பின் ரைடர்ஸ் கேப் அமைப்பாளர் எழுத்தாளர் கௌரி சங்கர் அவர்கள் நன்றி கூறினார்.
விழா நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்தளித்த எழுத்தாளர் டி.என்.இராதாகிருஷ்ணன் அவர்களை அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். விழா நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்த ஆர்.ஜெ.நாகா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. விழாவில் பேனாக்கள் பேரவை நிறுவனர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் கவிச்சுடர் தயாளன், எழுத்தாளர்கள் சுஸ்ரீ,சேவல் ஜெரீனா,சுஜாதா கிருஷ்ணமூர்த்தி, கஸ்தூரி குருஸ்வாமி, கவிஞர்கள் புதுகை ஆதீரா, சக்திமான் அசோகன்,ராஜ்குமார்,அனுராதா சௌரிராஜன்,வசந்தா,சொக்கலிங்கம், Dr கந்தசாமி கண்ட் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவினை சிறப்பாக எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் மற்றும் பேனா நண்பர்கள் குழு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.