போர்ஜரி சாதி சான்று! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆவின் !
போர்ஜரி சாதி சான்று! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆவின் !
போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்து ஆவினில் வேலைக்கு சேர்ந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்துமாறு, ஆவின் பொது மேலாலளர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சென்னை தலைமையக ஆவின் விஜிலென்ஸ் போலீஸ் எஸ்.பி.
மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் மானகிரி கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. தற்போது மதுரை ஆவினில் பணிபுரியும் பழனிச்சாமி அவருடைய தம்பி பரமானந்தம் மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் மீதுதான் குற்றச்சாட்டு. இதில், கந்தசாமி மகன் பழனிச்சாமி பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும்; அவரது உடன் பிறந்த சகோதரர் பரமானந்தம் மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் பிரிவிலும் பணியில் சேர்ந்திருக்கின்றனர்.
ஏற்கெனவே, கடந்த 2019-20 ஆம் ஆண்டில் முறையாக தேர்வு நடத்தாமல், 10 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பணியாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த பூகம்பம் கிளம்பியிருக்கிறது.