2 பிரபல ஜவுளிக்கடைகளில் ரூ.89,000 கொள்ளை.! மர்ம நபர்கள் கைவரிசை..!
2 பிரபல ஜவுளிக்கடைகளில்
ரூ.89,000 கொள்ளை.!
மர்ம நபர்கள் கைவரிசை..!
தஞ்சையில் பூட்டியிருந்த இரண்டு பிரபல ஜவுளிக் கடைகளில் நள்ளிரவில் நுழைந்த அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.89,000ஐ கொள்ளயைடித்துச் சென்றுள்ளனர்.
நகரின் மையப்பகுதியில் நடைபெற்றுள்ள இத் துணிகர கொள்ளைச் சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள மஹாராஜா ஜவுளிக்கடையில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியவில் ஊழியர்கள் வேலை முடிந்து கடையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் வழக்கம்போல கடையைத் திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் கடையின் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கல்லாப்பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த கடை உரிமையாளரான தஞ்சை அருளானந்தம் நகரைச் சேர்ந்த முகமது ரபீக் (64) சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
இதுபற்றிய தகவலின்பேரில், தஞ்சை நகர கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையின் உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்த மோப்ப நாய் எவரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அங்கே பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் முன்பக்கமாக மாடி வழியாக நுழைந்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.80,000ஐ திருடிச் சென்றுவிட்டதாக மஹாராஜா ஜவுளிக் கடையின் உரிமையாளர் முகமது ரபீக் தஞ்சை நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மஹாராஜா ஜவுளிக்கடையின் உள்ளே நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் இரவு நேரத்தில் வழக்கமாக அணைத்து வைக்கப்பட்டுவிடும் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரவு நேரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் கடையில் உள்ள துணிகள் அனைத்தும் தீயில் எரிந்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் கடையை மூடும்போது மின்சார மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வந்துள்ளனர்.
இதுபற்றி நன்கு அறிந்த நபர்களே இக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என போலீஸார் கருதுகின்றனர்.
இக் கடையில் ஐபேட், செல்போன்கள், பட்டுச் சேலைகள் என விலையுயர்ந்த பல பொருள்கள் இருந்துள்ளன. ஆனால் அவைகளில் எதையும் காள்ளையர்கள் திருடிச் செல்லவில்லை.
எனவே பணத்தை திருடுவது மட்டும்தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்துள்ளது என்கிறார் இன்ஸ்பெக்டர் கருணாகரன்.
இத் துணிக்கடையில் பணிபுரியும் ஒருசில ஊழியர்களின் ஒத்துழைப்போடு இக் கொள்ளை நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. விசாரணை முடிவில் தான் அதுபற்றி தெரிய வரும் என்கிறார் இன்ஸ்பெக்டர் கருணாகரன்.
இந்நிலையில், மஹாராஜா ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அதன் அருகில் உள்ள சரஸ்வதி ஜவுளிக்கடையிலும் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ரூ.9,000ஐ திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில், தஞ்சை நகர கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.