ஒருவேலை காவல்துறையின் வாழ்த்துகளோடுதான் தொழில் செய்கிறார்களா?
நேற்று இரவு சுமார் எட்டு மணி இருக்கும். திருச்சி மரக்கடை பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தேன். சத்திரம் செல்லும் தனியார் நகரப் பேருந்து ஒன்று வந்தது. அவ்வளவாக கூட்டமில்லை. பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக ஏற முயற்சித்த போது எங்கிருந்தோ திபுதிபு வென ஐந்து பேர் ஓடிவந்து என்னுடன் ஏறினார்கள்.
நான்கு இளைஞர்கள் ஒரு நடுத்தர வயதுகாரர். அழுக்குச் சட்டையும் லுங்கியும் கட்டியிருந்தார்கள். முன்படிகட்டு காலியாக இருந்தது. ஆனால் அங்கு போகாமல் என்னைச் சுற்றி நின்று கொண்டார்கள்.
என்னுடைய சட்டைப் பையில் பத்தாயிரம் ரூபாய் பணம், புது மொபைல் போன், சில டெபிட் கிரடிட் அட்டைகள் இருந்தன. இவற்றை பிக்பாக்கெட் அடிப்பது அவர்கள் நோக்கம் என்பதை புரிந்து கொண்டேன். பேருந்திற்கு உள்ளே இடம் இருந்தாலும் என்னை உள்ளே விடாமல் படியிலேயே நெருக்கமாக லாக் செய்ய பார்த்தனர்.
ஒருவன் மிக நெருக்கமாக வந்து இடித்துக் கொண்டே பாக்கெட்டில் கைவிட பார்த்தான். அவர்கள் திட்டம் எனக்கு தெரியாது என நினைத்துக் கொண்டார்கள் போலும். இது போன்று பல திருடர்களை பார்த்திருப்பதால் என் வலது கையால் சட்டை பாக்கெட்டை பொத்திக் கொண்டேன். நெருங்கி வந்து சட்டைப் பையில் கைவிட்டவனின் கையை இறுக்கமாக பிடித்து பொறுமையாக அதே நேரத்தில் உறுதியாக சொன்னேன்,
“மரியாதையா பிக்பாக்கெட் அடிக்காம குதிச்சி ஓடிடு. இல்லன்னா இடுப்பு எலும்ப சத்தியமா உடைச்சிடுவோம். தனியா வந்திருக்கேன்னு மட்டும் நினைச்சிடாத..”
அவன் ராசதந்திரங்கள் தோற்ற ஆத்திரத்தில் குதித்து ஓடிவிட்டான். மற்ற நால்வர் நிலமையை புரிந்து கொண்டு விலகி வழிவிட்டார்கள். ஐந்து நிமிடம் சென்றிருக்கும் கிராமத்து மனிதர் ஒருவர் அந்த நால்வரில் ஒருவன் தன் பையில் கையை விடுவதாக சொல்லி அசிங்க அசிங்கமாக திட்டினார். நால்வரும் சேர்ந்து கிராமத்து மனிதரிடம் சண்டைக்கு போனார்கள். மொத்த பேருந்தும் வேடிக்கை பார்த்ததே தவிர கிராமத்து மனிதருக்கு உதவி செய்யவோ குரல் கொடுக்கவோ யாரும் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் நான்தான் குரல் கொடுத்தேன்.
“டிரைவர், பஸ்ஸ நேரா ஸ்டேசனுக்கு விடுங்க. இந்த பஸ்சுல ஏகப்பட்ட பிக்பாக்கெட்ஸ் இருக்காங்க”
என் உரத்த குரல் ட்ரைவருக்கு கேட்டிருக்கும் போல. “சரிங்க சார்” என்றார். திருடர்கள் திட்டிக் கொண்டே அடுத்த நிறுத்தத்தில் குதித்து விட்டனர்.
காவல்துறை என்ன செய்கிறதென்று தெரியவில்லை. ஒருவேலை காவல்துறையின் வாழ்த்துகளோடுதான் தொழில் செய்கிறார்களா?
— சுந்தர்