திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் !
திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் !
புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தினத்தை கடைபிடிக்கும் விதமாக, திருச்சி சில்வர்லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகம் ”நம்ம திருச்சி மாரத்தான்” ஓட்டத்தை கடந்த ஜூன்-11 அன்று நடத்தியது. இந்த மாரத்தானில், 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருச்சி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பயணித்து பங்கெடுத்தனர். குறிப்பாக சிறுவர்கள் பலரும் பேரார்வத்தோடு இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டனர். ஐந்துக்கும் மேற்பட்டோர், வீல்சேரோடு மாரத்தானில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தென்னூர் உழவர் சந்தையில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பயணித்து, இறுதியாக அண்ணா விளையாட்டரங்கத்தில் நிறைவுபெற்றது. மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோர்களுக்கு பரிசுத்தொகையும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாலை நேர நிகழ்வாக IMA அரங்கில் கலக்கப்போவது யாரு நாஞ்சில் விஜயன் மற்றும் ஆனந்த் பாண்டியின் கலைநிகழ்ச்சியோடு தொடங்கிய கருத்தரங்கில், முன்னாள் போலீசு அதிகாரி கலியமூர்த்தி பங்கேற்று அவரது பாணியில் தன்னம்பிக்கையூட்டும் உரை நிகழ்த்தினார்.
”புற்றுநோயை கண்டு அஞ்சத் தேவையில்லை. முறையான வழிகாட்டுதலில் தொடக்க நிலையிலேயே அவற்றை கண்டறிவதும்; நோயின் பிடியிலிருந்து மீண்டு வருவதும் சாத்தியமே என்ற விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் மாரத்தான் ஓட்டத்தை நடத்த விரும்பினோம். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவராக தனிப்பட்ட முறையில் எனது அனுபவத்தில் 2500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். அவர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தோம்.
எங்கள் அழைப்பை ஏற்று 400-க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இனி ஆண்டுதோறும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற ஊக்கத்தை இந்நிகழ்வு எங்களுக்கு வழங்கியிருக்கிறது.” என்கிறார், சில்வர்லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் செந்தில்குமார்.