கர்ப்பிணி பெண் சந்தேக மரணம்.. மழுப்பும் மன்னார்குடி அரசு மருத்துவமனை!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் சுவாமிநாதன் தெருவில் வசிப்பவர் வீரமணி. வயது 37. இவர் ஓரு சலவைத் தொழிலாளி. இவருக்கு ராணி, வயது 30 என்ற மனைவியும், 4 வயதில் ஓரு பெண் குழந்தையும் உள்ளது. வீரமணி மணைவி ராணி கர்ப்பமாக இருந்தார். பிரசவத்திற்காக தன் மனைவி ராணியை, கடந்த ஜூன் 5 ம் தேதி காலை மன்னார்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தார்.
அன்று இரவு ராணிக்கு மகப்பேறுக்கான சிசேரின் அறுவை சிகிச்சை நடந்தது. இதனை அங்குள்ள பெண் மருத்துவர் கவிதா மற்றும் பணியிலிருந்த செவிலியர்கள் மேற்கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது. கூடவே அந்த பெண்ணுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மறுநாள் காலை 6 ம் தேதி ராணிக்கு வலிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட மருத்துவர் கவிதா பணியில் இல்லாததால் பணியில் இருந்த மருத்துவர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல பரிந்துரை கடிதம் தந்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை இங்குபேட்டரில் வைத்து மருத்துவமனையிலே தொடர்ந்து பராமாரிக்கிறோம் எனவும் கூறி உள்ளனர்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற உடலை சோதித்த மருத்துவர்கள் ராணி முன்பே இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பி விட்டனர். ராணியின் கணவர் வீரமணி மன்னார்குடி தலைமை மருத்துவர் விஜயக்குமாரை சந்தித்து நடந்ததை கூறி முறையிட்டு இருக்கிறார். மேலும் மருத்துவமனை நிர்வாகம் தான் மனைவியின் அநியாய மரணத்திற்கு பொறுப்பு எனவும் நீதி கேட்டு இருக்கிறார். உடலை போஸ்ட் மார்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததோடு, நைச்சியமாக பேசி அனுப்பி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சலவை தொழிலாளர் சங்கம், கிராமக் கமிட்டி ஆகியோரின் உதவியோடு மீண்டும் மருத்துவமனை முற்றுகையிட்டனர். பீதி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் தனிப்பட்ட முறையில் வீரமணியை அழைத்து 2 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம். பிரச்சனையை பெரிது படுத்தாதீர்கள் என்று பேரம் பேசியது.
இராணியின் இறப்பில் மருத்துவமனை நிர்வாகத்தில் தவறு எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் பொருத்தமான மருத்துவ ஆதாரங்களை எடுத்து காட்டியிருக்கலாமே? மாறாக 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக தருகிறோம் என்று ஒப்பு கொள்வது ஏதே தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம் தானே?
ராணி இறப்பிற்கு ஈடாக ஓரு தொகையை மருத்துவர்கள் தர ஓப்புக்கொண்டது ஏன்? அரசு தலைமை மருத்துமனை செய்த அறுவை சிகிச்சையில் ஏதேனும் தவறு நடந்து இருக்கிறதா? இப்படி பல்வேறு சந்தேகங்களை இந்த சம்பவம் எழப்பி இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவாரா?- பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
– மன்னை மனோகரன்