பிரச்சாரத்தில் பண பட்டுவாடா : சர்ச்சையில் பாஜக அதிமுக வேட்பாளர்கள் ! வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
சட்டப்பையில் கை வைத்தார் வேட்பாளர் விக்னேஷ். இதனை சட்டென கவனித்துவிட்ட பழனிசாமி ஏய்..ஏய்.. எடுக்காதே.. என கத்தி தடுத்துவிட்டார்.
பிரச்சாரத்தில் பண பட்டுவாடா : சர்ச்சையில் பாஜக அதிமுக வேட்பாளர்கள் ! அடுத்தடுத்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
பொதுவாக பெண்களின் ஆரத்தி தட்டில் பணம் போடுவது வழக்கம். தற்போது தேர்தல் நேரம். ஆரத்திக்கு பணம் கொடுப்பது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக சர்ச்சையாகி புகாராக வெடித்து விடும். இதனால் பிரச்சாரத்நின் போது பொது இடங்களில் ஆரத்திக்கு வேட்பாளர்கள் பணம் கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி.
சமீபத்தில் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையிலே வேட்பாளர் விக்னேஷ் பணம் கொடுக்க முயன்றதும், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததும் சர்ச்சையான நிலையில், தற்போது தர்மபுரி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் பிரச்சாரத்தின் போது பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பூக்கடை ரவி, தருமபுரி அதிமுக நகரச் செயலாளராகவும் தாயார் ராஜாத்தி, தருமபுரி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் 1 அன்று அரூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பள்ளிப்பட்டு கிராமத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் அசோகன் முன்னிலையில் வாக்காளர்களுக்கு பணம் தாரளமாக விநியோகிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 24 ந்தேதி சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வீதி வீதியாக அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்து வந்தனர்.
அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க சட்டப்பையில் கை வைத்தார் வேட்பாளர் விக்னேஷ். இதனை சட்டென கவனித்துவிட்ட பழனிசாமி ஏய்..ஏய்.. எடுக்காதே.. என கத்தி தடுத்துவிட்டார். இதனால் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
சில நாட்களுக்கு கோவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கோவை தேர்தல் அதிகாரி த.கிராந்திகுமார் தெரிவித்திருந்தார்.
தேர்தல் விதிகளை காற்றில் பறக்க விட்டு வேட்பாளர்கள் பண பட்டுவாடா செய்யும் வீடியோக்களால் ஜனநாயக உரிமைகள் கேலிக்கூத்தாக்கி உள்ளது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
– கேஎம்ஜி