கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து ?
பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பிடிபட்ட பணம் அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
கட்டுக்கட்டாக சிக்கிய பணம்! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து?
கடந்த சில தேர்தல்களில் அதிமுக திமுக போட்டியிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக இருந்த புகார்களில் தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தலை தள்ளிப்போடுமா எனும் பேச்சு தமிழக அரசியலில் பலமாக எழுந்துள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் கதிர் ஆனந்த் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் தொடர்பான வீடுகளில் சோதனை நடத்தியதில் 11.58 கோடி ரூபாய் கைப்பற்றியது. அதனையடுத்து அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியிலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 6-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி கோச்சில் அதிரடியாக நுழைந்தனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளான செந்தில் பாலமணி தலைமையிலான அதிரடி சோதனையில் ஏசி கோச்சில் பயணம் செய்த மூவரிடம் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது.
6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.99 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
அதில், கைது செய்யப்பட்டவர்களின் பெயர் சென்னை கொளத்தூர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றொருவர் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்தது.
பெருமாள், நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும், அவருடன் கைதானவர்கள் ஹோட்டல் ஊழியர்கள் என்பதும், கைப்பற்றப்பட்ட பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து பிடிப்பட்ட மூவரும், மொத்தப்பணமும், நெல்லை எம்எல்ஏவும் நெல்லை நாடாளுமன்ற பா.ஜ.க. வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் மத்திய சென்னை தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர் சாகுல் ஹமீது தலைமையிலான அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
பின்னிட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய உறவினர்கள் மற்றும் நெல்லை ஒப்பந்தகாரர் ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன், ”அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்றும் நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், நயினார் நாகேந்திரன் 1500 கோடி சொத்துக்களை வேட்புமனுவில் மறைத்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். பதிலுக்கு நெல்லை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக பி.ஜே.பியும் புகார் கொடுத்துள்ளது. இதனால் நெல்லை தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள MBS கோழிப்பண்ணை நிறுவனத்தின் தலைமை அலுவகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.32 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதி தேர்தல் செலவுக்கு பதுக்கப்பட்ட பணமா என விசாரணை தொடர்கிறது.
போட்டுக்கொடுக்கும் பி.ஜே.பியின் சிலீப்பர் செல்ஸ்
பாஜக போட்டியிடும் தொகுதிகளில் பணம் தொடர்ந்து கைப்பற்றப்படுவது அரங்கேறி வருகிறது. அதனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்களே தேர்தல் ஆணையத்திற்கு போட்டுக் கொடுப்பதாக அதிர்ச்சி செய்தியும் உலாவருகிறது.
மீண்டும் திமுக மற்றும் அதன் கூட்டணியின் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல், மத்திய உளவுப்படையினரும் கூர்மையாக கவனித்து வருகின்றனர்.
அதனையடுத்துதான் வங்கிக் கணக்கில் பூஜ்யம் ரூபாய் இருப்பு வைத்திருப்பதாக வருமான வரி தாக்கல் செய்த சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், சிதம்பரத்தில் நடேசன் நகரில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 9ம் தேதி வருமானவரித்துறை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி வெறுங்கையுடன் வெளியேறினார்கள்.
மேலும், கடைசி நேரத்தில் சில இடங்களில் அடுத்தடுத்து ரெய்டுக்காக அதிகாரிகள் காத்திருப்பதாகவும், தி.மு.கவுக்கு நெருக்கடி காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் 24ம் தேதி தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ”வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை மிரட்டுவது, வாக்காளர்களை ஆள்மாறாட்டம் செய்வது போன்ற நடவடிக்கைகள் தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “உள்ளடக்கிய, உண்மையான, ஆரோக்கியமான தேர்தலை உறுதிப்படுத்த தீவிர நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். அனைத்து வேட்பாளர்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
அவை அனைத்தும் இதுவரை வார்த்தைகளாகவே உள்ளதுதான் வேதனை. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பிடிபட்ட பணம் அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ராகிணி