கானல் நீரானதா காவிரி!
“கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு” என்று பொங்கிவரும் காவிரியின் பொலிவு பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இன்றோ, காவிரித்தாயின் கண்ணீரைத்தான் காண்கிறோம். காவிரி உரிமைக்கானத் தமிழ்நாட்டின் போராட்டம் நெடிய வரலாற்றைக் கொண்டது. நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக 02/06/1990-ல் ஒன்றிய அரசால் “காவிரி நடுவர் மன்றம்” அமைக்கப்பட்டது. நீதியரசர் மாண்பமை என். பி. சிங் அவர்களைத் தலைவராகவும், மாண்பமை நீதியரசர்கள் என்.எஸ். ராவ், சுதிர் நாராயணன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நடுவர் மன்றம் 25/06/1991-ல் தன் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது
அதன்படி,ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற இடைக்காலத் தீர்ப்பு 10/12/1991-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இறுதித் தீர்ப்பு 05/02/2007-ல் வழங்கப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி.யும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.யும் கேரளத்துக்கு 30 டி.எம்.சி.யும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் பகிர்ந்தளிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் 16/07/2018-ல் கலைக்கப்பட்டது.
மேல்முறையீடு:
இந்த இறுதித் தீர்ப்பு குறித்து தொடர்புடைய நான்கு மாநிலங்களும் மேல்முறையீடு செய்ததன் விளைவாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்றம் வழங்கிய நீரினளவு குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. நீர் வழங்குவது. கர்நாடகத்துக்கு 284.75 டி.எம்.சி. யாக நீரினளவு அதிகரிக்கப்பட்டது. கேரளம் மற்றும் புதுச்சேரிக்கு வழங்கிய நீரினளவில் மாற்றம் இல்லை.
இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்குமென்றும் பன் மாநில நதிகள் தேசியச் சொத்து. எனவே எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. மாதாந்திர அடிப்படையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் Cauvery Water Management Authority – CWMA
நடுவர் மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை அமுல்படுத்த “காவிரி மேலாண்மை ஆணையம்” அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. காவிரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பான அனைத்து முடிவுகளையும் காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அணைகள்:
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) 06/01/2026 அன்று நடைபெற்ற 47வது கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு ஜனவரி மாதத்தில் மட்டும் 2.76 டி.எம்.சி. தண்ணீர் திறக்குமாறு ஆணையிட்டது. 13/02/2026-ல் நடைபெற்ற 48வது கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
20/04/2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மே மாதப் பங்கீடாக 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு ஆணையிடப்பட்டது. இதுவரை நீர் திறக்கப்படவில்லை.
26/05/2026-ல் நடந்த 51வது கூட்டத்தில் 9.91 டி.எம்.சி. தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டது. இது தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு கோரியது. எனினும் மே, ஜூன் மாதங்களுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை. ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும்.
பொய்த்தது விவசாயம்:
ஆண்டுதோறும் ஜூன் 12ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி 28-ல் மூடப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரியில் நீர் திறக்கப்பட்டு இருபோக வேளாண்மை மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியக் காவிரி டெல்டாவின் மொத்தப் பாசனப் பரப்பு சுமார் 13 லட்சம் ஏக்கர் ஆகும். தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் 34 சதவீதம் காவிரி டெல்டாவில் விளைவிக்கப்படுகிறது. மோட்டார் பம்புசெட் மூலம் பாசனம் பெறும் பரப்பு 3.55 லட்சம் ஏக்கராக உள்ளது. காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள பரப்பளவு 9.5 லட்சம் ஏக்கராகும்.

போகவாரியாக:
குறுவை – ஜூன் முதல் செப்டம்பர் வரை 3.5 முதல் 5 லட்சம் ஏக்கர்.
சம்பா – செப்டம்பர் முதல் ஜனவரி வரை 10 முதல் 11 லட்சம் ஏக்கர்.
தாளடி அக்டோபர் முதல் ஜனவரி வரை 2 முதல் 3 லட்சம் ஏக்கர்.
இவ்வாண்டு குறுவை சாகுபடி முற்றிலும் நடைபெற வாய்ப்பில்லை. எனவே 3 முதல் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.
விவசாயிகளின் கடன் சுமை அதிகரிப்பதுடன் விவசாயக் கூலித் தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடும் நிலை ஏற்படும்.
கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மின்வெட்டு அதிகமாக இருப்பதால் பாதிப்பு ஏற்படும். நெல் உற்பத்திக் குறைவதால் தமிழ்நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு குறைந்து, அரிசி விலை உயரும். அரிசித் தேவைக்காகத் தமிழ்நாடு வெளிமாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலை உருவாகும். நெல் உற்பத்தியோடு தொடர்புடைய பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையிலும் கடன் சுமையிலும் வாடும் நிலை ஏற்படும்.
சிறப்புத் தொகுப்புத் திட்டம்:
பாதிப்புகளின் அளவுடன் ஒப்பிடும்போது இது யானைப் பசிக்கு சோளப்பொறிதான். இது வெறும் கண்துடைப்புத் திட்டமே. விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது உடனடி அவசர நடவடிக்கையாக இருக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இத்துடன் தொடர்புடையத் தொழிலாளர்களுக்குத் தேவையான இழப்பீட்டைத் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
காவிரி நீரைப் பெற வேண்டும்:
உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணைத்தின் ஆணைப்படி உரிய நீரை விடுவிக்குமாறு ஒன்றிய அரசையும் கர்நாடக மாநில அரசையும் கட்டாயப்படுத்தி நெருக்கடி கொடுத்து நீரைப் பெற வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டும். காவிரி நீரின் உரிமைக்கானப் போராட்டங்களை அரசியல் பலவீனங்களுக்காக தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இது வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையும் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர்ந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரைப் பெற வேண்டும்.
வழக்குரைஞர் தமிழகன்
மாநில அமைப்பாளர் – நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு







Comments are closed, but trackbacks and pingbacks are open.