சென்னை கலெக்டர் டிரான்ஸ்பர் – எழிலக அதிகாரிகளின் உள்ளடியா….?
சென்னை கலெக்டர் டிரான்ஸ்பர் – எழிலக அதிகாரிகளின் உள்ளடியா….?
கடந்த மே25ம் தேதியன்று சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய் சேவைகளைப் பற்றி பொது மக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்அதிகாரிகள் என எவரும் இன்றி எழிலகத்தைச் சேர்ந்த சாதாரண ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்த சம்பவத்தின் காரணமாக எந்தவித முறையான விசாரணையின்றி மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயா ராணி இடமாற்றப்பட்டது தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத் தியுள்ளது.
முதல்வர் விசிட்டின் போது சென்னை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.
குமார் தலைமையில் “மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாட்டு பணிகள்” தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயாராணி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் காவல்துறை துணை ஆணையர் சி.சியாமளாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ், சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட் சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சென்னை மாவட்டத்தின் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்கள் எவருக்கும் முதல்வர் திடீர் விசிட் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
பொதுவாக தமிழக முதல்வர் பிற மாவட் டங்களுக்கு சென்றால் முதலில் மாவட்ட ஆட்சி யர்க்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் சென்னையைப் பொறுத்தவரை முதல்வர் விசிட் குறித்து எழிலகத்தின் ஆணையரிடம் மட்டுமே தெரிவிப்பது வழக்கமான ஒன்று. இந்த முறையே பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கும். அதன்படியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வின் போது முதல்வர் அலுவலகத்திலிருந்து எழிலக ஆணையருக்கு மட்டுமே தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து எழிலக அதிகாரிகளாக நிலநிர்வாக ஆணையத்தில் பணிபுரியும் இணை ஆணையர் பார்த்திபன், வருவாய் நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் மட்டுமே பிற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் முதல்வர் விசிட்டின் போது ஆஜராகியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த, முதல்வருடன் உடன்வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம், இது குறித்து தனது ஆதங்கத்தை தலைமைச் செயலாளர் இறையண்புவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார் எனக் கூறுகின்றனர் தலைமை செயலக வட்டாரத்தினர். மேலும் இந்த விவகாரத்தில் எழிலக அதிகாரிகள் கொடுத்த தவறான தகவல்கள் தான் மாவட்ட ஆட்சியரின் மாற்றம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘நான் மாற்றப்பட்டது டிவியில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ள ஆட்சியர் விஜயாராணி, “முறையாக விசாரிக் காமல் தண்டனை வழங்கியிருக்கிறார்கள்” என நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பி னாராம். விசாரணையின்றி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்ட விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்ற நிலையில், நடைபெற்ற குளறுபடிகளுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.