“கதையின் நாயகன் போதும், கதாநாயகன் வேண்டாம்” –சூரிக்கு சசிக்குமார் அட்வைஸ்!
“கதையின் நாயகன் போதும், கதாநாயகன் வேண்டாம்” –சூரிக்கு சசிக்குமார் அட்வைஸ்! லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர்.
இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், படத்தை வழங்கிய ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிக்குமார், கதையின் நாயகனான சூரி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து நன்றி சொன்னவர்கள்….

தயாரிப்பாளர் கே. குமார்,”கருடன் திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கு நன்றி. இந்தப் படத்தின் பணிகளை தொடங்கும் போதே மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டின் போது பைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம்.. என பலரும் உதவி செய்தனர். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவானதற்கு சூரி தான் முதன்மையான காரணம். படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்களை தீர்த்து, வெளியீட்டிற்கு உதவியதற்காகவும் சூரிக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சூரியுடன் பதினான்கு ஆண்டு காலமாக பயணிக்கிறேன். அண்மையில் ஒரு நேர்காணலில் என்னை அவர் ‘தம்பி’ என்று குறிப்பிட்டார். இது என்னை மிகவும் நெகிழச் செய்தது ”.
இயக்குநர் துரை செந்தில்குமார், ” ஒரு இயக்குநருக்கு சந்தோசம் அளிக்கும் விசயம் எதுவென்றால்… இது போன்ற ஒரு திரைப்படத்தை, தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்கிற.. ஊடகங்கள் ஆதரவு தெரிவிக்கின்ற.. விமர்சன ரீதியில் பாராட்டைப் பெற்ற ஒரு படத்தை உருவாக்குவது தான். இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒரு விசயம். அதுபோன்ற வெற்றிப் படமாக ‘கருடன்’ அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
படம் தொடங்கியதிலிருந்து படம் வெளியாகி வெற்றிகரகமாக ஓடும் இந்த தருணம் வரை இதில் பணிபுரிந்த அனைவரும் நேர் நிலையான எண்ணங்களுடன் இருந்தனர். இந்த வெற்றியை அமைத்துக் கொடுத்த இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி.
இந்தத் தருணத்தில் இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள்… தங்களின் வாய் மொழியிலான ஆதரவின் காரணமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காகவும் அவர்களுக்கு நான் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.
இயக்குநர் – நடிகர் ஆர் வி உதயகுமார், “நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் .. எத்தனை வெற்றிகளை பெற்றோம் என்பது முக்கியமல்ல. நாம் எத்தனை பேருக்கு முன்னுதாரணமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
சூரியை ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் உலகமே போற்றும் நாயகனாக உயர்த்திய இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வெற்றிக்கு நிகராக ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றியும் அமைந்திருக்கிறது”.

நடிகர் சசிக்குமார், “தயாரிப்பாளர் குமார் முதலில் சக்சஸ் மீட் என்று சொன்னார். உடனே அவரிடம் சக்சஸ் மீட் என்று வேண்டாம். தேங்க்ஸ் கிவிங் மீட் என்று சொல்லுங்க என்றதும் நன்றி தெரிவிப்பு என்று மாற்றிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனெனில் தற்போதெல்லாம் ஓடாத திரைப்படங்களுக்கு தான் சக்சஸ் மீட் வைக்கிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது.
அது ஏன்னா தோல்வி என்றாலே அனைவருக்கும் பயம். தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த படத்தில் வெற்றி பெற முடியும். அதனால் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால்… அது தோல்வி அடைந்திருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கருடன் படத்தின் வெற்றிக்கு பல காரணங்களைச் சொன்னார்கள். சூரியினால்… சசிகுமாரால்… வில்லனால்.. இயக்குநரால்… என பலப் பல காரணம் சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருத்தர் தான் காரணம். அது தயாரிப்பாளர் குமார் தான். ஏனெனில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதிலிருந்து.. வெளியாகும் வரை இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தவர் தயாரிப்பாளர் குமார் மட்டும் தான்
படம் நல்லாருந்துச்சுன்னா ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த ‘கருடன்’ ஏற்படுத்தி இருக்கிறது. கருடன் படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது.
இந்தப்படத்தில் சூரிக்காக நடிக்க வந்தேன். அது எனக்கு நல்ல விதமாக அமைந்து விட்டது. நான் ஒரு நல்ல விசயத்தை நினைத்தேன். அது எனக்கு மிகப்பெரிய நல்ல விசயமாக மாறிவிட்டது. இனிமேல் சூரியை யாரும் பரோட்டா சூரி என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதையெல்லாம் தன்னுடைய சிறந்த நடிப்பால் அழித்துவிட்டார். இனி அவர் கதையின் நாயகனாகத்தான் இருப்பார். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவார். அவர் கதாநாயகனாக மாறும்போதுதான் சற்று கடினமாக இருக்கும். ஆனால் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த சூரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய வெற்றியை.. நான் வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும்போது நமக்குள் ஒரு பயம் ஏற்படும். அவர்கள் நம்பிக்கை கொடுக்கும் போது நமக்குள் ஒரு பொறுப்புணர்வு உண்டாகும்.சூரி வெற்றி பெற்றது நாம் அனைவரும் வெற்றி பெற்றது போலத்தான். சூரியின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இயக்குநர் வெற்றிமாறன், ” கருடன் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி.
இன்றைய காலகட்டத்தில ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தர மறுக்கிறார்கள். டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம். டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்திற்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் கருடனும் ஒன்று. இரண்டாவது படம் என்றும் சொல்லலாம். திரைப்படத்தில் முதலீடு செய்த பணத்தை திரையரங்கத்தில் இருந்தும்… திரையரங்கத்தின் வசூலில் இருந்தும் மீட்க முடியும் என்பதை நிரூபித்த படம் கருடன். டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனையை போனசாக வைத்துக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்திய படம் கருடன்.
இந்த வகையிலான வணிகம் தான் ஜனநாயகம் மிக்கது என உணர்கிறேன்.ஒரு படைப்பாளியாக … ஒரு தயாரிப்பாளராக.. திரையரங்குகளில் வெளியிட்டு, நேரடியாக மக்களிடம் கொண்டு செல்கிற போது படைப்பு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இது டிஜிட்டல் தளங்களில் இல்லை. சூரி, இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர்.
காட்சியை படமாக்கும் போது கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கிக் கொண்டு நடிக்க முயற்சிக்காமல்.. கதாபாத்திரமாகவே இருக்க முயற்சி செய்பவர் சூரி. இதனை சூரி தொடர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டால்… இன்னும் சிறப்பான நடிகராக .. கூடுதல் உயரத்திற்கு செல்வார். ”
கதையின் நாயகன் சூரி,”ஒரு படத்திற்கு கதையை தயார் செய்து யார் வேண்டுமானாலும் படப்பிடிப்புக்கு சென்று விடலாம். படப்பிடிப்பை நிறைவு செய்து விடலாம். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளையும் நிறைவு செய்யலாம். கஷ்டப்பட்டு படத்தை வெளியிடவும் செய்யலாம். படம் வெளியான பிறகு இதுபோன்றதொரு மேடை கிடைப்பது கடினம். அந்த வகையில் நான் கதையின் நாயகனாக நடித்த இரண்டு படத்திற்கும் இத்தகைய மேடைக்கு வந்து விட்டேன். இதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட நிதி சார்ந்த சிக்கல்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்களுக்கும் நன்றி.
என்னுடைய வாழ்க்கையில் விடுதலைக்கு முன்- விடுதலைக்குப் பின் என்ற நிலையை ஏற்படுத்திய வெற்றிமாறனுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்த தயாரிப்பாளர் குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குமாருடன் பதினான்கு ஆண்டு காலம் பழகி இருக்கிறேன். அவர் ஒருபோதும் பணத்திற்கு ஆசைப்படாமல் என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
பணத்திற்காக என்னை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் இதுவரை அழைத்து வந்திருக்கிறார். இன்று ஒரு வெற்றிப் படமாக அமைத்துக் கொடுத்ததற்காகவும் தயாரிப்பாளர் குமாருக்கும்இந்தப் படத்தின் வெளியீட்டு தருணத்தில் உதவிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி”.