கலெக்டரின் ஒற்றை விசில் 💓👌🥳
கலெக்டரின் ஒற்றை விசில்
💓👌🥳
ஒற்றை விசில்
நான்
‘உங்களில் ஒருவன்’
என்பதை
காற்றில் எழுதி
செவியில் நுழைந்து
மக்களில் கலந்தது
அந்த விசில்..
கலெக்டர் என்றால்
கடக்கமுடியா தூரம்
என்ற பிம்பம் உடைத்து
மக்களை
ஒரு நொடியில்
ஆட்சியோடு இணைத்த
ஒரு சப்தப் பாலம்
அந்த விசில்..
ஒரு ஏகலைவன் பிள்ளை
அதே கட்டைவிரலை
வாயில் வைக்க
பிறந்த ஒலி
அந்த விசில்..
துரோணாச்சாரிகள்
தூக்கம் தொலைக்க
ஆலாபனை இல்லாத
அசுர கீதம்
அந்த விசில்..
பாரதி அவனின் தாசன்
பெரியார் -அம்பேத்கர்
என்பதுபோன்ற
பெரிய..பெரிய
வார்த்தைகளை
ஒரு நொடியில்
ஒலி பெயர்த்தது
அந்த விசில்…
நீயும் கண்ணன்தான்
நிறத்தால் மட்டுமா!
அவன் உதட்டில் குழல்
உன் உதட்டில் விசில்.
வரலாறு நெடுக
மேய்ப்பர்களின்
எளிமையை
ஆடும் ஒட்டகமும்
மாடும் மட்டும்தான்
சொல்லமுடியுமா?
நேற்று 25.09.2022
ஒரு விசில் ரீங்கரித்துச்
சொன்னது
நானும் ஒரு
மக்கள் கலெக்டராய்
மலர்வேன் என!
– கவிஞர் நந்தலாலா
படம் – துளிர் ஸ்டியோ