தாடியை ‘ஷேவிங்’ பண்ண சொன்னதால் கல்லூரியில் தீக்குளிக்க முயன்ற மாணவன் கைது!
தாடியை ‘ஷேவிங்’ பண்ண சொன்னதால் கல்லூரியில் தீக்குளிக்க முயன்ற மாணவன் கைது
வரச்சொன்னதால் திருவொற்றியூர் அரசு கல்லூரியில் முதல்வர் அறைமுன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூர் தேரடி அருகே அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு திருவொற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரி முதல்வர் வேணுகோபால் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை தலை முடியை வெட்டிவிட்டு, தாடியை ‘ஷேவிங்’ செய்துவிட்டு ஒழுக்கமாக வரவேண்டும் என கூறினர். ஆனால் மாணவர்கள் யாரும் முடிவெட்டாமல், ‘ஷேவிங்’ செய்யாமல் வந்தனர்.
எனவே, ‘ஷேவிங்’ செய்யாமல் தாடியுடன் வந்தால் அந்த மாணவருக்கு கல்லூரிக்குள் அனுமதி இல்லை என கூறி உள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில் நேற்று காலை பி.ஏ.ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படிக்கும் திருவொற்றியூர் குப்பம் பட்டினத்தார் கோவில் தெருவை சேர்ந்த அருண்காந்த் என்பவருடைய மகன் நிரஞ்சன்(வயது 19) கல்லூரிக்கு தாடியுடன் வந்தார்.
அவர் வீட்டிலிருந்து வரும்போதே சின்ன பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவர், தனது உடலில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி, கல்லூரி முதல்வர் அறை முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
3 பேர் கைது
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கொடுத்த தகவலின்பேரில் திருவொற்றியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் விரைந்து வந்து கல்லூரி வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற மாணவர் நிரஞ்சன் மற்றும் அவருடன் ஒரே வகுப்பில் படிக்கும் சாலமன் (19), சதீஷ்குமார் (19)ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
பின்னர் கல்லூரி வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது, பேராசிரியர்களை மிரட்டி தரக்குறைவாக பேசியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறும்போது, “மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்லூரிக்கு வரவேண்டும் என்று கூறினால் பேராசிரியர்களை மிரட்ட இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று தொடர்ந்தால் நாங்கள் எப்படி பாடம் நடத்த முடியும்?. எப்படி கல்லூரி மாணவனை நல்ல மாணவனாக உருவாக்க முடியும்?” என்று வேதனை தெரிவித்தனர்.