சுழன்றடிக்கும் சர்ச்சை ! சாட்டையை சுழற்றும் ஆணையர் !
சுழன்றடிக்கும் சர்ச்சை ! சாட்டையை சுழற்றும் ஆணையர் ! சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “தவறு செய்யும் கட்சியினர் கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும்” என்பதாக கறார் காட்டியிருந்தார் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
கழகத்தின் இந்த அறிவிப்பைக் கண்டு கழக உடன்பிறப்புக்கள் அதிர்ந்துக் கிடக்கும் சூழலில், ”கட்சிக்காரர்களின் தலையீட்டால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை” என்பதாக மதுரை மாநராட்சி அதிகாரிகள் புலம்பித் தீர்க்க, இரகசியமாக பட்டியல் ஒன்றை தயாரித்து தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம், மதுரை மாநகராட்சி தரப்பில். முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து திரும்பியதும் சரவெடி காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
மதுரை மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக தினேஷ் குமார் பொறுப்பேற்றதில் இருந்து ”நேற்று இல்லாத மாற்றம்” என்கிறார்கள். மதுரை மாநகராட்சியின் சார்பில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கொடுக்கும் புகார்களை விசாரித்து ஏழு நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என கறார் காட்டுகிறாராம்.
இதற்கு இடையூறாக, அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று ஒரு தரப்பும்; கவுன்சிலர், கட்சியினர் ”கட்டிங்”காக கிடப்பில் போட்டுவிடுகிறார்கள் என்று ஒரு தரப்பும் மாறி மாறி புகார் வாசிக்க, இரண்டு தரப்பிலும் விசாரித்து பட்டியலை தயாரித்திருக்கிறாராம் ஆணையர்.
கட்டிடங்களுக்கு மாநகராட்சி சார்பில் சொத்துவரி தீர்மானித்த பிறகு, முறைகேடாகடிஜிட்டல் முறையில் சொத்து வரியை குறைத்து வசூலித்த குற்றச்சாட்டின் கீழ் 5 மண்டலங்களில் பணியாற்றிய வரி வசூலிப்பவர்கள் 5 பேரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்திருக்கிறார் ஆணையர்.
மாநகராட்சி வழங்கியிருந்த டிஜிட்டல் உள்நுழைவு அனுமதியைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டதோடு; இதன் வழியே தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்திருப்பதோடு, மாநகராட்சிக்கு 1.5 கோடி வரையில் நிதியிழப்பை ஏற்படுத்திவிட்டார்கள் என்று சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார், ஆணையர்.
ஏற்கெனவே, வருடாந்திர கணக்கு சரிபார்ப்பு பணியின்போது வெளியான பல்வேறு ஊழல் முறைகேடுகள் அம்பலமானதையடுத்து, ”ஆடிட்டிங்கால் ஆடிப்போன மாநகராட்சி” என்ற தலைப்பில் அங்குசம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தற்போதைய குற்றச்சாட்டுகளும் சேர்ந்திருக்கின்றன.
இவை குறித்த விளக்கமறிய சம்பந்தபட்ட மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரை சந்திக்க முயற்சித்தோம். ஆணையர் பிசியாக இருப்பதாக, அவரது உதவியாளர் கூற, தொலைபேசியில் தொடர்புகொண்டோம், மீட்டிங் ஒன்றில் இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் சொன்னவர் திரும்ப நமது லைனில் வரவேயில்லை.
ஷாகுல் படங்கள்:ஆனந்தன்