பொதுத்தேர்வு மதிப்பெண் குளறுபடி – சிக்கலில் அரசியல் புள்ளிகள்….?
பொதுத்தேர்வு மதிப்பெண் குளறுபடி – முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கு தொடர்பா..? மதுரையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தை ஏற்கெனவே, அங்குசம் இதழில் அம்பலப்படுத்தியிருந்தோம்.
முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டு 9 பேரை மதுரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்த தகவலையும் பதிவு செய்திருந்தோம்.
இந்த விவகாரத்தின் அப்டேட் தகவலாக, கல்வித்துறை சார்ந்த பணியாளர் பிரபாகரனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததில், கல்வித்துறை அதிகாரிகள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரையில் பலரின் பெயரை ஒப்புவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்களை உச்சரித்திருக்கிறாராம் பிரபாகரன்.
இந்த தகவலை உறுதிபடுத்த, சிபிசிஐடி டி.எஸ்.பி. சரவணனை நேரில் சந்தித்தோம். “பிரபாகரனை ஒருநாள் கஸ்டடி எடுத்தது உண்மைதான். ஆனால், அப்படி ஒன்றும் பெரிதாக கூறிவிடவில்லை. பெற்றோர்களின் பேராசைதான் காரணம். அப்பா, மகன், தம்பி, மனைவி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஜெயிலில் இருக்கிறார்கள்.” என்பதாக முடித்துக்கொண்டார் அவர்.
பிரபாகரன் வழக்கமாக வாக்கிங் செல்லும்போது, பழக்கமான முன்னாள் எம்.எல்.ஏ.வின் சகோதரரை வைத்தே, இவ்வளவு காரியங்களையும் பிரபாகரன் செய்யத் துணிந்ததாக, கல்வித்துறை வட்டாரத்தில் அடித்துக்கூறுகிறார்கள். பொருத்திருந்துதான் பார்ப்போமே, வழக்கின் போக்கு எத்திசையில் பயணிக்கிறதென்று?
ஷாகுல் படங்கள்: ஆனந்தன்