அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாணவர்களை மனநோயாளிகளாக்கும் போட்டித்தேர்வுகள் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்தியாவில் இன்று கல்வி மாணவர்களின் அறிவை வளர்க்கும் கருவியாக அல்லாமல் பெரும் வணிகமாக மாறி வருகிறது. குறிப்பாக நீட் (NEET) மற்றும் யுபிஎஸ்சி (UPSC) போன்ற தேசிய அளவிலான தேர்வுகள், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன. இந்தத் தேர்வுகள் திறமையான மருத்துவர்களையும் நிர்வாக அதிகாரிகளையும் உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டாலும், இப்போது அவை மாணவர்களின் மனநலத்தையும் குடும்பங்களின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் அமைப்புகளாக மாறிவிட்டன என்ற விமர்சனம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
இந்த இரண்டு தேர்வுகளும்தான் தற்போதைய இந்திய மாணவர்களின் பெரும் கனவாக இருக்கிறது. மொத்தச் சமூகமும் இதை நோக்கியே நகர்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள், இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பெரும் வணிகம்தான் அதற்குக் காரணம், ஊடகங்களும் பயிற்சி மையங்களும் இதில் பெரும் பங்கு வைக்கின்றன.
நீட் தேர்வு: வினாத்தாள் கசிவு
நீட் தேர்வு இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவக்கல்வி முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
முன்பு மாநில அரசுகள் தங்களது தனிப்பட்ட நுழைவுத் தேர்வுகள் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொண்டன. ஆனால் நீட் அறிமுகமான பிறகு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே தேர்வை எழுத வேண்டிய நிலை உருவானது. இதனால் போட்டி மிகவும் அதிகரித்தது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் மட்டும் சுமார் இருபத்திநான்கு லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். ஆனால் இந்தியா முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் சுமார் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து பதினைந்து ஆயிரம் வரையில்தான் உள்ளன. அதிலும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மிகவும் குறைவு. இதனால் பல லட்சம் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தோடு போட்டியிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மாறும் வாழ்க்கை
இந்தப் போட்டி மாணவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றி வருகிறது. பல மாணவர்கள் பத்தாம் வகுப்பிலிருந்தே நீட் பயிற்சிக்காக மையங்களில் சேர்க்கப்படுகின்றனர். தினமும் பத்து மணி நேரத்திற்கும் மேலாக படிப்பது. தொடர்ந்து மாதிரித் தேர்வுகள் எழுதுவது, பெற்றோரின் எதிர்பார்ப்பைச் சமாளிப்பது போன்ற காரணங்களால் அவர்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு, பல மாணவர்களுக்கு ஒரு பதட்டமாக மாறி வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நீட் தேர்வுடன் தொடர்புடைய மாணவர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தோல்வி பயம், குடும்ப அழுத்தம், சமூக ஒப்பீடு ஆகியவை மாணவர்களின் மனநிலையை கடுமையாகப் பாதிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் கேள்விகள்
இந்த நிலையை மேலும் மோசமாக்கியது 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஏற்பட்ட நீட் வினாத்தாள் கசிவு ஆகும்.. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள்கள் வெளியானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில மாணவர்கள் தேர்வுக்கு முன்பே கேள்விகளை பெற்றதாக விசாரணைகளில் தெரியவருகிறது. இந்த செய்தி நாடு முழுவதும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாதங்கள் கடுமையாக உழைத்துப் படித்த மாணவர்கள், “நேர்மையாக படிப்பதற்கு அர்த்தமுண்டா?” என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினர். உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியது. தேர்வு முறைமையின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் மாணவர்களின் மனநிலையை மேலும் சீர்குலைத்தன.
மீண்டும் படிக்கமுடியுமா
வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு சில மையங்களில் மறு தேர்வு நடத்துவது குறித்து விவாதங்கள் நடந்தன. இந்த அறிவிப்பே மாணவர்களுக்கு இன்னொரு பெரிய மனஅழுத்தமாக மாறியது. ஏற்கனவே பல மாதங்கள் மனஅழுத்தத்தில் படித்த மாணவர்கள், மீண்டும் அதே அழுத்தத்தை சந்திக்க வேண்டுமா என்ற பயத்தில் தவித்தனர். பல மாணவர்கள் தேர்வு முடிந்த பிறகும் நிம்மதியாக தூங்க முடியாமல் இருந்தனர். “மீண்டும் படிக்க முடியுமா?”, “ஒரு வருடம் வீணாகிவிடுமா?” என்ற கேள்விகள் அவர்களை தொடர்ந்து துரத்தின.
இந்த நிலையை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்வது தனியார் கோச்சிங் மையங்களாகும். டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நீட் பயிற்சி மிகப்பெரிய வணிகமாக மாறியுள்ளது. “100% தேர்ச்சி”, “முதல் ரேங்க் “நிச்சய வெற்றி” போன்ற விளம்பரங்கள் மூலம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பயத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குகின்றனர். பல குடும்பங்கள் கடன் வாங்கி கோச்சிங் கட்டணத்தை செலுத்துகின்றன. கல்வி இன்று ஒரு சேவையாக இல்லாமல், மிகப்பெரிய வணிக அமைப்பாக மாறிவிட்டது என்ற விமர்சனம் அதிகரித்துவருகிறது. நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும் நீட் தேர்வை பிழையில்லாமல் நடத்தினால் போதும் என்ற மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
யுபிஎஸ்சி தேர்வு: குழப்பங்கள்
இதேபோல் யுபிஎஸ்சி தேர்வும் இந்திய மாணவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் தேர்வாக மாறியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வு இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் பன்னிரண்டு முதல் பதிமூன்று லட்சம் மாணவர்கள் யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அதில் சுமார் ஐந்து அல்லது ஆறு லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். இறுதியில் தேர்ச்சி பெறுவது சுமார் ஆயிரம் மாணவர்களே.
2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற யூபிஎஸ்சி முதற்கட்டத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக மாணவர்களும் கல்வியாளர்களும் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வழக்கமான முறையில் இல்லாமல் மிகவும் ஆழமான அடிப்படையில் அமைந்திருந்தன. நடப்பு நிகழ்வுகளையும் பழைய பாடங்களையும் இணைத்து கேள்விகள் கேட்கப்பட்டன. பல கேள்விகள் நீளமாகவும் சிக்கலாகவும் இருந்தன. மாணவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் “Option Elimination” முறை பல இடங்களில் வேலை செய்யவில்லை. குறிப்பாக CSAT பகுதி மிகவும் கடினமாக இருந்ததாக பலர் தெரிவித்தனர். பல ஆண்டுகள் தயாராகியிருந்த மாணவர்களுக்குக் கூட இந்தத் தேர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேள்விக்குறியாகும் சமவாய்ப்பு
யூபிஎஸ்சி மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் இந்தத் தேர்வை மையப்படுத்தியே நகர்கிறது. பலர் வேலை வாய்ப்புகளை விட்டுவிட்டு முழுநேரமாக படிக்கின்றனர். குடும்பத்திலிருந்து விலகி சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் தங்கி படிக்கின்றனர். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஒரே தேர்வுக்காக வாழ்க்கையை செலவிடுகின்றனர். ஆனால் வெற்றி பெறுவது மிகச் சிலரே. இதனால் தோல்வி அடையும் மாணவர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். பல மாணவர்கள் தங்களது வாழ்க்கையே தோல்வியடைந்துவிட்டதாக உணர்கிறார்கள்.
யூபிஎஸ்சி தேர்வைச் சுற்றியும் மிகப்பெரிய கோச்சிங் தொழில் உருவாகியுள்ளது. இன்று இந்தியாவில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்தத் தேர்வுகள் உண்மையில் மாணவர்களின் அறிவையும் திறமையையும் சோதிக்கிறதா? அல்லது மனஅழுத்தத்தை தாங்கும் திறனை சோதிக்கிறதா? பணம் உள்ளவர்களுக்கு நல்ல கோச்சிங், நல்ல வசதி, நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறது. ஆனால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் சமமான வாய்ப்புகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் “சம வாய்ப்பு” என்ற கருத்தே கேள்விக்குறியாகிறது.

பாரதி பாலன்
பாரதி பாலன்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

HARINI JEWELLERS TRICHY

கல்விமுறையில் மாற்றம் தேவை
இந்த நிலையை மாற்ற கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது. வினாத்தாள் பாதுகாப்பு முறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மறு தேர்வு போன்ற முடிவுகள் மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். கோச்சிங் மையங்களுக்கு கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பட்ட ஆதரவு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மனநல ஆலோசனை மையங்கள் அனைத்து போட்டித் தேர்வு மையங்களிலும் அமைக்கப்பட வேண்டும். ஒரே தேர்வில் வாழ்க்கை முடிவடையும் நிலையை மாற்ற புதிய மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகள் நாட்டிற்கு மருத்துவர்களையும் நிர்வாக அதிகாரிகளையும் உருவாக்குகின்றன என்பது உண்மை. ஆனால் அதே நேரத்தில், இந்தத் தேர்வுகள் மாணவர்களின் மனநலத்தையும் குடும்பங்களின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. வினாத்தாள் கசிவு, மறு தேர்வு அச்சம், கடினமான வினாத்தாள்கள், கோச்சிங் மையங்களின் வணிகம் ஆகியவை மாணவர்களின் வாழ்க்கையை நிரந்தரமான மனஅழுத்தமாக மாற்றிவருகின்றன.
அழியும் மனஅமைதி
கல்வி என்பது மாணவர்களின் கனவுகளை வளர்க்க வேண்டுமே தவிர, அவர்களின் மன அமைதியை அழிக்கக்கூடாது. அதனால் போட்டித் தேர்வுகள் மனிதநேயத்துடனும் சமத்துவத்துடனும் மாணவர் நலனை மையமாகக் கொண்டு மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் இன்று மிகவும் அதிகமாக உள்ளது.
மாணவர்களின் தகுதியை மதிப்பிடக் கூடிய இந்தத் தேர்வுகளை நடத்துகின்ற இந்தியாவின் மிகப் பெரிய தேர்வு அமைப்புகளான நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு அமைப்புகளின் தகுதியே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தேர்வு நடத்துகிற அமைப்பு தேர்வு நடத்துவதற்கு முன்பே தோல்வி அடைந்துவிடுவது மிகப்பெரிய அவலம்.

—   பாரதி பாலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.