மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது ? அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன ?
மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் உள்ள 3707 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. குறிப்பாக பழனி திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோயில்களில் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
அந்த அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளை தொடர்ந்து தமிழக அரசு விரைவுபடுத்திவருகிறது. மீனாட்சி திருக்கோவிலில் 186 பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ23 கோடியே 70 இலட்சம். திருக்கோவில் நிதி மூலம் 8 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் 117 பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. உபயதாரர் வழங்கிய நிதி 14 கோடியே 80 இலட்சம் செலவில் 69 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் டிசம்பர்மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீர வசந்தராயர் மண்டபத்தை மீண்டும் சேர வைப்பதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஒரே அளவாக சுமார் 15 அடி நீளமுள்ள கற்கள் நமது குவாரிகளில் கிடைப்பது மிகுந்த சவாலாக உள்ளது. இதற்கு தேவைப்படும் தூண்களின் எண்ணிக்கை 79 இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட தூண்களின் எண்ணிக்கை 18. இந்தமண்டபத்தை சீரமைப்பதற்கான தொகை ரூ35 கோடியே 30 இலட்சம் ஆகும். வரவேண்டிய 61 தூண்கள் தயார் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கான குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும்.
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ளலாமா? என்பது குறித்து கோவில்பட்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு அவர்கள் ஒப்புதல் அளித்தால் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட 18 உபகோவில்கள் உள்ளன. இவற்றில் 9 கோவில்களுக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சி உள்ள அனைத்து உப கோவில்களுக்கான குடமுழுக்கு பணிகள் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு பெறும். தேர்தலுக்காக நாங்கள் இந்த பணியை மேற்கொள்ளவில்லை. தேர்தல் இல்லை என்றாலும் எங்களின் ஆன்மிக பணி தொடரும். திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான இறுதி வடிவம் கிடைத்தவுடன், ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். ” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.