கரை ஆக்கிரமிப்புகளை என்ன செய்யும் மாநகராட்சி
வா நண்பா ஏன் இவ்வளவு தாமதமா வந்திருக்க.
நீ வேற.. வர்ர வழில செம மழை. பத்தாக்குறைக்கு அங்கங்க தெப்பக்குளம் போல தண்ணீர்தேக்கம் வேற. அதான் லேட்டாயிருச்சு.
அப்படியா ! நீங்க என்னை ஒழுங்க வச்சிருந்தா மழைத்தண்ணீ ஏன் ரோட்ல நிக்கப்போகுது.
சரி சிட்டிசன் பார் உய்யங்கொண்டான்ல வேலைலாம் எப்படி போய்டு இருக்கு.
அதெல்லாம் நல்லாத்தான் போகுது ஆனா கரைல நிறைய இடத்துல மருத்துவனை, பள்ளி, வணிக நிறுவனங்கள்ன்னு நிறைய இருக்கு அதுனாலதான் வேலைல கொஞ்சம் தொய்வு.
ஓ! அதுவா! காலப்போக்குல நீங்கள் அனைவரும் என்னை மறந்ததில் ஏற்பட்ட விளைவுகளில் அதுவும் ஒன்னு. தண்ணீர் குறைய குறைய என் கரை மீது தொழில் தொடங்க கட்டுமானம் கட்டுவதும், குடியிருக்க வீடுகள் கட்டுவதும் அதிகரிக்கத்தொடங்கியது. மக்கள் அதிகரிப்பு காரணமாக மாநகராட்சியும் அதை அப்போது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
எனவே, தற்போது, மருத்துவமனை, பள்ளிகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புகள் என பன்மடங்கு அதிகரித்துவிட்டன. கழிவுகளை சுலபமாக என் மீது கலப்பதற்கும் அது வழிவகுத்துவிட்டது.
ஒரு கட்டத்தில எனக்கே ஒரு பயம் வந்துருச்சு என்னை பாதுகாக்க இவங்க சட்டத்துல இடம் இருக்கா இல்லையான்னு. இந்த பயம் எனக்காக மட்டும் அல்ல. கரையில இருக்கறவங்களுக்காகவும் தான். ஏன்னா? வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாதிக்கப்படக்கூடியவங்க அவங்களும் தான்.
அதனால இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கான்னு திருச்சில இருக்க ஆற்று பாதுகாப்பு கோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் செயற்பொறியாளர் பெ. கணேஷனிடம் கேட்டப்போ 1905ம் ஆண்டு ஆற்றுப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுச்சு, அதன்பிறகு, 2007ம் ஆண்டு அதில் திருத்தம் செய்யப்பட்டது. அதில், கரையோரம் வீடுகள் இருக்கக்கூடாது, அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று வீடுகள் தரவேண்டும். வணிகநோக்கத்துடன் எந்த ஒரு தொழில்களும் கரையின் மீது செயல்பட்டுத்தக்கூடாதுன்னு சட்டமே இருக்குதுன்னு சொன்னாரு.
அப்போ, இங்க செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்களுக்கெல்லாம் அனுமதி கொடுத்தது யாரு? கரையோரத்துல இருக்கற வீடுகளுக்கு மாற்று வீடு ஏன் இன்னும் இந்த மாநகராட்சி தரல. எனக்காகவும் இல்லாம மக்களுக்காகவும் இல்லாம இந்த மாநகராட்சி யாருக்காக செயல்படுதுன்னு ஒரு கேள்வியும் வந்துச்சு. இப்பவே திருச்சியின் கூவம்னு எல்லாரும் என்ன சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த மாதிரியான கரையோர குடியிருப்பு, நிறுவனங்கள்ன்னு வைச்சி, தற்போது சென்னையில் உள்ள கூவத்தின் நிலைக்கு என்னை மாத்திடுவாங்களோன்னு பயமும் எனக்கு இருக்கு.
ஆரம்பத்திலேயே கூவம் ஆத்துல இதை சரி செய்யாத காரணத்தினால், தற்போது கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொண்டு வருகிறது பெருநகர சென்னை மாநகராட்சி. இதற்காக, அவர்களின், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்பட குழந்தைகளுக்கு பள்ளிகள் கூட மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலை எதைக்கொண்டு ஈடுசெய்யப்போகிறது அந்த மாநகராட்சி.
ஒவ்வொரு வரும் தங்களின் இருப்பிடத்திற்கு தகுந்தாற்போலே தொழிலை ஏற்படுத்திகொண்டுள்ளனர், இப்போது அவர்களின் வாழ்வாதாரத்தின் நிலமை என்ன. பற்றாக்குறைக்கு கூவம் ஆற்றங்கரையோரம் இருக்கும் தொழில் நிறுவனங்களை அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறுகிறது மாநகராட்சி. வரும் முன் காத்தல் என்பது மாறிபோய் பட்டால் உணரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
வளரும் நகரங்களுக்கு இது உகந்தது அல்ல. நல்லவேளை திருச்சி இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை, ஆனால், கூடியவிரைவிலேயே அந்த இடத்திற்கு வந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை. அதுக்குள்ளாவது இந்த மாநகராட்சி விழித்துக்கொள்ளவேண்டும்.
சரி, நீ போய்டு வா. மழை வர மாதிரி இருக்கு. அடுத்த வாரம் பார்க்கலாம்.