உய்யகொண்டானாகிய நான் நாசமான கதை… தொடர் – 3

0

உய்யகொண்டானாகிய நான் நாசமான கதை… தொடர் – 3

 

காவிரியில் இருந்து பிரியும் வாய்க்கால்களிலேயே அதிகமான விளைநிலங்களுக்கு பாசனம் செய்யும் நான், தற்போது திருச்சியின் கூவமாக மாறிய கதையை சொல்கிறேன் கேள்.

2 dhanalakshmi joseph

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டை வளர்ச்சி பாதைக்கு இழுத்துச் செல்ல முதலாளித்துவ கொள்கையை கையில் எடுத்தது. மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியாவில், சென்னையை தன்னகப்படுத்த காட்டிய முயற்சியில் துளி அளவும் கூட குடகை பெறுவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறான என் அன்னை காவிரி பிறக்கும் இடம் கர்நாடக மாநிலமானது.

வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து மாநிலங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், பெங்களூருவை கர்நாடக மாநிலத்தின் தொழில் நகரமாக உருவாக்கி காவிரியின் தண்ணீரை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதுமுதலே, பருவ மழை தள்ளிப்போகும் அல்லது ஏமாற்றும் கால கட்டத்தில் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு குறைய தொடங்கியது.

- Advertisement -

- Advertisement -


தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், திருச்சி பகுதிமக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் முனைப்போடு, பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிறு மற்றும் குறு தொழில் துவங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு திருச்சியைச்சுற்றி பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவையனைத்திற்குமான தண்ணீர் தேவைக்கு நான் (உய்யகொண்டான்) பயன்பட்டேன்.

எம் மன்னன் இராஜராஜ சோழன் எதற்காக என்னை அரும்பாடுபட்டு வெட்டினானோ, அதற்கு நேர்மாறாக விவசாயத்துக்கான தேவையை கருத்தில் கொள்ளாமல் நிறுவனங்களின் தேவையை முக்கியமாக பார்க்க ஆரம்பித்தனர்.

அடுத்தடுத்த காலங்களில், பருவமழை முறையாக பெய்யாததாலும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வேலைவாய்ப்பிற்காக நகரங்களுக்கு நகர ஆரம்பித்தனர். அதனால், திருச்சியின் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியது. திருச்சி முறையாக கட்டமைக்கப்படாத நகரம். ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர அந்தந்த பகுதி மக்களின் தேவைக்கேற்ப நகர கட்டமைப்பு உருவானது.

இந்த கட்டமைப்பால் ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப சரியான திட்டமிடல் இல்லாத மாநகர பாதாள சாக்கடைகளும், சாக்கடை கால்வாய்களும் என்னுடன் இணைத்து ஒட்டுமொத்த கழிவுகளையும் நானே சுமக்கும் நிலை ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தில் உருவாகி தஞ்சையில் முடிவடையும் நான் இடையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள ஆறுகண்ணில் இருந்து திருவெறும்பூர் வரையில் சாக்கடைகளாலே நிரம்புகின்றேன்.

4 bismi svs

மாநகரின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாக்கடையினை மிகப்பெரும் மோட்டார்கள் வைத்து திருச்சி-மதுரை சாலையில் பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சேமிப்பு நிலையத்துக்கு அனுப்பினர். ஆனால், அந்த கழிவு நீர் சேமிப்பு நிலையத்தில் சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்யும் பணி சரியாக நடைபெறாததால் கழிவுகள் அனைத்தும் கோரையாற்றில் கலந்து விடுகின்றனர். நகரத்திலிருந்து பெரும் திட்டத்துடன் வெளியே கொண்டு போய் விடப்பட்ட சாக்கடை நீர் அனைத்தும் கோரையாறு என்னும் என் சகோதரனுடன் கலந்து என்னுடன் மீண்டும் ஆறுகண் (ஊமச்சி குறிச்சி) பாலத்தில் வந்து சேர்ந்து விடுகிறது.

அது மட்டுமின்றி அங்கிருந்து குடமுருட்டியாக செல்லும் என் சகோதரன் மீது, சீனிவாசநகர், ராமலிங்க நகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்த கழிவுகள் அனைத்தும் நேரடியாக பாதாள சாக்கடை மூலம் வந்து என் சகோதரனான குடமுருட்டியில் கலந்து நாசம் செய்கின்றனர்.

இவர்களின் விவசாய நிலங்களை வாழ வைக்க வந்த என்னையே நீதிமன்றம் – அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகில் மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள பெரும் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், வீட்டுக்கழிவுகள் என அனைத்து இடங்களில் இருந்து வெளியேறும் சாக்கடைகளும் என்னுடன் கலக்கிறது. என் போதாத நேரம் அரசு மருத்துவமனையின் கழிவுகள் வேறு என்னுடன் கலந்து என்னை மற்றோர் பார்க்க கூச செய்தது.

தில்லைநகர் பகுதி முழுவதிலும் வெற்றிலை கொடிக்கால்களை வளர்த்தெடுத்த என்னுடைய கிளைவாய்க்கால் மீது தில்லைநகர், சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்காக மக்களின் வீட்டு சாக்கடைகள் அனைத்தையும் கலந்து நாசம் செய்தனர்.

வயல்களாகவும் வேலிகளாக இருந்த இடங்களெல்லாம் தற்போது, கல்வி நிறுவனங்களாகவும், பெரும் மருத்துவ மனைகளும், வணிக வளாகங்களாகவும் மாற்றி விட்டனர்.

நான் கூறிய அனைத்தும், ஒட்டுமொத்த என் பயணத்தின் ஒரு பகுதியே. இன்னும் இருக்கிறது, கேட்டால் நீயே மலைத்து போவாய். பேருக்காக ஆங்காங்கே கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திருந்தாலும், அவையனைத்தும் செயல்படாமலேயே இருக்கின்றன.

உதாரணமாக மேலசிந்தாமணி குடியிருப்பு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படுவதில்லை என்பது அருகில் இருக்கும் என்னை பார்த்தாலே உனக்கு தெரிந்துவிடும். இன்னும் பீமநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடையே நான்தான். என் மீது வந்து சேரும் இறைச்சி கழிவுகளும், நேரடியாக என்னிடம் வந்து சேரும் மலத்தாலும் நான் என்ன செய்வேன். நீயே சொல்… என்னை குறித்து கவலைப்படாதது மட்டுமின்றி சுற்றுச்சூழலும் மாசடைவதை உணர மறுக்கின்றனர் இந்த ஊர் மக்கள்.

மழை நீர் வடிகால்கள் அனைத்தும் சாக்கடையாக மாறிப்போனதால் அதில் வரும் கழிவுகள் சரியாக தூர்வாரப்படாமல் ஆங்காங்கே தேங்கி அடைப்பு ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் மழை காலங்களில் வடிகால்களில் செல்ல வேண்டிய மழை நீர் சாலையில் செல்கிறது.

மழை நீர் நிலத்தடி நீராக மாற்றுவதற்கோ, மழை நீரை என்னுடன் சேர்ப்பதற்கோ இதுவரை இந்நகர வாசிகளோ, அரசோ சரியான திட்டமிடுதலை செய்யவில்லை.

ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் என்னை வைத்து அரசியல் செய்ய மட்டும் யாரும் மறப்பதில்லை. அவ்வாறாக என்னை வைத்து யார் யார் லாபமடைந்தார்கள் என்று அடுத்த வாரம் கூறுகிறேன் வா…

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.