மாநகராட்சி தேர்தல் சீட்டுக்கு மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள் – தொடங்கியது தேர்தல் பரபரப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளுக்கு விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்ற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்த நேரத்தில் தொடர்மழையின் காரணமாக மீண்டும் மீட்புப்பணி, முன்னெச்சரிக்கை பணி, பாதுகாப்பு பணி போன்ற மழைக்கால பணியில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர். அதேசமயம் மாநகராட்சி தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி அரசு தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கக் கூடிய நிலையில் திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநகராட்சி மேயர் பதவிக்கான பேச்சை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கிறது, மேலும் கவுன்சிலர் பதவிக்கான கருத்துகளை திமுகவின் மாவட்ட தலைமைக்கு தெரியப்படுத்த தொடங்கிவிட்டனர் கூட்டணிக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள். மேலும் திமுகவின் கூட்டணி உள்ள காங்கிரஸ் கட்சி மட்டும் மேயர் பதவிக்கான சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மற்ற கட்சிகள் அதிகப்படியான கவுன்சிலரை பெறுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர். இப்படி ஒவ்வொரு கட்சிகளும் மாநகராட்சியில் தங்களுக்கு சாதகமான வார்டுகள், தங்கள் கட்சி செல்வாக்கு கொண்ட வார்டுகள் எது என்று தற்போது பட்டியல் தயார் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியின் நிலை இப்படி இருக்க, திமுகவில் கவுன்சிலர் சீட்டை எதிர்பார்த்து உள்ளவர்கள் தங்கள் வார்டுகளில் பணங்களை வாரி இறைத்து மழைக்கால மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாஜக கோயம்புத்தூர் அல்லது திருப்பூர் மேயர் பதவிகளை எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அதிமுக தரப்பு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மாவட்ட அதிமுக நிர்வாகிகளோ செலவு செய்பவர்களுக்குத் தான் சீட்டு என்று, சீட்டுக்காக சந்திக்க வரும் நிர்வாகிகளின் காதுகளில் கேட்கும் படி சொல்கிறார்களாம்.