கவுன்சிலர் பதவியை குறிவைக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் !
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறார். இதன் பொது செயலாளராக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் உள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைப்பில் நடந்துமுடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். இதில் 125 பேர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்த உற்சாகத்தில் இருக்கக்கூடிய விஜய் மக்கள் இயக்கம் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இவ்வாறு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்கள் முழு விவரங்களையும், விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து அவர்கள் செய்திருக்கக்கூடிய மக்கள் பணியையும் பட்டியலிட்டு தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும் தற்போது நடக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்களே மேயர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் அதிக அளவிலான கவுன்சிலர் சீட்டுகளை கைப்பற்ற வேண்டுமென்று விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பிளான் போட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு விஜய் மக்கள் இயக்க தலைமையும் கைகாட்டி விட்டதால் மாவட்ட தலைமை நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணியில் இறங்கி உள்ளனர்.
அதே வேளையில் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் இருந்து ஒரு குழுவை அமைத்து நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பட்டியலை தற்போதே தயார் செய்ய தொடங்கி இருக்கிறார்.