அங்குசம் செய்தி எதிரொலி : அதிகாரியை வீட்டுக்கு அனுப்பிய மாநகராட்சி – பின்னணி இதுதான் ! வீடியோ !
குப்பைக்கிடங்கு ஊழல்
தஞ்சாவூர் நகராட்சியின் கமிஷனராக சரவணக்குமார் பணியாற்றி வந்த சமயத்தில், அங்குசம் செய்தியின் எதிரொலியாக, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிட மாறுதலில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தகுதி இறக்கம் செய்யப்பட்டு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், சரவணக்குமாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா.
பின்னணி என்ன ?
எதற்கும் பயனற்றது என்று எல்லோரும் ஒதுக்கித் தள்ளும் குப்பையில் இருந்தும்கூட, பத்து கோடி ரூபாய் வருமானம் பார்க்க முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஒற்றை கையெழுத்திட்டால் இதுவும் சாத்தியமே என்று அசத்தியிருந்தார், அப்போது தஞ்சாவூர் மாநகராட்சியின் கமிஷனராக இருந்த சரவணக்குமார்.

குப்பைக்கிடங்கிலிருந்து அள்ளாத குப்பையை அள்ளியதாக கணக்குக் காட்டி; மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதாக தரம்பிரித்து அவை அப்புறப்படுத்தப்பட்டதாக பொய் கணக்கு எழுதி சுளையாக பத்து கோடி ரூபாயை மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கி, இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையை எதிர்கொண்டு வந்த நிலையில்தான் இந்த நடவடிக்கை தற்போது பாய்ந்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில், “குப்பையில் பத்து கோடி : தில்லாலங்கடி அதிகாரி ! மாநகராட்சியின் நிர்வாக முறைகேடு !” என்ற தலைப்பில் விரிவான செய்தி மற்றும் அங்குசம் யூடியூப் சேனலில் நேர்காணல் ஒன்றையும் வெளியிட்டிருந்தோம்.
முழுமையான வீடியோவை காண
குப்பையில் பத்து கோடி ! தில்லாலங்கடி அதிகாரி !
ஊழலை அம்பலப்படுத்திய போர்வாள் என்.கோவிந்தராஜன் :
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெபமலைபுரம் என்ற குப்பை கிடங்கில் சுமார் 2,30,000 கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கிக் கிடந்தது. அவற்றை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்பதாக பிரித்து அப்புறப்படுத்துவதற்கு கடந்த 2018 இல் எம்.எஸ்.ஜி. இன்ஃப்ரா என்ற தனியார் நிறுவனத்துடன் தஞ்சை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 19.12.2018 முதல் 22.08.2022 வரையிலான கால கட்டத்தில் 73,253 கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தியிருக்கிறது. ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, ஜூலை 2022 க்குள் மொத்த குப்பைகளையும் அப்புறப்படுத்த தவறிவிட்டதாகக்கூறி, அவர்கள் அப்புறப்படுத்திய அளவுக்கு சுமார் 4 கோடி ரூபாய்களை மட்டும் கொடுத்துவிட்டு கணக்கை முடித்துக் கொண்டது, தஞ்சாவூர் மாநகராட்சி.
இதனையடுத்து, சாஃப்ட் பெர்ரி என்ற மற்றொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டது. இந்த நிறுவனம், 03.08.2022 முதல் 21.05.2023 வரையிலான காலகட்டத்தில் மொத்தக் குப்பைகளையும் அள்ளியதாகக் கூறி, மேற்படி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட எஞ்சிய தொகை 10.06 கோடி ரூபாயையும் சாஃப்ட் பெர்ரி நிறுவனத்துக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறது, தஞ்சை மாநகராட்சி. ஆனால், கள நிலைமையோ வெறுமனே 5000 கியூபிக் மீட்டர் அளவுக்குத்தான் குப்பைகள் அள்ளப்பட்டிருக்கின்றன.
எம்.எஸ்.ஜி. இன்ஃப்ரா நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி, 8 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு 73,253 கியூபிக் மீட்டர் அளவுள்ள குப்பைகளை தரம்பிரித்திருந்த நிலையில், வெறுமனே 8328 யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி, மேற்படி 8 பொக்லைன் இயந்திரங்களும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் 1,56,747 கியூபிக் குப்பைகளை தரம்பிரித்து அப்புறப்படுத்திவிட்டதாக கணக்கை முடித்திருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
இந்த விவரங்களையெல்லாம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மாபெரும் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், தஞ்சாவூரை சேர்ந்த போர்வாள் என்.கோவிந்தராஜன்.

”இந்த மோசடி விவகாரம் குறித்து 05.05.2024 அன்றே, மாநகராட்சி அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, ஊழல் தடுப்புப்பிரிவு என எல்லாவற்றுக்கும் புகார் அனுப்பிவிட்டேன். 16.07.2024 இல் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதன்படி, 12.08.2024 தேதியில் நான் முன் வைத்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும், வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். எனது வழக்கை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளாமல் கிடப்பில் போட்டார்கள். தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்தேன். இறுதியாக, என் வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இலஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில், இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறோம் என்பதாக அவர்கள் தெரிவித்த பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.
17.04.2025 அன்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுநாள் வரையில் இலஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த சரவணக்குமார், தஞ்சாவூருக்கு பல நல்லதுகளை செய்திருக்கிறார். மறுக்கவில்லை. ஆனால், இந்த விசயத்தில் பத்து கோடி அளவுக்கு பெரும் ஊழலை செய்திருக்கிறார். இதற்கு பின்னணியில் அவருக்கு ஆதரவாக யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்க இருக்கிறேன்.” என்பதாக தெரிவிக்கிறார், போர்வாள் என்.கோவிந்தராஜன்.
05.05.2024 இலேயே துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்துக்கு புகாராக சென்ற இந்த விவகாரத்தில், விசாரணை நடத்தி 12.08.2024 இலேயே குற்றமிழைத்ததற்காக முகாந்திரம் இருப்பதாக இலஞ்ச ஒழிப்பு போலீசாரே அறிக்கை தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்ததையடுத்தே, தற்போது பணியிடை நீக்க தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் சரவணக்குமார். இந்த விவகாரம் சரவணக்குமார் என்ற தனிநபரோடு முடிந்துவிட்ட விவகாரமல்ல. இந்த கூட்டுக்கொள்ளைக்கு துணைபோன அதிகாரிகள் அத்தனை பேரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
முழுமையான வீடியோவை காண
குப்பையில் பத்து கோடி ! தில்லாலங்கடி அதிகாரி !
— அங்குசம் புலனாய்வுக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.