குப்பையில் ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனம் ! சுவாசக் கோளாறு பாதிப்பில் பொதுமக்கள்!
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன அனைத்து வார்டுகளிலும் அவுட்சோர்சிங் செய்யும் முறையில் திருச்சியில் உள்ள விஷன் கேர் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் தற்காலிக தூய்மை பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களிடமிருந்து வீடுகள் தோறும் வாங்கப்படும் குப்பைகளை தினந்தோறும் மலையப்பன் சாலை பெரியார் நகர்,சொரத்தூர் ரோடு ஆகிய இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும்குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரிக்காமல்,பெரும்பாலான குப்பைகளை தனியார் டெண்டர் நிறுவனம் , அதன் அருகில் உள்ள இடத்திலேயே எரிப்பதால் , குறிப்பாக மலையப்பன் சாலையில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தின் அருகில் எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதால், பொதுமக்களுக்கும் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாசுபட்ட காற்றின் மூலம் சுவாசக் கோளாறு மற்றும் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே போல்சொரத்தூர் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நுணுறம் செயலாக்க மையத்திற்கு அருகிலும் குப்பைகளை எரித்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தை திருச்சியில் உள்ள விஷன் கேர் நிறுவனம் கடந்த சில வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. தினம்தோறும் பொதுமக்களிடம் இருந்து குப்பைகள் சுமார் 13.800 டன் என்ற அளவில் சேகரிக்கப்படுகின்றன அதனை துறையூரில் உள்ள பெரியார் நகர் மலையப்பன் சாலை சொரத்தூர் ரோடு ஆகிய இடங்களில் உள்ள நுண்ணுயிர் உரமாக்கும் நிலையங்களுக்கு கொண்டு சென்று மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகளை உரமாக்கியும் பாலித்தீன் பைகள் , காகித பேப்பர் உள்ளிட்டவற்றை அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு மாதத்திற்கு இரண்டு முறை கொண்டு செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில் காய்கறி கழிவுகளை குப்பைகளாக அரைத்து அதனை காய வைத்து நுண்ணுயிர் உரமாக மாற்றி துறையூர் தாலுகாவில் உள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறும் தனியார் நிறுவனம் அதனை கடைப்பிடிக்காமல் புறவழிச் சாலை பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தின் எல்லைப் பகுதிகளிலும் நகராட்சி வண்டிகளை கொண்டு யாருக்கும் பயனளிக்காதவாறு கொட்டி விட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் குப்பைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொட்டி அதனை தீ வைத்து எரித்து விடுவதாகவும் இதன் காரணமாக குறிப்பாக மலையப்பன் சாலையில் உள்ள நுண்ணுயிர் உரமாக்கும் இடத்தில், குறிப்பாக அரசாங்க இடத்தில் அதிகப்படியான குப்பைகளை எரிப்பது தொடர்ந்து நடப்பதாகவும் இதன் காரணமாக அருகிலுள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் குப்பையில் இருந்து எழக்கூடிய புகையினை சுவாசிப்பதால் தொடர்ந்து நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா,சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய் தொற்றுகளுக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் காலதாமதமாக குப்பைகளை வாங்குகின்றனர் எனவும், அவ்வாறு பெறப்படும் குப்பைகள் எடை குறையும்போது, குறைந்த எடைக்கு நிகராக அவுட்சோர் செய்யும் முறையில் பணி செய்யும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை கொண்டு எடை மெஷினில் நிற்கச் செய்து தினசரி குறிப்பிட்ட டன்னுக்கு நிகராக குப்பைகள் வந்ததாக போலியாக ரசீது எழுதி, அதை வைத்து துறையூர் நகராட்சி நிர்வாகத்திடம் கணக்கு காண்பித்து லட்சக்கணக்கில் தனியார் நிறுவனம் ஊழல் செய்து வருவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் அது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனம் குப்பைகளை எரித்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு நோய்த்தொற்றினை ஏற்படுத்துவதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, துறையூர் நகராட்சி ஆணையர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு,உண்மை தன்மையை அறியும் பட்சத்தில் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்திடவும், தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










Comments are closed, but trackbacks and pingbacks are open.