பட்டியல் இன மக்கள் மீது தொடர் தாக்குதல்: தமிழக அரசு மீது சிபிஎம் குற்றச்சாட்டு
பட்டியல் இன மக்கள் மீது
தொடர் தாக்குதல்:
தமிழக அரசு மீது சிபிஎம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நான்குநேரி, வேங்கைவயல்,,கோவில்பட்டி, அணைக்கரை என தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்ந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இச்சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பாலகிருஷ்ணன், ‘எனவே தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழாது’ என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழகத்துக்கு விரோதமாக செயல்படும் பாஜக எது செய்தாலும் மாற்றம் இருக்காது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில் மத்திய அரசின் சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஏழு ஊழல்கள் அம்பலப்பட்டுள்ளன. இந்த ஒரு அறிக்கையில் மட்டுமே பாஜக ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது வெளிவந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை?
இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஊழலுக்கு காரணமான நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த ஊழலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. நிறைவு நாளான 7-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது என்றார் கே.பாலகிருஷ்ணன்.
அப்போது மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.